திருவண்ணாமலை அருகே பார்வையற்ற லம்பாடி இனத்தவரின் நிலத்தை அபகரிக்க முயற்சிப்பதாக அதிமுக நிர்வாகி மீது கலெக்டர் அலுவலகத்தில் புகார் அளிக்கப்பட்டுள்ளது.
திருவண்ணாமலை மாவட்டம் செங்கம் வட்டத்தில் ராஜஸ்தான் மாநிலத்திலிருந்து வந்து குடியேறிய லம்பாடி இன மக்கள் வசித்து வருகின்றனர். அரட்டவாடி பகுதியில் பத்தியா தண்டா¸ குண்டன் தண்டா¸ மல்லிகாபுரம் தண்டா போன்ற இடங்களில் 300க்கும் மேற்பட்ட லம்பாடி இன மக்கள் விவசாயம் மற்றும் கூலி வேலை செய்து வாழ்ந்து வருகின்றனர்.
இதில் மல்லிகாபுரம் தண்டா பகுதியைச் சேர்ந்த கிருஷ்ணன் மனைவி செல்வி என்பவர் தனது மாற்றுத்திறனாளி மகன்¸ மருமகள்¸ பேரன்¸ பேத்திகளோடு திருவண்ணாமலை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்திற்கு தங்கள் இனத்துக்கே உரிய பாரம்பரிய உடை அணிந்து வந்து கோரிக்கை மனு அளித்தார்.
அந்த மனுவில் அவர் கூறியிருப்பதாவது
எனக்கு 2 மகன்கள் உள்ளனர். அவர்களுக்கு திருமணமாகி கூட்டுக் குடும்பமாக வசித்து வருகிறோம். இறந்து விட்ட எனது கணவருக்கு கண் பார்வை தெரியாது. எனது மூத்த மகன் சிவாவும் கண் பார்வை குறைபாடு உள்ள மாற்றுத்திறனாளி ஆவர். நாங்கள் அனுபவித்து வரும் புறம்போக்கு நிலம் ஒரு ஏக்கர் எங்களுக்கு அரசால் வழங்கப்பட்டதாகும். இதில் 40 ஆண்டுகளுக்கு மேலாக பயிர் செய்து வருகிறோம். இந்த வீடு கட்டியும்¸ கிணறு வெட்டியும் அனுபவித்து வருகிறோம்
இந்த நிலையில் எனது கணவர்¸ மகன் சிவாவிற்கு திருமணம் செய்து வைத்த போது அந்த ஒரு ஏக்கரில் பாதியை மருமகள் பெயரில் தான செட்டில்மெண்ட் எழுதி வைத்தார். அந்த 50 சென்ட் இடத்தின் வரைபடம் மற்றும் சிட்டாவில் பக்கத்து நிலத்துக்காரரான குமார் என்பவரது பெயரை தவறுதலாக சேர்க்கப்பட்டுள்ளது. குமார்¸ அதிமுகவில் ஜெயலலிதா பேரவை நகர செயலாளராக உள்ளார்.
இதனால் அவர் எங்கள் நிலத்தை அபகரிக்க முயற்சி செய்து வருகிறார். அடியாட்களை அழைத்து வந்து மிரட்டுகிறார். நிலத்தை கொடுக்கவில்லை என்றால் குடும்பத்துடன் தீர்த்து கட்டி விடுவோம் என மிரட்டல் விடுக்கிறார். எனவே இதுகுறித்து உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என கேட்டுக் கொள்கிறோம்.
இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.
இந்த மனு மீது உரிய விசாரணை நடத்துமாறு சம்மந்தப்பட்ட அதிகாரிகளுக்கு மாவட்ட ஆட்சித் தலைவர் பா.முருகேஷ் உத்தரவிட்டுள்ளார்.