போலீசாரால் கைது செய்யப்பட்டவர்களுக்கு சட்ட உதவி அளித்திட திருவண்ணாமலையில் உள்ள போலீஸ் நிலையங்களுக்கு மூத்த வழக்கறிஞர்கள் நியமனம் செய்யப்பட்டுள்ளனர்.
இது சம்மந்தமாக திருவண்ணாமலை மாவட்ட சட்டப் பணிகள் ஆணைக் குழுவின் தலைவரும் முதன்மை மாவட்ட அமர்வு நீதிபதியுமான C.திருமகள் வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பில் தெரிவித்திருப்பதாவது¸
சட்ட உதவி என்பது அடிப்படை அரசியல் அமைப்பு உரிமை என்பதாலும்¸ குற்றவியல் நடைமுறை சட்டப்படி குற்றம் சாட்டப்பட்டவர்களுக்கு சட்ட உதவி அளிக்கப்படுவது அவசியம் என்பதாலும்¸ உச்சமன்றம் மற்றும் தேசிய சட்டப் பணிகள் ஆணைக் குழுவின் உத்தரவுப்படி “கைது செய்யப்படுவதற்கு முன்¸ கைது செய்யப்பட்டபின் மற்றும் காவலுக்கு அனுப்பப்படும் நிலையில் நீதியை விரைவாக பெறுதல்” என்ற திட்டத்தின் கீழ் திருவண்ணாமலை மாவட்ட சட்டப் பணிகள் ஆணைக் குழு¸ திருவண்ணாமலையில் உள்ள காவல் நிலையங்களுக்கு மூத்த அனுபவமுள்ள வழக்கறிஞர்களையும்¸ அதேபோல் தாலுகா அளவில் இயங்கி வரும் வட்ட சட்டப் பணிகள் குழுவின் மூலம் மூத்த அனுபவமுள்ள வழக்கறிஞர்களையும் குற்றம் சாட்டப்பட்டவர்களுக்கு சட்ட உதவி மற்றும் ஆலோசனை வழங்க நியமனம் செய்துள்ளது.
மேற்படி திட்டத்தின் கீழ் காவல் நிலையங்களில் குற்ற வழக்கு சம்பந்தமாக விசாரிக்க அழைக்கப்படும் நபர்களுக்கும்¸ குற்றம் சாட்டப்பட்டு காவல் நிலையத்தால் கைது செய்யப்பட்டவர்களுக்கும்¸ பின் அவர்கள் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டு காவலுக்கு அனுப்பப்படும் போதும் மேற்படி நியமனம் செய்யப்பட்ட வழக்கறிஞர்கள் சட்ட உதவி அளிப்பார்கள்.
மேற்படி வழக்கிறஞர்களின் தொடர்பு எண்கள் காவல் நிலையத்தில் அறிவிப்பு பலகையில் ஒட்டப்பட்டுள்ளது. ஆகவே குற்றம் சாட்டப்பட்டவர்களோ¸ அவரது உறவினர்களோ இந்த சட்ட உதவியை பயன்படுத்திக் கொள்ளுமாறும்¸ மேலும் விபரங்கள் தேவைப்படின் அல்லது சட்ட உதவி சம்பந்தமாக குறைபாடு இருப்பின் மாவட்ட சட்டப் பணிகள் ஆனைக் குழுவையோ¸ வட்ட சட்டப் பணிகள் குழுவையோ 04175-232845¸ 8056896649 என்ற அலுவலக எண்ணில் தொடர்பு கொள்ளலாம்.
இவ்வாறு மாவட்ட சட்டப் பணிகள் ஆணைக் குழுவின் தலைவரும் முதன்மை மாவட்ட அமர்வு நீதிபதியுமான C. திருமகள் தெரிவித்துள்ளார்.