திருவண்ணாமலையில் குடிநீர் பிரச்சனையை தீர்க்கக் கோரி ரோட்டில் கட்டையை வைத்து மறித்து பொதுமக்கள் சாலை மறியலில் ஈடுபட்டதால் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.
திருவண்ணாமலையில் பல இடங்களில் குடிநீர் பிரச்சனை நிலவி வருகிறது. இதை நகராட்சி அதிகாரிகள் கண்டும் காணாமல் இருந்து வருவதாக பொதுமக்கள் குற்றம் சாட்டி வருகின்றனர்.
திருவண்ணாமலை நகருக்கு சாத்தனூர் அணை நீரினை கொண்டு குடிநீர் வழங்கப்பட்டு வருகிறது. 2013ம் ஆண்டு ரூ.36கோடியே 66லட்சத்தில் குடிநீர் அபிவிருத்தி திட்டம் தமிழ்நாடு குடிநீர் வடிகால் வாரியத்தால் செயல்படுத்தப்பட்டது. உலகலாப்பாடி 2மற்றும் 3வது திட்டத்தின் கீழ் பெறப்படும் குடிநீர் மட்டுமே திருவண்ணாமலை நகருக்கு கொண்டு வரப்பட்டு கசிவு மற்றும் சுத்திகரிக்கும் போது வீணாகும் நீர் போக 17.50 எம்.எல்.டி குடிநீர் விநியோகிக்கப்படுகிறது. நபர் ஒருவருக்கு 120 எல்.பி.சி.டி வீதம் என ஒருநாள் விட்டு ஒரு நாள் குடிநீர் வழங்கப்படுகிறது.
சிறப்பு நிலை நகராட்சியாக உள்ள திருவண்ணாமலையில் உள்ள 39 வார்டுகளில் 31 ஆயிரத்துக்கும் மேற்பட்ட குடியிருப்புகள் உள்ளன. 1 லட்சத்து 50 ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் வசித்து வருகின்றனர். 20 ஆயிரத்துக்கு மேற்பட்ட குடியிருப்புகளில் குடிநீர் இணைப்பு உள்ளது. தேனிமலை¸ தாமரை நகர்¸ சோமவாரகுளத் தெரு ஆகிய பகுதிகளில் 24 மணி நேரமும் குடிநீர் வரும் தெருவோர குழாய்கள் உள்ளன. சோமவார குள தெருவிலுள்ள நகராட்சி நீரேற்று நிலையத்தில் 3 லட்சம் லிட்டர் கொள்ளவு கொண்ட சுத்திகரிக்கப்பட்ட குடிநீர் தொட்டியும்¸ 1லட்சத்து 50 ஆயிரம் கேலன் குடிநீர் வழங்கும் தொட்டியும் அமைந்துள்ளன. இதே போல் வ.உ.சி நகர்¸ தாமரை நகர்¸ திண்டிவனம் ரோடு – காந்தி நகர் சந்திப்பு¸ கீழ்நாத்தூர் போன்ற இடங்களில் பெரிய குடிநீர் மேநீர்த் தேக்கத் தொட்டிகள் அமைந்து நகர மக்களுக்கு குடிநீரை வழங்கி வருகின்றன.
இந்நிலையில் 1 வருடத்திற்கு மேலாக திருவண்ணாமலை நகரில் பல இடங்களில் சீராக குடிநீர் விநியோகிக்காத நிலை உள்ளது. குடிநீர் பிரச்சனையாலும்¸ குடிநீரில் கழிவு நீர் கலந்து வருவதாலும் பொது மக்கள் பாதிப்படைந்துள்ளனர். திண்டிவனம் ரோட்டில் கட்டப்பட்டு வரும் ரயில்வே மேம்பாலத்தினால் சென்ற வருடம் 7க்கும் மேற்பட்ட வார்டுகளில் குடிநீர் வழங்கும் பணி முற்றிலுமாக தடைபட்டது. இதே போல் சாத்தனூர் அணையில் பெரிய மோட்டார் பழதானதால் திருவண்ணாமலை நகரில் பல இடங்களில் 15 நாட்கள் குடிநீர் வழங்காத நிலையும் ஏற்பட்டது. குடிநீர் பிரச்சனையை தீர்க்க அதிகாரிகள்¸ மக்கள் பிரதிநிதிகள் எந்தவித நடவடிக்கைகளையும் எடுக்கவில்லை. அதன் பிறகு வந்த குடிநீரும் அசுத்தமாக வந்தது.
அப்போதைய அமைச்சர் சேவூர் ராமச்சந்திரன்¸ திருவண்ணாமலையில் குடிநீரேற்று நிலையங்களில் ஆய்வு செய்து அனைத்து பகுதிகளிலும் தங்கு தடையின்றி சுத்தமான குடிநீரை வழங்கும்படி நகராட்சி அதிகாரிகளுக்கு உத்தரவிட்டு சென்றார். ஆனாலும் பலனில்லை. இந்நிலையில் தற்போதும் திருவண்ணாமலை நகரில் பல இடங்களில் குடிநீர் பிரச்சனை நிலவி வருகிறது. 24 மணி நேரமும் கிடைக்கும் குடிநீர் பைப்பிலும் தண்ணீர் வரவில்லை. குடியிருப்புகளுக்கு வழங்கப்படும் குடிநீரும் சுத்தமாக இல்லாமல் கலங்கலாக வருவதாக பொதுமக்கள் குற்றம் சாட்டுகின்றனர். பேகோபுரம் பகுதியில் உள்ள வீடுகளுக்கு பல நாட்களாக குடிநீர் வழங்கப்படவில்லை.
இதையடுத்து பேகோபுர மெயின் ரோட்டில் இன்று காலி குடங்களுடன் திரண்ட குடியிருப்புவாசிகள் சாலைமறியல் போராட்டம் நடத்தினர். அவர்கள் சவுக்கு கட்டைகளை குறுக்காக பிடித்து நின்றதால் அப்பகுதியில் போக்குவரத்து அடியோடு தடைபட்டது. குடிநீர் வழங்க நடவடிக்கை எடுக்கப்படும் என அதிகாரிகள் உறுதியளித்ததை அடுத்து பொதுமக்கள் கலைந்து சென்றனர்.
திருவண்ணாமலை நகரில் நிலவி வரும் குடிநீர் பிரச்சனையை தீர்க்கவும்¸ அனைத்து பகுதிகளிலும் சுத்தமான குடிநீர் வழங்கவும் அமைச்சர் எ.வ.வேலு உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும் என நகர மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.