ஜவ்வாதுமலையில் நிலத்தில் கஞ்சா பயிரிட்ட பெண் கைது செய்யப்பட்டார். வழிப்பறி கொள்ளையில் ஈடுபட்ட திருவண்ணாமலை வாலிபர் குண்டர் சட்டத்தில் அடைக்கப்பட்டார்.
திருவண்ணாமலை மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அ.பவன் குமார் ரெட்டிக்கு கிடைத்த ரகசிய தகவலின்படி¸ போளுர் உட்கோட்ட துணை காவல் கண்காணிப்பாளர் ஆ. அறிவழகன் மேற்பார்வையில்¸ கலசபாக்கம் வட்ட காவல் ஆய்வாளர் ஜனார்த்தனன் தலைமையில்¸ தனிப்படை உதவி ஆய்வாளர் ஆ.சத்தியாநந்தன் மற்றும் தனிப்படை காவலர்கள் ஜமுனாமரத்தூர் காவல் நிலைய எல்லைக்குட்பட்ட நம்மியம்பட்டு கிராமத்தில் திடீர் சோதனை நடத்தினர்.
நிலத்தில் வீடு கட்டி குடியிருந்து வந்த குப்பைய்யா என்பவரது வீட்டில் நடத்தப்பட்ட சோதனையில் அங்கு பதுக்கி வைக்கப்பட்டிருந்த 1கிலோ கஞ்சா கண்டுபிடிக்கப்பட்டு பறிமுதல் செய்யப்பட்டது. வீட்டில் இருந்த குப்பைய்யா மனைவி சின்னபுள்ள (வயது.55) என்பவரை விசாரித்தனர். அப்போது அவர் தனது நிலத்தில் கஞ்சா பயிரிட்டிருந்த தகவல் தெரிய வந்தது. இதையடுத்து நிலத்தில் பயிரிடப்பட்டிருந்த 275 கஞ்சா செடிகளையும் போலீசார் பறிமுதல் செய்தனர்.
மேலும் சின்னவீரப்பட்டு கிராமத்தில் போலீசார் நடத்திய சோதனையில் வெள்ளையன் மகன் ராமச்சந்திரன் (30) என்பவர் வீட்டில் கஞ்சா பாக்கெட்டுகள் கைப்பற்றப்பட்டது. அவரிடமிருந்து தொத்தம் 200 கிராம் கஞ்சா பறிமுதல் செய்யப்பட்டது.
இந்த சம்பவங்கள் குறித்து ஜமுனாமரத்தூர் போலீசார் வழக்கு பதிவு செய்து சின்னபுள்ள¸ ராமச்சந்திரன் ஆகிய 2 பேரை கைது செய்து நீதிமன்ற உத்தரவின் பேரில் ஜெயிலில் அடைத்தனர்.
கத்தியை காட்டி வழிப்பறி- 2 பேர் குண்டர் சட்டத்தில் கைது
திருவண்ணாமலைக்கு காய்கறி வாங்க வந்த தேவனூர் கிராமத்தைச் சேர்ந்த வியாபாரி காசிவேல் என்பவரை தென்மாத்தூர் கூட்ரோடு அருகே¸ கத்தியை காட்டி மிரட்டி செல்போன் மற்றும் ரூ.5200 ஆகியவை வழிப்பறி செய்யப்பட்டது. இதே போல் திருக்கோவிலூர் வட்டம் சாங்கியம் கிராமத்தைச் சேர்ந்த லோகநாதன் மீன் வாங்குவதற்காக திருவண்ணாமலை தாமரை குளம் பகுதிக்கு வந்து கொண்டிருந்த போது அவரை மடக்கி கத்தியை காட்டி மிரட்டி செல்போன் மற்றும் ரூ.5000 கொள்ளையடிக்கப்பட்டது.
இதையடுத்து வெறையூர் போலீஸ் இன்ஸ்பெக்டர் அழகுராணி தலைமையில் தனிப்படையினர்¸ வழிப்பறியில் ஈடுபட்டதாக செங்கம் வட்டம்¸ கண்ணக்குருக்கை கிராமம்¸ இந்திரா நகரை சேர்ந்த சந்தோஷ்குமார் (22)¸ திருவண்ணாமலை எல்.ஜி.ஜி.எஸ் நகரைச் சேர்ந்த எழிலரசனின் மகன் அருணாசலம் (20) அகிய 2 பேரையும் கைது செய்தனர். 2 பேரும் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டு ஜெயிலில் அடைக்கப்பட்டனர்.
இவர்கள் தொடர்ந்து சட்டவிரோத செயலில் ஈடுபடுவதை தடுப்பதற்காக குண்டர் தடுப்பு காவல் சட்டத்தில் அடைக்க¸ மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அ.பவன் குமார் ரெட்டி¸ மாவட்ட ஆட்சியருக்கு பரிந்துரை செய்தார். அதன்படி மாவட்ட ஆட்சியர் பா. முருகேஷ்¸ சந்தோஷ்குமார் மற்றும் அருணாசலத்தை குண்டர் தடுப்பு காவல் சட்டத்தில் அடைக்க உத்தரவிட்டார். இதையடுத்து அவர்கள் வேலூர் மத்திய சிறையில் அடைக்கப்பட்டனர்.