
இஸ்லாமியர்கள் மத்தியில் உரை
திருவண்ணாமலையில் பள்ளி வாசலுக்கு சென்ற கலெக்டர்¸ தொழுகைக்கு வந்த இஸ்லாமியர்களிடம் கொரோனா தடுப்பூசி குறித்த விழிப்புணர்வை ஏற்படுத்தினார்.

தமிழ்நாட்டில் கோவிட்-19 நோய் தொற்று அரசு எடுத்த பல்வேறு நடவடிக்கைகளின் காரணமாக படிப்படியாக குறைந்து வருகிறது. தமிழ்நாடு அரசின் மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத் துறை மூலம் கோவிட்-19 நோய் தொற்றிலிருந்து பொதுமக்களை பாதுகாக்கும் வகையில் 18 வயதிற்கு மேற்பட்டவர்களுக்கு கோவிட்-19 தடுப்பூசி செலுத்தும் பணிகள் அரசு மருத்துவமனைகள்¸ ஆரம்ப சுகாதார நிலையங்கள் மற்றும் சிறப்பு முகாம்கள் மூலம் தினமும் நடைபெற்று வருகிறது.
திருவண்ணாமலை நகராட்சிக்கு உட்பட்ட 39 வார்டுகளிலும் 18 வயதிற்கு மேற்பட்டவர்களுக்கு கோவிட்-19 தடுப்பூசி செலுத்தும் சிறப்பு முகாம்கள் நடைபெற்று வருகிறது. நகராட்சி பெண்கள் மேல் நிலைப்பள்ளியில் கோவிட் – 19 சிறப்பு முகாமில் 18 வயதிற்கு மேற்பட்டவர்களுக்கு இரண்டாவது தவணை கொரோனா தடுப்பூசி செலுத்தப்பட்டு வருவதை மாவட்ட ஆட்சித் தலைவர் பா. முருகேஷ் இன்று (30-7-2021) காலை பார்வையிட்டு ஆய்வு செய்தார்.
இன்று நடைபெற்ற முகாமில் 18 வயதிற்கு மேற்பட்டவர்களில் 81 ஆண்களும்¸ 36 பெண்களும், 45 வயதிற்கு மேற்பட்டவர்களில் 36 ஆண்களும்¸ 23 பெண்களும் தடுப்பூசி செலுத்தி கொண்டனர்.
![]() |
ரேஷன் கடையில் ஆய்வு |
இதையடுத்து மாவட்ட ஆட்சித் தலைவர் முருகேஷ் பல்வேறு இடங்களுக்கு முன்அறிவிப்பின்றி சென்று கொரோனா தடுப்பூசி குறித்த விழிப்புணர்வை ஏற்படுத்தினார். தேரடி வீதியில் உள்ள நியாய விலைக் கடைகளில் பொருட்கள் தரமானதாக இருக்கிறதா? என ஆய்வு செய்தார். நகராட்சி பெண்கள் மேல்நிலைப்பள்ளி எதிரில் உள்ள திருப்பதி ஜவுளி கடைக்கு சென்று தடுப்பூசி செலுத்தி கொள்ளுவதன் அவசியம் குறித்தும்¸ முக கவசம் அணிவதன் அவசியம் குறித்தும் விழிப்புணர்வை ஏற்படுத்தி தடுப்பூசி போடாத வாடிக்கையாளர்களை தடுப்பூசி செலுத்தி கொள்ளுமாறு அறிவுறுத்தினார்.
பாவாஜி நகர் 2 வது தெரு¸ கோபால் தெரு¸ தர்கா சந்து ஆகிய இடங்களில் வீடு வீடாக சென்று தடுப்பூசி செலுத்தும் பணி நடைபெற்று வருவதை மாவட்ட ஆட்சித் தலைவர் நேரில் சென்று ஆய்வு செய்து¸ தடுப்பூசி செலுத்தி கொள்ளாத பொதுமக்களிடம் தடுப்பூசி செலுத்தி கொள்ளுவதன் அவசியம் குறித்து விழிப்புணர்வை ஏற்படுத்தினார்.
அப்போது அப்பகுதியில் உள்ள மக்கா மஸ்ஜித் & மதரஸா பள்ளிவாசலில் தொழுகைக்கு இஸ்லாமியர்கள் வந்திருப்பதை அறிந்து அங்கு சென்றார். கலெக்டர் வருவதை பார்த்து ஆச்சரியமடைந்த நிர்வாகிகள் அவரை வரவேற்றனர். பிறகு அங்கு தொழுகை நடத்திய இஸ்லாமியர்கள் மத்தியில் பேசிய மாவட்ட ஆட்சித் தலைவர் முருகேஷ்¸ தவறாமல் தாங்களும் தங்கள் குடும்பத்தை சார்ந்தவர்களும் தடுப்பூசி செலுத்தி கொள்ள வேண்டும் என்று அவர்களை கேட்டுகொண்டார். அவர் பேசியதை ஒலிபெருக்கி வழியாக அப்பகுதியில் வீட்டில் இருந்தவர்களும் கேட்டறிந்தனர்.
இதையடுத்து விருப்பம் தெரிவித்த இஸ்லாமியர்களுக்கு மக்கா மஸ்ஜித் வளாகத்தில் கலெக்டர் முன்னிலையில் தடுப்பூசி போடப்பட்டது.
மாவட்ட ஆட்சித் தலைவருடன் திருவண்ணாமலை மாவட்ட சுகாதார மாவட்ட துணை இயக்குநர் அஜிதா¸ திருவண்ணாமலை நகராட்சி ஆணையாளர் ஆர். சந்திரா¸ நகர் நல அலுவலர் மோகன், சுகாதார ஆய்வாளர்கள் ஆல்பர்ட் ராஜா¸ வினோத்கண்ணா ஆகியோர் சென்றிருந்தனர்.