திருவண்ணாமலை மாவட்டத்தில் வக்ஃப் வாரியத்தில் பதிவு செய்யப்பட்ட நிறுவனங்களில் உள்ளவர்களுக்கு மானிய விலையில் ஸ்கூட்டர் வழங்கப்படும் என கலெக்டர் அறிவித்துள்ளார்.
தமிழ்நாட்டில் வேலைக்கு போகும் பெண்களின் வசதிக்காக மானிய விலையில் ஸ்கூட்டர் வழங்கும் திட்டத்தை ஜெயலலிதா முதல்வராக இருந்த போது கொண்டு வந்தார். இத்திட்டத்தின் படி வாகனத்தின் விலையில் 50 சதவீதம் அல்லது ரூ.25 ஆயிரம் இதில் எது குறைவோ அந்த தொகை வழங்கப்பட்டு வந்தது. இத்திட்டத்தின் மூலம் ஏராளமான பெண்கள் பயன் பெற்று வந்தனர்.
இந்நிலையில் இத்திட்டத்தை இஸ்லாமியர்கள் பயன் பெறும் வகையில் தமிழக அரசு விஸ்தரிப்பு செய்துள்ளது. இது குறித்து திருவண்ணாமலை மாவட்ட ஆட்சித் தலைவர் பா.முருகேஷ் வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பில் கூறியிருப்பதாவது¸
தமிழ்நாடு முழுவதும் உள்ள அனைத்து மாவட்டங்களிலும் தமிழ்நாடு வக்ஃப் வாரியத்தில் பதிவு செய்யப்பட்ட 2¸814 வக்ஃப் நிறுவனங்கள் உள்ளன. திருவண்ணாமலை மாவட்டத்தில் உள்ள தமிழ்நாடு வக்ஃப் வாரியத்தில் பதிவு செய்யப்பட்ட இஸ்லாமியர்களின் பள்ளிவாசல்கள் மற்றும் மதரசாக்களில் பணிபுரியும் ஆலிம்கள்¸ இமாம்கள்¸ அரபி ஆகவிரியர்கள்¸ ஆசிரியையகள்¸ மோதினார்கள்¸ பிலால்கள் மற்றும் இதரப்பணியாளர்கள் தர்க்காக்கள் மற்றும் அடக்கத்தலங்கள்¸ தைக்காக்கள் மற்றும் முஸ்லிம் அனாதை இல்லங்கள் ஆகியவற்றில் பணிபுரியும் முஜாவர் உள்ளிட்ட பணியாளர்களுக்கு மானிய விலையில் இரு சக்கர வாகனம் வழங்கப்பட உள்ளது.
இத்திட்டத்தின் கீழ் மானிய விலையில் 125 சிசி எஞ்ஜின் திறன் கொண்ட இருசக்கர வாகனம் வாங்குவதற்கு¸ வாகனத்தின் மொத்த விலையில் 50 சதவீதம் அல்லது ரூபாய் 25¸000 இதில் எது குறைவோ¸ அத்தொகை மானியமாக வழங்கப்படும்.
எனவே¸ மேலே குறிப்பிட்ட இஸ்லாமியர்களின் பள்ளிவாசல் மற்றும் மதரசாக்களில் பணிபுரியும் பணியாளர்களில் இத்திட்டத்தின் மூலம் பயனடைய விரும்புவோர் நிபந்தனைகளுடன் கூடிய விண்ணப்பங்களை பூர்த்தி செய்து அளித்திட வேண்டும்.
திருவண்ணாமலை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் உள்ள மாவட்ட பிற்படுத்தப்பட்டோர் மற்றும் சிறுபான்மையினர் நல அலுவலகத்தில் இந்த விண்ணப்பங்களை சமர்ப்பித்து பயன்பெறலாம்.
இவ்வாறு திருவண்ணாமலை மாவட்ட ஆட்சித்தலைவர் பா.முருகேஷ் தெரிவித்துள்ளார்.