மூடிக்கிடக்கும் திருவண்ணாமலை டான்காப் ஆலையில் கலெக்டர் ஆய்வு மேற்கொண்டார். அங்கு புதிய பஸ் நிலையம் அமைப்பதற்காக அவர் ஆய்வு மேற்கொண்டதாக கூறப்படுகிறது.
அதிமுக ஆட்சியில் திருவண்ணாமலை ஈசான்ய மைதானத்தில் புதிய பஸ் நிலையம் அமைக்க முடிவு செய்யப்பட்டு இதற்காக ரூ.30 கோடியே 15 லட்சம் மதிப்பீட்டில் திட்ட அறிக்கை தயார் செய்யப்பட்டது. இதற்காக ஈசான்யத்தில் தேங்கிக் கிடக்கும் 54ஆயிரம் டன் குப்பைகள் அரைத்து மண்ணாக்கிட ரூ.1கோடியே 25லட்சத்தில் புதியதாக நவீன ரக மிஷினை வரவழைத்து பணிகள் துவங்கப்பட்டன.
இந்நிலையில் ஆட்சி மாற்றத்திற்கு பிறகு புதிய பஸ் நிலையம் நகரை விட்டு வெளியில் அதாவது ரிங் ரோட்டையொட்டி அமைக்கப்படும் என அமைச்சர் எ.வ.வேலு கடந்த வாரம் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் நடைபெற்ற ஆய்வுக் கூட்டத்தில் தெரிவித்திருந்தார். இதனால் பஸ் நிலையம் எந்த இடத்தில் அமைக்கப்படும் என்ற ஆர்வம் அனைவரிடமும் ஏற்பட்டுள்ளது. குறிப்பாக ரியல் எஸ்டேட் அதிபர்கள் கண்ணில் விளக்கெண்ணையை ஊற்றி கவனித்து வருகின்றனர்.
இந்நிலையில் பஸ் நிலையம் அமைப்பதற்காக இடம் தேர்வு செய்யும் பணிகள் தொடங்கியுள்ளது. திருவண்ணாமலை நகரின் திண்டிவனம் சாலையில் இயங்கி வந்த டான்காப் எண்ணெய் பிழிப்பு ஆலை அமைந்துள்ள இடத்தை மாவட்ட ஆட்சியர் பி.முருகேஷ் இன்று மாவட்ட வருவாய் அலுவலர் முத்துகுமாரசாமி மற்றும் நெடுஞ்சாலை துறை அதிகாரிகளுடன் சென்று ஆய்வு செய்தார். புதிய பஸ் நிலையம் அமைப்பதற்காக அவர் அங்கு ஆய்வு மேற்கொண்டதாக கூறப்படுகிறது.
முன்னதாக அவர் ரயில்வே மேம்பாலத்திற்கான சர்வீஸ் ரோடு அமைக்கப்படுவதையும் பார்வையிட்டார். அவருடன் நெடுஞ்சாலைத்துறை கோட்ட பொறியாளர் முரளி¸ உதவி பொறியாளர் பூபாலன் ஆகியோர் சென்றிருந்தனர்.
டான்காப் என்பது தமிழ்நாடு கூட்டுறவு எண்ணெய் வித்து உற்பத்தியாளர் சங்கத்தின் விரிவாக்கம் ஆகும். ரூ.100 கோடி செலவில் கடந்த 1985ம் ஆண்டு அமைக்கப்பட்ட இத் தொழிற்சாலையில் தினமும் 40 டன்னுக்கு மேல் மணிலா எண்ணெய் உற்பத்தி செய்யப்பட்டது. இதற்காக மணிலா உடைப்பு¸ எண்ணெய் எடுத்தல் என மிகப்பெரிய யூனிட்டுகள் அமைக்கப்பட்டிருந்தன. 2002ம் ஆண்டு இந்த ஆலை திடீரென இழுத்து பூட்டப்பட்டது. மணிலா எண்ணெய் பயன்பாடு குறைந்ததால் ஆலை மூடப்பட்டதாக தமிழக அரசு அறிவித்தது. இதனால் நூற்றுக்கணக்கான தொழிலாளர்கள் வேலை இழந்தனர். இவர்களில் சிலருக்கு வேளாணமை துறையில் வேலை வழங்கப்பட்டது.
19 ஆண்டுகளாக மூடப்பட்டிருக்கும் பல ஏக்கரில் அமைந்துள்ள இந்த டான்காப் ஆலையை திறக்க எந்த அரசும் முன்வரவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.