Homeசெய்திகள்100 அடி உயர கம்பத்தில் 12 கிலோ தேசியக் கொடி

100 அடி உயர கம்பத்தில் 12 கிலோ தேசியக் கொடி

100 அடி உயர கம்பத்தில் 12 கிலோ தேசியக் கொடி
ரயில்வே நிலையம்

திருவண்ணாமலை ரயில்வே நிலையத்தில் 100 அடி உயர கம்பத்தில் 12கிலோ எடை கொண்ட தேசியக் கொடி ஏற்றப்பட்டது. பிரமாண்டமான இந்த கொடிகம்பத்தை பொதுமக்கள் செல்போனில் படம் எடுத்துச் சென்றனர். 

மாவட்ட நிர்வாகம் 

திருவண்ணாமலையில் 75வது சுதந்திர தின விழா இன்று(15-08-2021) கோலாகலமாக கொண்டாடப்பட்டது. திருவண்ணாமலையில் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அலுவலக வளாகத்தில் அமைந்துள்ள ஆயுதப்படை மைதானத்தில் மாவட்ட நிர்வாகம் சார்பில் சுதந்திர தினவிழா இன்று காலை நடைபெற்றது. மாவட்ட ஆட்சியர் பா.முருகேஷ் கலந்து கொண்டு தேசிய கொடியினை ஏற்றி வைத்தார். பிறகு காவல்துறையினர் அணிவகுப்பு மரியாதையை ஏற்றுக் கொண்டு சமாதானத்தைக் குறிக்கும் வகையில் வெண்புறாக்கள் மற்றும் பலூன்களை பறக்கவிட்டு காவல்துறையில் சிறப்பாக பணியாற்றிய 76 காவலர்களுக்கு பரிசு கேடயம் பாராட்டு சான்றிதழ் வழங்கினார். 

மாவட்ட நிர்வாகம் சார்பில் சுதந்திர தினவிழா

11 பயனாளிகளுக்கு ரூ.18.18 லட்சம் மதிப்பில் அரசு நலத்திட்ட உதவிகளையும்¸ பல்வேறு துறைகளில் சிறப்பாக பணியாற்றிய 710 அரசு அலுவலர்கள்¸ பணியாளர்கள்¸ தனி திறமையாளர்கள் மற்றும் தன்னார்வ அமைப்புகளுக்கு பாராட்டு சான்றிதழையும் வழங்கினார். விழாவில் மாவட்ட காவல்துறை கண்காணிப்பாளர் பவன்குமார் ரெட்டி¸ மாவட்ட வருவாய் அலுவலர் இரா.முத்துகுமாரசாமி¸ கூடுதல் ஆட்சியர் மு.பிரதாப்¸ உதவி ஆட்சியர் (பயிற்சி) கட்டா ரவிதேஜா மற்றும் பலர் கலந்து கொண்டனர். 

முன்னதாக திருவண்ணாமலை தேரடித் தெருவில் உள்ள மகாத்மா காந்தி திருவுருவ சிலைக்கு மாவட்ட ஆட்சித் தலைவர் பா.முருகேஷ் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார்.

மாவட்ட ஊராட்சி 

இதே போல திருவண்ணாமலை காந்தி நகரில் மாவட்ட ஊராட்சி அலுவலகத்தில் சுதந்திர தினவிழாவில் மாவட்ட ஊராட்சி குழு தலைவர் பார்வதி சீனுவாசன் தேசியக் கொடியினை ஏற்றிவைத்தார். இதில் துணைத் தலைவர் பாரதி ராமஜெயம்¸ மாவட்ட ஊராட்சி செயலர் நா.அறவாழி¸ வட்டார வளர்ச்சி அலுவலர் (நிர்வாகம்) க.கிருஷ்ணமூர்த்தி மாவட்ட ஊராட்சிக்குழு உறுப்பினர்கள் இல.சரவணன்¸ எம்.ஞானசௌந்தரி¸ எஸ்.முத்து¸ எம்.சுஜாதா¸ டி.பூங்கொடி¸ ஏ.எஸ்.ஆறுமுகம் உள்பட பலர் கலந்து கொண்டனர்.

