திருவண்ணாமலையில் பார்வதிதேவி தவம் செய்த பச்சையம்மன் கோயிலில் ஆடி வெள்ளியை யொட்டி பக்தர்கள் மொட்டையடித்து¸ பொங்கல் வைத்து நேர்த்தி கடனை செலுத்தினர்.
திருவண்ணாமலை மலையடிவாரத்தில் அமைந்துள்ளது பச்சையம்மன் கோயில். இக்கோயில் 1000 வருடங்கள் பழமையானதாகும். விளையாட்டாக சிவனின் கண்களை பார்வதிதேவி மூட உலகமே இருண்டது. பகலும் இருளானது. உயிர்கள் நடுங்கின. உடனே தனது நெற்றிக்கண்ணை திறந்து உலகத்தை சிவபெருமான் காப்பாற்றினார். இதன் காரணமாக பார்வதிதேவி மீது சிவபெருமான் கடும் கோபம் கொண்டார்.
அவரது கோபத்தை தணிக்க திருவண்ணாமலைக்கு தவமிருக்க பார்வதிதேவி வந்தார். வழியில் கந்தன் அமைத்து தந்த வாழை இலைகளால் ஆன பந்தலில் தங்கியதால் உடல் பச்சை நிறமாகியது. அந்த இடம் இன்றைக்கும் வாழைப்பந்தல் என அழைக்கப்பட்டு வருகிறது. பிறகு திருவண்ணாமலை மலையடிவாரத்தில் பத்மாசன கோலத்தில் பார்வதிதேவி தவமிருந்து சிவனின் கோபத்தை தணித்தார். அந்த இடமே பச்சையம்மன் கோயிலாக உள்ளது.
இங்கு பத்மாசன கோலத்தில் பச்சையம்மன் காட்சியளிக்கிறார். பலருக்கும் குலதெய்வமாக விளங்கி வருகிறார். ஆடி மாதம் முழுவதும் இங்கு பக்தர்கள் பொங்கல் வைத்து¸ மொட்டையடித்து¸ காது குத்தி நேர்த்தி கடனை செலுத்துவர்.
அதன்படி இன்று ஆடி முதல் வெள்ளியை யொட்டி அதிகாலை பச்சையம்மன் ஆலயம் திறக்கப்பட்டது. பிறகு பச்சை அம்மனுக்கு பச்சரிசி மாவு¸ அபிஷேக பொடி¸ கஸ்தூரி மஞ்சள்¸ குங்குமம்¸ விபூதி¸ பால்¸ தயிர்¸ இளநீர்¸ எலுமிச்சைச் சாறு¸ சந்தனம்¸ கதம்பப் பொடி¸ வாசனை திரவியங்கள் கொண்டு விசேஷ அபிஷேகம் செய்யப்பட்டது. அதன்பிறகு பச்சை சேலை உடுத்தி அம்பாள் சிறப்பு அலங்காரத்தில் பச்சையம்மன்¸ பக்தர்களுக்கு காட்சியளித்தார்.
கொரோனா தொற்று பரவல் காரணமாக கோயிலுக்குள் பொங்கல் வைக்க அனுமதி அளிக்கப்படவில்லை. ஆனாலும் கார் மற்றும் வேன்களில் ஏராளமான பக்தர்கள் வருகைதந்து மொட்டையடித்து¸ காதுகுத்தி¸ கோயிலுக்கு முன் பொங்கல் வைத்து நேர்த்திக் கடனை செலுத்தினர். கிடா வெட்டியும் நேர்த்திக் கடனை செலுத்தினர். கோவில் வளாகத்தில் பிரம்மாண்ட வடிவில் உள்ள வாயு முனி¸ விளாடன் முனி¸ கரி முனி¸ வேதமுனி¸ செம்முனி ¸முத்து முனி¸ வீரமுனி ஆகிய காவல் தெய்வங்களுக்கு சிறப்பு வழிபாடு செய்து பக்தர்கள் வழிபட்டார்கள்.