திருவண்ணாமலை மாவட்ட ஆட்சித் தலைவர் அலுவலகத்தில் குடில் அமைத்து அடுப்பு மூட்டி சமைத்த திருநங்கைகளால் பரபரப்பு ஏற்பட்டது.
திருவண்ணாமலை மாவட்ட ஆட்சித் தலைவர் அலுவலகத்தில் திங்கட்கிழமை தோறும் மக்கள் குறை தீர்வு நாள் கூட்டம் நடைபெற்று வருகிறது. கொரோனா தொற்று தடுப்பு நடவடிக்கையாக மாவட்ட ஆட்சித் தலைவர் நேரில் மனு பெறுவதில்லை. அதற்கு பதிலாக மாவட்ட ஆட்சித் தலைவர் அலுவலகத்தில் உள்ள பெட்டியில் மனுக்களை செலுத்த ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.
அதன்படி இன்று நடைபெற்ற மக்கள் குறை தீர்வு நாள் கூட்டத்தில் ஏராளமான பொதுமக்கள் மனுக்களை பெட்டியில் செலுத்தினர். மக்கள் குறை தீர்வு நாள் கூட்டத்திற்கு வருபவர்களை போலீசார் நுழைவு வாயிலேயே சோதித்து அனுப்புவார்கள். கும்பலாக உள்ளே நுழைய அனுமதிக்க மாட்டார்கள். அமைப்போ அல்லது கட்சியின் சார்பிலோ வருபவர்களில் 5 பேரை மட்டுமே மனு அளிக்க உள்ளே விடுவார்கள்.
ஆனால் இன்று சோதனைகள் கடுமையாக இல்லாததால் மாவட்ட ஆட்சித் தலைவர் அலுவலகத்திற்குள் வேன்களிலும்¸ கார்களிலும்¸ ஆட்டோக்களிலும் கும்பல்¸ கும்பலாக வந்து மனு அளித்தனர். இதே பாணியில் திருநங்கைகளும் காரிலும்¸ ஆட்டோவிலும் மாவட்ட ஆட்சித் தலைவர் அலுவலகத்திற்குள் நுழைந்தனர்.
25க்கும் மேற்பட்ட திருநங்கைகள் திரண்டு கையில் பாத்திரங்கள்¸ கேஸ் அடுப்பு¸ காய்கறி போன்ற சமையல் பொருட்கள்¸ 2 ஆடுகளோடு மாவட்ட ஆட்சித் தலைவர் அலுவலகத்திற்குள் உள்ள ரோட்டில் உட்கார்ந்தனர். இதைப்பார்த்து பதட்டம் அடைந்த போலீசார் அவர்களை அப்புறப்படுத்தும் முயற்சியில் இறங்கினர். பிறகு அங்கிருந்து எழுந்து கலெக்டர் அலுவலக நுழைவு வாயிலில் குடில் அமைத்து அடுப்பு மூட்டி உணவு சமைத்தனர்.
தமிழக அரசு திருநங்கைகளுக்கு மற்ற மாவட்டங்களில் வழங்கியது போல் திருவண்ணாமலை மாவட்டத்திலும் தொகுப்பு வீடுகளை வழங்க வேண்டும்¸ திருநங்கைகளுக்கு நலவாரியத்தின் மூலம் அடையாள அட்டை வழங்க வேண்டும் போன்ற கோரிக்கைகளை வலியுறுத்தி குடியேறும் போராட்டத்தை நடத்துவதாக திருவண்ணாமலை மாவட்ட திருநங்கைகள் தலைவி ராதிகா செய்தியாளர்களிடம் தெரிவித்தார்.
அப்போது அவர்கள் கும்மி அடித்தும்¸ ஒப்பாரி வைத்தும் தங்களது ஆதங்கத்தை வெளிப்படுத்தினர். மேலும் கோரிக்கைகளை வலியுறுத்தி கோஷங்களையும் எழுப்பினர். தகவல் கிடைத்து அங்கு வந்த மாவட்ட சமூக நல அலுவலர் (பொறுப்பு) கந்தன்¸ கோட்டாட்சியர் வீ.வெற்றிவேல் ஆகியோர் அவர்களுடன் பேச்சு வார்த்தை நடத்தினர்.
நலவாரியத்தில் உறுப்பினராக உள்ள திருநங்கைகள் குறித்த விவரங்களுடன் மனு அளித்தால் உடனடியாக மாவட்ட ஆட்சியரின் கவனத்துக்கு கொண்டு செல்லப்பட்டு வீட்டு மனை பட்டா வழங்க நடவடிக்கை எடுக்கப்படும் என அதிகாரிகள் தரப்பில் உறுதி அளிக்கப்பட்டது. இதையடுத்து திருநங்கைகள் போராட்டத்தை கைவிட்டனர்.
திருநங்கைகள் போராட்டத்தால் மாவட்ட ஆட்சித் தலைவர் அலுவலகத்தில் பரபரப்பு நிலவியது.