கவனத்தை திசை திருப்பி கொள்ளையடிக்கும் கும்பல் குறித்து எச்சரிக்கையாக இருக்கும்படி பொதுமக்களிடம் போலீசார் விழிப்புணர்வை ஏற்படுத்தினர்.
இது குறித்து திருவண்ணாமலை மாவட்ட காவல்துறை வெளியிட்டுள்ள பத்திரிகை செய்தியில் கூறியிருப்பதாவது¸
பொது இடம் அல்லது வீடுகளில் அந்நிய நபர்கள் அணுகி உடல்சார்ந்த பிரச்சனைகளுக்கு நிரந்தர தீர்வு காண ஆயர்வேத மருந்து தயாரித்து கொடுப்பதாக கூறி பொதுமக்களின் கவனத்தை திசை திருப்புவார்கள். தனிப்பட்ட மற்றும் குடும்ப சிக்கல்களுக்கு ஜோதிடம் அல்லது மாந்தீரிகத்தின் வழியாக தோஷம் நிவர்த்தி செய்வதாக கூறி பொதுமக்களின் கவனத்தை திசை திருப்புவார்கள்.
உறவினரின் உறவினர் அல்லது நண்பரின் நண்பர் என கூறி பொதுமக்களின் கவனத்தை திசை திருப்புவார்கள். பணம்¸ கைப்பை¸ செல்போன்¸ பர்ஸ் மற்றும் நகை ஆகியவற்றில் ஏதேனும் ஒன்று கீழே விழுந்து விட்டதாக கூறி¸ பொதுமக்களின் கவனத்தை திசை திருப்புவார்கள். அரசிடமிருந்து கிடைக்க வேண்டிய நிவாரண தொகை வாங்கி தருவதாக பொதுமக்களிடம் பேசி பழகி கவனத்தை திசை திருப்புவார்கள்.
இப்படி கவனத்தை திசை திருப்பி நகைகளை கொள்ளையடிக்க முயற்சி செய்யும் நபர்களிடமிருந்து எச்சரிக்கையாக இருக்கும்படி பொதுமக்கள் கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள். மேலும்¸ மேற்கண்டவாறு யாரேனும் சந்தேகத்திற்கிடமாக அணுகினால் உடனடியாக காவல்துறைக்கு தகவல் தெரிவிக்கவும். ஹலோ திருவண்ணாமலை போலீஸ் 9988576666 என்ற எண்ணுக்கோ அல்லது காவல் கட்டுப்பாட்டு அறை எண் 100ஐ தொடர்பு கொள்ளவும் கேட்டுக் கொள்ளப்படுகின்றனர்.
இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
திருவண்ணாமலை மாவட்ட காவல் கண்காணிப்பாளர் பவன்குமார் ரெட்டி உத்தரவின் பேரில்¸ திருவண்ணாமலை மாவட்டம் முழுவதும் கிராமங்கள் தோறும் அந்தந்த உட்கோட்ட உதவி மற்றும் துணை காவல் கண்காணிப்பாளர்கள் தலைமையில்¸ கவனத்தை திசை திருப்பி கொள்ளையடிக்கும் கும்பல் குறித்த விழிப்புணர்வை போலீசார் ஏற்படுத்தி வருகின்றனர்.