திருவண்ணாமலையில் திருமணமாகாத பெண்ணுக்கு பிறந்து தொட்டில் குழந்தை திட்டத்தில் சேர்க்கப்பட்ட குழந்தைக்கு லட்சுமி என கலெக்டர் பெயரிட்டார்.
குழந்தை பாலின விகிதம் குறைந்த மாவட்டங்களில் திருவண்ணாமலையும் ஒன்றாகும். பெண் குழந்தைகள் விகிதம் குறைந்த தருமபுரி¸ திருவண்ணாமலை உள்ளிட்ட மாவட்டங்களில் பெண் குழந்தை கொலையை தடுத்திட பல்வேறு நடவடிக்கைகள் எடுக்கப்பட்டாலும் கருவிலேயே குழந்தைகளை அழிப்பது தொடர்கதையாகி உள்ளது.
இதனால் ஆயிரமாக இருக்க வேண்டிய பெண் குழந்தைகளின் சதவீதம் 730 ஆக குறைந்தது. கருவிலேயே பெண் குழந்தையை கண்டறிந்து கருக்கலைப்பு செய்வதும்¸ இதற்கு சில ஸ்கேன் சென்டர்கள் உறுதுணையாக இருப்பதும் தெரியவந்தது.
இதைத் தொடர்ந்து 2018ம் ஆண்டு திருவண்ணாமலையில் ஸ்கேன் சென்டர் நடத்தி கருக்கலைப்பு செய்த பெண் டாக்டர் கைது செய்யப்பட்ட சம்பவமும்¸ 3 ஸ்கேன் சென்டருக்கு சீல் வைக்கப்பட்ட சம்பவமும் பரபரப்பை உண்டாக்கின. இதே போல் 2019ம் ஆண்டு திருவண்ணாமலை ஈசான்யம் அருகில் மருந்து கடையில் கல்லூரி மாணவிகளுக்கு கருக்கலைப்பு செய்த போலி டாக்டர் தம்பதியினர் போலீசாரிடம் பிடிபட்டனர்.
கருக்கலைப்பு செய்ய முடியாத நிலையில் அந்த குழந்தைகளை பெற்றெடுத்து குப்பைத் தொட்டியிலும்¸ சாக்கடைகளிலும் வீசி விட்டு செல்லும் நிலை இன்றும் தொடர்ந்து கொண்டுதான் உள்ளது. இதை தடுக்க ஜெயலலிதா முதலமைச்சராக இருந்த போது கொண்டு வரப்பட்ட தொட்டில் குழந்தை திட்டம் திருவண்ணாமலை அரசு மருத்துவகல்லூரி மருத்துவமனையில் செயல்பட்டு வருகிறது. குழந்தையை வளர்க்க முடியாத பெற்றோர்கள் அந்த குழந்தைகளை அரசு தொட்டில் குழந்தை திட்டத்தில் சேர்த்து வருகின்றனர். இதே போல் சட்டவிரோதமாக பிறந்த குழந்தைகளும் அத்திட்டத்தில் சேர்க்கப்படுகிறது.
திருவண்ணாமலை அடுத்த துரிஞ்சாபுரம் வள்ளுவர் தெருவைச் சேர்ந்த திருமணமாகாத பெண்ணுக்கு 23.07.2021 அன்று பெண் குழந்தை ஒன்று பிறந்தது. அக்குழந்தையை வளர்க்க இயலாத சூழ்நிலையால் தொட்டில் குழந்தை திட்டத்தில் ஒப்படைக்க அவரும் அவரது பெற்றோரும் முடிவு செய்தனர்.
இதைத் தொடர்ந்து அந்த பெண் குழந்தை சமூகநலத்துறை கட்டுப்பாட்டின் கீழ் திருவண்ணாமலை அரசு மருத்துவக் கல்லூரி மற்றும் மருத்துவமனையில் செயல்பட்டு வரும் தொட்டில் குழந்தை திட்ட வரவேற்பு மையத்தில் சேர்க்கப்பட்டது.
அரசு தொட்டில் குழந்தை திட்டத்தில் சேர்க்கப்பட்ட அந்த பெண் குழந்தைக்கு மாவட்ட ஆட்சித் தலைவர் பா. முருகேஷ் “லட்சுமி” எனப் பெயர் சூட்டி¸ திருவண்ணாமலையில் செயல்பட்டு வரும் குழந்தை நலக் குழுமத்திடம் ஒப்படைத்தார்.
அப்போது மாவட்ட ஊரக வளர்ச்சி முகமை திட்ட இயக்குநரும் கூடுதல் ஆட்சியருமான மு.பிரதாப், மாவட்ட சமூக நல அலுவலர் பா. கந்தன் மற்றும் துறை அலுவலர்கள் உடன் இருந்தனர்.