திருவண்ணாமலையில் தடுப்பூசி போடாத தொழிலாளர்களை கொண்டு இயங்கிய பேக்கரி பொருட்களை தயாரிக்கும் கூடத்திற்கு அதிகாரிகள் சீல் வைத்தனர்.
ஆன்மீக நகரான திருவண்ணாமலைக்கு அண்ணாமலையார் கோவிலில் தரிசனம் செய்யவும் கிரிவலம் செல்லவும் தினசரி ஆயிரக்கணக்கான பக்தர்கள் வந்து செல்கின்றனர். கோவிட் 19 தொற்றை குறைக்க வேண்டும் என்ற நோக்கத்தில் விதிக்கப்பட்ட தடைகள் காரணமாக கோவில்கள் திறக்கப்படாமல் இருந்தது. கொரோனா தொற்று குறைந்து வரும் நிலையில் கோவில்கள் திறக்கப்பட்டு பக்தர்கள் தரிசனத்துக்கு அனுமதிக்கப்பட்டு வருகின்றனர்.
அண்ணாமலையார் கோவில் திறக்கப்பட்டதால் வெளியூர் மற்றும் பிற மாவட்டங்களிலிருந்து பக்தர்கள் அதிகளவில் திருவண்ணாமலைக்கு வரத் துவங்கியுள்ளனர். இந்நிலையில் தமிழக அரசின் அறிவுரைப்படி திருவண்ணாமலை நகரில் வசிப்பவர்களுக்கு கோவிட் 19 தொற்று ஏற்படாமல் இருக்க நகரில் வசிக்கும் 18 வயதிற்கும் மேற்பட்ட அனைவருக்கும் தடுப்பூசி போட வேண்டும் என்ற இலக்கு நிர்ணயம் செய்யப்பட்டு மாவட்ட நிர்வாகத்தால் பல்வேறு நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருகிறது.
திருவண்ணாமலை நகரிலுள்ள ஒவ்வொரு வார்டுக்கும் ஒரு முகாம் வீதம் 39 சிறப்பு கோவிட் தடுப்பூசி முகாம்கள் மாவட்ட நிர்வாகத்தால் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. முகாம் தினமும் காலை 9 மணிக்கு துவங்கி மாலை 5 மணி வரை வரை நடைபெற்று வருகிறது.
திருவண்ணாமலை நகரில் 1 லட்சத்து 20 ஆயிரம் பேரில் 32 ஆயிரம் பேர் மட்டுமே தடுப்பூசி போட்டுக்கொண்டதாகவும்¸ தேர்தலின்போது காலை 7 மணிக்கே வாக்குச்சாவடிகளுக்கு சென்று மாலை வரை ஒரு லட்சத்திற்கும் மேற்பட்டோர் ஆர்வமுடன் தங்களது வாக்குகளை செலுத்தியது போல பொதுமக்கள் ஆர்வமுடன் தடுப்பூசி செலுத்திக் கொள்ள வேண்டும் என கலெக்டர் பா.முருகேஷ் வேண்டுகோள் விடுத்தார்.
இந்நிலையில் வணிக நிறுவனங்களில் பணிபுரியும் தொழிலாளர்களுக்கு தடுப்பூசி போட அறிவுருத்தப்பட்டுள்ளது. உணவு பாதுகாப்பு துறை சார்பில் திருவண்ணாமலை மாவட்டத்தில் உள்ள 1100 கடைகளில் பணிபுரிபவர்கள்¸ தொழிலாளர்கள்¸ உரிமையாளர்கள் கட்டாயம் தடுப்பூசி போட்டுக் கொள்ள வேண்டும் என நோட்டீஸ் அனுப்பப்பட்டது. 1 வாரத்திற்கு முன்பே இந்த நோட்டீஸ் அனுப்பப்பட்டது.
இதையடுத்து திருவண்ணாமலையில் உள்ள வணிக நிறுவனங்களில் உணவு பாதுகாப்புத் துறை நியமன அலுவலர் ராமகிருஷ்ணன் தலைமையில் அலுவலர்கள் இன்று (29-07-2021) மாலை திடீர் சோதனை நடத்தினர். அய்யங்குளத் தெருவில் பேக்கரி பொருட்களை தயாரிக்கும் கூடத்தில் நடத்தப்பட்ட சோதனையில் கொரோனா தடுப்பூசி போடாமல் தொழிலாளர்கள் பணிபுரிந்தது கண்டுபிடிக்கப்பட்டது.
இதனால் அந்த கடைக்கு அதிகாரிகள் சீல் வைத்தனர். தரம் குறைவு¸ சுகாதாரமின்மை போன்ற காரணங்களுக்காக கடைகளுக்கு சீல் வைக்கப்பட்டு வந்த நிலையில் கொரோனா தடுப்பூசி போடாததற்கு கடைக்கு சீல் வைக்கப்பட்ட சம்பவம் திருவண்ணாமலையில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.