திருவண்ணாமலை நகரில் ஆய்வு மேற்கொண்ட மாவட்ட ஆட்சித் தலைவர் சைக்கிளில் முக கவசம் அணியாமல் வந்த சிறுமியை நிறுத்தி முககவசம் வழங்கி அனுப்பினார்.
திருவண்ணாமலை வட்டாட்சியர் அலுவலகம் பின்புறம்¸ வேளாண்மை விற்பனை மற்றும் வேளாண் வணிகத் துறை சார்பில் செயல்பட்டு வரும் உழவர் சந்தையில் இன்று (19.07.2021) கோவிட்-19 வழிகாட்டு நடைமுறைகள் கடைபிடிக்கப்படுவது குறித்து மாவட்ட ஆட்சித் தலைவர் பா. முருகேஷ் நேரில் பார்வையிட்டு ஆய்வு மேற்கொண்டார்.
ஆய்வின்போது¸ திருவண்ணாமலை வருவாய் கோட்ட அலுவலர் வெற்றிவேல்¸ நகராட்சி ஆணையாளர் ஆர். சந்திரா¸ வேளாண் அலுவலர் சி. அரகுமார்¸ மாவட்ட ஆட்சியரின் நேர்முக உதவியாளர் (வேளாண்மை) வே. சத்தியமூர்த்தி மற்றும் அரசு அலுவலர்கள் உடன் இருந்தனர்.
திருவண்ணாமலை மாவட்டத்தில் உழவர் சந்தைகள் செயல்படவும்¸ விவசாயிகளின் விளைபொருட்கள் நுகர்வோருக்கு நேரடியாக உரிய விலையில் கிடைத்திடவும்¸ வேளாண் விற்பனை மற்றும் வேளாண் வணிகத் துறை சார்பில் திருவண்ணாமலை¸ தாமரை நகர்¸ செங்கம்¸ போளுர்¸ ஆரணி¸ செய்யாறு¸ வந்தவாசி மற்றும் கீழ்பென்னாத்தூர் ஆகிய 8 இடங்களில் செயல்பட்டு வரும் உழவர் சந்தைகள் இன்று (19.07.2021) முதல் திறக்கப்பட்டுள்ளது.
திருவண்ணாமலை உழவர் சந்தையின் உட்கட்டமைப்பு வளர்ந்து வரும் மக்கள் தொகைக்கு ஏற்ப வசதிகள் மேம்படுத்தி நுகர்வோர் வரவை அதிகரிக்க மேல்நிலை நீர் தேக்கத் தொட்டி¸ சுத்திகரிக்கப்பட்ட குடிநீர்¸ சூரிய மின் சக்தியால் இயங்கும் மின் உலர்த்தி¸ கூடுதல் கடைகள் கட்டுதல்¸ ஆகிய பணிகள் ரூ.52.25 லட்சம் மதிப்பீட்டில் மேற்கொள்வதற்கு¸ அரசுக்கு திட்ட மதிப்பீடு சமர்ப்பிக்கப்பட்டுள்ளது.
இந்நிலையில் திருவண்ணாமலை நகராட்சி¸ வட்டாட்சியர் அலுவலகம் பின்புறம் செயல்பட்டு வரும் உழவர் சந்தையில் மாவட்ட ஆட்சியர் இன்று நேரில் சென்று பார்வையிட்டு ஆய்வு மேற்கொண்டார். ஆய்வின்போது¸ வியாபாரிகள் மற்றும் பொதுமக்கள் தமிழ்நாடு அரசின் கோவிட்-19 வழிகாட்டு நடைமுறைகள் முகக்கவசம் அணிதல்¸ சமூக இடைவெளி கடைபிடித்தல்¸ கிருமி நாசினி பயன்படுத்தி கைகள் கழுவுதல் உள்ளிட்ட பாதுகாப்பு நடவடிக்கைகளை முறையாக கடைபிடிக்க அறிவுரை வழங்கினார். மேலும்¸ வியாபாரிகள் மற்றும் பொதுமக்கள் அனைவரும் கொரோனா நோய் தொற்றிலிருந்து தங்களை பாதுகாத்து கொள்ள கண்டிப்பாக கோவிட்-19 தடுப்பூசி செலுத்திக் கொள்ள வேண்டும் என கேட்டுக்கொண்டார்.
முத்து விநாயகர் கோயில் தெருவில் கட்டுமான தொழிலாளர்கள் கூடி வேலைக்கு செல்ல ஏதுவாக இடம் ஒதுக்கி தரப்பட்டுள்ளது. அங்கு சென்ற மாவட்ட ஆட்சித் தலைவர் முருகேஷ்¸ தொழிலாளர்கள் முகக்கவசம் அணிதல்¸ சமூக இடைவெளி கடைபிடித்தல் உள்ளிட்டவை கண்டிப்பாக கடைபிடிக்க வேண்டும் என அறிவுரை வழங்கினார். மேலும்¸ கட்டுமான தொழிலாளர்கள் அனைவரும் கொரோனா தொற்றிலிருந்து தங்களை பாதுகாத்து கொள்ள கோவிட்-19 தடுப்பூசி செலுத்திக் கொள்ள வேண்டும் என கேட்டுக்கொண்டார்.
ரவுண்டானா அருகில் மிதிவண்டி¸ இரு சக்கரம்¸ நான்கு சக்கரம் மற்றும் பேருந்துகளில் செல்லும் பொதுமக்களிடம் அரசின் கொரோனா வழிகாட்டு நடைமுறைகள் முகக்கவசம் அணிதல்¸ சமூக இடைவெளி கடைபிடித்தில் கடைபிடிக்கவும்¸ கொரோனா தொற்றிலிருந்து தங்களை பாதுகாத்துக் கொள்ள அனைவரும் கோவிட்-19 தடுப்பூசி செலுத்திக் கொள்ள அறிவுரை வழங்கினார். அப்போது அந்த வழியாக முகக்கவசம் அணியாமல் மிதிவண்டியில் வந்த சிறுமிக்கு அறிவுரை வழங்கி¸ முகக்கவசம் அளித்தார்.