Homeஆன்மீகம்ஸ்டாலினுக்கு V.H.Pயின் பூஜாரிகள் அமைப்பு பாராட்டு

ஸ்டாலினுக்கு V.H.Pயின் பூஜாரிகள் அமைப்பு பாராட்டு

ஸ்டாலினுக்கு வி.எச்.பியின் பூஜாரிகள் அமைப்பு பாராட்டு

தமிழகத்தில் சிறப்பான ஆட்சியை நடத்தி வருவதாக ஸ்டாலினுக்கு விசுவ இந்து பரிஷத்தின் அங்கமாக பூஜாரிகள் பேரமைப்பு பாராட்டு தெரிவித்துள்ளது. 

விசுவ இந்து பரிஷத்தின் அங்கமாக பூஜாரிகள் பேரமைப்பு செயல்பட்டு வருகிறது. மாநிலத் தலைவராக எஸ்.ராஜா இருந்து வருகிறார். 

இந்நிலையில் பூஜாரிகள் பேரமைப்பின் மாநில இணை அமைப்பாளர் அம்மணி அம்மன் ரமேஷ் தலைமையில் திருவண்ணாமலை மாவட்ட ஆட்சித் தலைவர் அலுவலகத்தில் இன்று நடைபெற்ற மக்கள் குறை தீர்வு கூட்டத்தில் மாவட்ட ஆட்சித் தலைவர் வழியாக தமிழக முதல்வர் ஸ்டாலினுக்கு கோரிக்கை மனு ஒன்று அளிக்கப்பட்டது. 

அந்த கோரிக்கை மனுவில் கூறியிருப்பதாவது¸

தமிழகத்தில் கொரோனா பெருந்தொற்றை அறவே ஒழிக்க இரவு பகல் பாரமல் ஓய்வின்றி போராடி வரும் தமிழக முதல்வர் ஸ்டாலினுக்கு மனதிடம் உடல் ஆரோக்யம் கிடைக்க எல்லாம் வல்ல இறைவனை வேண்டுகிறோம். 

பூஜாரிகளின் நிலையை உணர்ந்து தக்க நேரத்தில் ஒரு கால பூஜை திட்டதில் பயன் பெறும் பூஜாரிகளுக்கு கொரோனா நிவாரண நிதி வழங்கியதற்கு நன்றியை தெரிவித்துக் கொள்கிறோம். கிராமம் மற்றும் நகர் பகுதியில் பூஜை செய்துவரும் அரசின் ஒரு கால பூஜை திட்டத்தில் பயன் அடையாத பூஜாரிகள் பல ஆயிரக்கணக்கானோர் தற்போது உள்ள அரசாணைப்படி கொரோனா நிவாரண நிதியை பெறமுடியாது 

வறுமையில் உள்ள பூஜாரிகள் தினசரி அரசு அலுவலகங்களுக்கு சென்று முதல்வர் அறிவித்த நிவாரண பணம் எங்களுக்கு வந்துவிட்டதா என்று கேட்டு வருவதை பார்த்தால் வருத்தம் அளிக்கின்றது. எனவே இத்திட்டத்தை அனைத்து பூஜாரிகளும் பயன் பெறும் வகையில் விரிவுபடுத்திட கேட்டுக் கொள்கிறோம். 

ஸ்டாலினுக்கு வி.எச்.பியின் பூஜாரிகள் அமைப்பு பாராட்டு

திருக்கோவில்களில் எந்தவித எதிர்பார்ப்பும் இன்றி கோவில்களில் ஆன்மீக ஈடுபாடுடன் சொந்த பணத்தில் பூஜை சேவைப்பணியாற்றி வரும் பூசாரி பெருமக்களுக்கு மாதந்தோரும் ஊக்கத்தொகையாக ரூ.5000 வழங்கிட வேண்டும். திருக்கோவில்களில் பணியாற்றி ஓய்வு பெற்று வயோதிகம் காரணமாக வறுமையில் வாடும் பூஜாரி பெருமக்களுக்கு அரசின் பூஜாரிகள் ஓய்வூதியம் பெறும் திட்டத்தை எளிமைப்படுத்தியும் பயன்பெறும் எண்ணிக்கையை அதிகப்படுத்தவும் கேட்டுக்கொள்கிறோம்.

ஓய்வூதியம் பெறும் பூஜாரி இறக்க நேரிட்டால் அவரது மனைவிக்கு குடும்ப ஓய்வூதியம் வழங்க கேட்டுக்கொள்கிறோம். அரசு கட்டுப்பாட்டில் இல்லா திருக்கோவில்களுக்கு தற்போது விதிக்கப்பட்டுள்ள மின்சார கட்டண விகிதத்தை ரத்து செய்து அதற்கு பதில் வீடுகளுக்கு 100 யூனிட் இலவச மின்சாரம் வழங்கும் திட்டத்தின் கீழ் கொண்டு வந்து வருவாய் இல்லாத திருக்கோவில்கள் பயன்பெற வழிவகை செய்ய கேட்டுக்கொள்கிறோம்.

முன்னாள் முதலமைச்சர் கலைஞரால் 20 ஆண்டுகளுக்கு முன் துவங்கப்பட்ட பூஜாரிகள் நலவாரியம் நடைமுறைப்படுத்தாமல் கிடப்பில் போடப்பட்டுள்ளது. கிராம பஞ்சாயத்து சார்பில் கிடைக்கும் அரசு உதவிகள் அளவு கூட பூஜாரிகள் நலவாரியத்தால் பயனாளிகள் பெறமுடியவில்லை என்பதை கவனத்திற்கு கொண்டு வருகிறோம். 

எனவே தங்களின் தலைமையிலான சிறப்பான ஆட்சியில் பூஜாரிகள் நலவாரியத்தை உயிர் பெறவைக்க துறை அதிகாரிகளுக்கு உத்திரவிடவும்¸ இந்து அறநிலையத்துறை கட்டுப்பாட்டில் உள்ள திருக்கோவில் சார்பில் அந்த மாவட்ட எல்லைக்குட்பட்ட கிராமக் கோவில்களுக்கு தீபம் ஏற்ற எண்ணை மற்றும் நெய்வேத்தியத்திற்கு அரிசி வழங்கும் திட்டத்தை ஏற்படுத்தித் தரவும் கேட்டுக்கொள்கிறோம்.

சொந்த வீடு இல்லாத பூஜாரிப் பெருமக்களுக்கு அரசின் இலவச வீடு வழங்கும் திட்டத்தில் முன்னுரிமை அளித்திடவும்¸ கிராமக் கோவில்களுக்கு கோபூஜை செய்திடவும்¸ அபிஷேகத்திற்கு பாலை பயன்படுத்திடவும் பெரியகோவில்களில் தானமாக வரும் பசுக்களை வழங்கிடவும் கேட்டுக் கொள்கிறோம்.

இவ்வாறு மனுவில் தெரிவிக்கப்பட்டுள்ளது. 

இந்த மனு வழங்கும் நிகழ்ச்சியில் விசுவ இந்து பரிஷத்தின் மாநில துணைத் தலைவர் ஏ.பி.டி சக்திவேல்¸ மாவட்டத் தலைவர் ராஜேந்திரன்¸ மாவட்ட செயலாளர் கண்ணன்¸ நகர செயலாளர் ஏழுமலை உள்பட பூசாரிகள் பலர் கலந்து கொண்டனர். 

Join us for more Update

YouTube

@agnimurasu

Popular Post

Must Read

error: Content is protected !!