திருவண்ணாமலையில் பெற்றோரால் கைவிடப்பட்ட ஆண் குழந்தைக்கு ‘அருணாச்சலம்’ என மாவட்ட ஆட்சித் தலைவர் முருகேஷ் பெயரிட்டார்.
திருவண்ணாமலை அரசு மருத்துவக் கல்லூரி மற்றும் மருத்துவமனையில் பிறந்து பெற்றோரால் கைவிடப்பட்ட ஆண் குழந்தைக்கு ‘அருணாச்சலம்’ என பெயரிட்டு அரசு தொட்டில் குழந்தை திட்டத்தின் கீழ் குழந்தை நலக் குழுமத்திடம் மாவட்ட ஆட்சித் தலைவர் பா.முருகேஷ் ஒப்படைத்தார்.
பெண் சிசு கொலைகளை தடுத்திட கொண்டு வரப்பட்ட தொட்டில் குழந்தைகள் திட்டம்¸ பெண் குழந்தைகள் விகிதம் குறைந்துள்ள திருவண்ணாமலை¸ விழப்புரம்¸ கடலூர் உள்பட உள்பட 5 மாவட்டங்களுக்கு விரிவுப்படுத்தப்பட்டது.
திருவண்ணாமலை மாவட்டத்தில் கடந்த 10 ஆண்டுகளாக 19 ஆயிரத்திற்கும் மேற்பட்ட கருக்கலைப்பு நிகழ்ந்துள்ளது. கருகலைப்பு மூலமாக பெண் சிசு கொலை நடந்துள்ளதும்¸ இதன் காரணமாக ஆயிரத்துக்கு ஆயிரம் இருக்க வேண்டிய பெண்கள் நிலை 730 ஆக குறைந்திருப்பதும் தெரிய வந்தது.
திருவண்ணாமலை அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் தொட்டில் குழந்தை திட்டம் செயல்பட்டு வருகிறது. இந்த மருத்துவமனையில் பிறந்து வளர்க்க முடியாத சூழலில் பெண் குழந்தைகள் மட்டுமன்றி ஆண் குழந்தைகளும் இத் தொட்டிலில் பெற்றோர்களால் சேர்க்கப்பட்டு வருகிறது.
திருவண்ணாமலை அரசு மருத்துவக் கல்லூரி மற்றும் மருத்துவமனையில் கடந்த 09.07.2021 அன்று பிறந்த ஆண் குழந்தை¸ ஆதரவற்ற நிலையில் குழந்தையின் பெற்றோர் 11.07.2021 அன்று மருத்துவமனையில் விட்டு விட்டுச் சென்றுவிட்டனர்.
பெற்றோரால் கைவிடப்பட்டு ஆதரவற்ற நிலையில் இருந்த ஆண் குழந்தை¸ மாவட்ட சமூக நல அலுவலக கட்டுப்பாட்டின் கீழ் திருவண்ணாமலை அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் செயல்பட்டு வரும் அரசு தொட்டில் குழந்தை திட்டத்தின் வரவேற்பு மையத்தில் சேர்க்கப்பட்டு நல்ல முறையில் பராமரிக்கப்பட்டு வந்தது.
திருவண்ணாமலை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் இன்று (22.07.2021) சமூக நலத் துறையின் கட்டுப்பாட்டின் கீழ் அரசு தொட்டில் குழந்தை திட்டத்தில் சேர்க்கப்பட்ட மேற்கண்ட ஆண் குழந்தைக்கு ‘அருணாச்சலம்’ என மாவட்ட ஆட்சித் தலைவர் பா. முருகேஷ் பெயர் சூட்டினார்.
பிறகு அக்குழந்தையை திருவண்ணாமலையில் செயல்பட்டு வரும் குழந்தை நலக் குழுமத்திடம் ஒப்படைத்தார். அப்போது மாவட்ட சமூக நல அலுவலர் பா. கந்தன் மற்றும் துறை அலுவலர்கள் உடன் இருந்தனர்.