திருவண்ணாமலை அடுத்த காட்டாம்பூண்டியில் நடந்த கோயில் கும்பாபிஷேக விழாவில் அமைச்சர் எ.வ.வேலு கலந்து கொண்டு கல்வெட்டை திறந்து வைத்து விட்டு சென்றார்.
திருவண்ணாமலை வட்டம் காட்டாம்பூண்டி கிராமத்தில் சில வருடங்களுக்கு முன்பு ஒரு வயல்வெளியில் மண்ணுக்குள் புதைந்த நிலையில் சிவலிங்கம் ஒன்று கண்டெடுக்கப்பட்டது. இதே போல் கல்வெட்டும் கண்டுபிடிக்கப்பட்டது. அதில் இக்கோயில் 2 ஆயிரம் ஆண்டுகளுக்கு முற்பட்டது என்றும்¸ மன்னர்கள் கட்டிய இக்கோயிலை ரிஷிகள் வழிபட்டுள்ளதும் தெரியவந்தது. இதையடுத்து சிதிலமடைந்த இக்கோயிலுக்கு ஜம்புலிங்கேஸ்வரர் என பெயரிட்டு பல லட்சம் ரூபாய் செலவில் புனரமைக்கும் பணியை ஊர்மக்கள் மேற்கொண்டனர்.
திருப்பணிகள் முடிவடைந்த நிலையில் இக்கோயிலின் கும்பாபிஷேகம் இன்று காலை நடைபெற்றது. விழாவுக்கு முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் த.வேணுகோபால் தலைமை தாங்கினார். முன்னாள் ஊராட்சி மன்றத் தலைவர் ரா.பாலசுப்பிரமணியன்¸ ரா.விஜயகுமார் என்கிற அசோக்¸ ஏ.ஆனந்தன்¸ வீ.ராஜா¸ ஏ.ராஜேஷ் உள்பட பலர் முன்னிலை வகித்தனர்.
சிறப்பு விருந்தினராக தமிழக பொதுப்பணித்துறை மற்றும் நெடுஞ்சாலை துறை அமைச்சர் எ.வ.வேலு கலந்து கொண்டு கும்பாபிஷேக கல்வெட்டை திறந்து வைத்தார். இதில் முன்னாள் நகரமன்ற தலைவர் இரா.ஸ்ரீதரன்¸ மாநில மருத்துவரணி துணைத் தலைவர் எ.வ.கம்பன்¸ நகர செயலாளர் ப.கார்த்திக்வேல்மாறன்¸முன்னாள் ஒன்றியக் குழுத் தலைவர் கோ.கண்ணன்¸ ஒன்றிய செயலாளர் ரமணன்¸ பா.ம.க மாநில துணைப் பொதுச் செயலாளர் இரா.காளிதாஸ் மற்றும் பலர் கலந்து கொண்டனர்.
கோயில் கும்பாபிஷேகம் அமைச்சர் எ.வ.வேலு தலைமையில் நடைபெறும் என அறிவிக்கப்பட்டிருந்தது. ஆனால் கும்பாபிஷேகம் நடந்த போது எ.வ.வேலு வரவில்லை. அதன்பிறகு வந்த அவர் கோயிலுக்குள் செல்லாமல் கோயில் வளாகத்திலேயே கல்வெட்டை திறந்து வைத்து விட்டு சென்று விட்டார். இதனால் தீபாராதனை தட்டுடன் வந்த கோயில் பூசாரி ஏமாற்றம் அடைந்தார்.
கும்பாபிஷேக நிகழ்ச்சிகள் நேற்று (15ந்தேதி) விக்னேஷ்வர பூஜையுடன் தொடங்கியது. தொடர்ந்து கலச ஸ்தாபனம்¸ பூஜைகள்¸ ஹோமங்கள் நடைபெற்றது. முதல் கால பூஜை¸ இரண்டாவது கால பூஜை முடிந்த இன்று காலை கலசங்கள் புறப்பாடு நடைபெற்றது. காலை 9-45 மணிக்கு யாக சாலையில் பூஜை செய்யப்பட்ட புனித நீர் ஜம்புலிங்கேஸ்வரர் மற்றும் முக்தீஸ்வரி அம்மன் கோயில் கோபுர கலசங்கள் மீது ஊற்றி கும்பாபிஷேகம் நடத்தப்பட்டது.
இதில் சுற்றுப்புற கிராமங்களைச் சேர்ந்த ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர். பிறகு மூலவருக்கு சிறப்பு அபிஷேக ஆராதனைகள் நடைபெற்றன. விழாவில் கலந்து கொண்டவர்களுக்கு அன்னதானமும்¸ கோயில் பிரசாதமும் வழங்கப்பட்டது.