திருநேர் அண்ணணாமலை கோயில்

சாதுக்கள் சார்பில் 

திருவண்ணாமலை கிரிவலப்பாதையில் உள்ள திருநேர் அண்ணணாமலை கோயில் முன்பு சாதுக்கள் சார்பில் எல்லப்ப சாமி தேசிய கொடியை ஏற்றி வைத்தார். தமிழக அரசு கோயில்களில் தமிழில் பூஜை செய்யவும்¸ அர்ச்சனை செய்யவும் வெளியிடப்பட்ட அறிவிப்பை தமிழ் அன்னைக்கு கிடைத்திட்ட சுதந்திர தினமாக இந்நாளை அவர்கள் கொண்டாடினர். 

திருவண்ணாமலை ஊராட்சி

திருவண்ணாமலை ஊராட்சி ஒன்றிய அலுவலகத்தில் நடைபெற்ற சுதந்திர தினவிழாவில் ஒன்றியக்குழு தலைவர் க.கலைவாணி கலைமணி¸ தேசிய கொடியினை ஏற்றிவைத்தார். இதில் ஆணையாளர் கே.சி.அமிர்தராஜ்¸ வட்டார வளர்ச்சி அலுவலர் சு.அருணாசலம்¸ மற்றும் ஒன்றியக்குழு உறுப்பினர்கள் செ.சுபாசெல்வமணி¸ செ.தினகரன்¸ ஏ.கஸ்தூரி ஏழுமலை¸ வி.சாந்தி விஜயன் உள்பட பலர் கலந்து கொண்டனர்.

பா.ஜ.க சார்பில்

பா.ஜ.க சார்பில்

திருவண்ணாமலை அவலூர் பேட்டை ரோட்டில் உள்ள பா.ஜ.க அலுவகத்தின் முன்பு தேசியக் கொடியை கல்லூரி மாணவி மஞ்சு ஏற்றி வைத்தார். இதில் அக்கட்சியின் மாவட்டத் தலைவர் ஜீவானந்தம்¸ மாவட்ட பொதுச் செயலாளர் எம்.சதீஷ்குமார்¸ கருணா மற்றும் சுற்றுப்புற மக்கள் பங்கேற்றனர். 

அம்மா இல்லம்

திருவண்ணாமலை போளுர் ரோட்டில் உள்ள அம்மா இல்லத்தில் கட்சி நிர்வாகிகள்¸ தொண்டர்கள்¸ பொதுமக்களுக்கு 3 வேளையும் உணவு வழங்கப்பட்டு வந்த இடம் மற்றும் முன்புற பகுதிகள் அரசியல் காழ்புணர்ச்சி காரணமாக வேலி போட்டு அடைக்கப்பட்டுள்ளது. அந்த அலுவலகத்திற்குச் செல்ல ஒரு ஓரமாக புதர்கள்¸ மேடு¸ பள்ளங்கள் கொண்ட சிறிய இடம் ஒதுக்கப்பட்டுள்ளது. இந்த தடைகளை தாண்டி முன்னாள் மாவட்ட செயலாளர் பெருமாள் நகர் ராஜன் தலைமையில் அதிமுகவினர் சென்று சுதந்திர தின விழாவை கொண்டாடினர். 

திருவண்ணாமலை போளுர் ரோட்டில் உள்ள அம்மா இல்லத்தில்

பெருமாள் நகர் ராஜன் தேசியக் கொடியை ஏற்றி வைத்து இனிப்புகளை வழங்கினார். இதில் நகர நிர்வாகிகள் உள்பட அதிமுகவினர் திரளாக கலந்து கொண்டனர். அனைவருக்கும் காலை உணவு வழங்கப்பட்டது. 

காங்கிரஸ் சார்பில்

திருவண்ணாமலை தெற்கு மாவட்ட காங்கிரஸ் கமிட்டி

திருவண்ணாமலை தெற்கு மாவட்ட காங்கிரஸ் கமிட்டி சார்பில் சுதந்திர தின விழா கொண்டாடப்பட்டது. இதையொட்டி திருவண்ணாமலை காந்தி சிலைக்கு மாலை அணிவித்து இனிப்புகள் வழங்கப்பட்டன. இதைத் தொடர்ந்து திருவண்ணாமலை அடுத்த இனாம்காரியந்தல் கிராமத்தில் தனியார் இடத்தில் புதியதாக நிறுவப்பட்டுள்ள காமராஜர் உருவச் சிலையை திருவண்ணாமலை நகர காங்கிரஸ் தலைவர் என்.வெற்றிச்செல்வன் தலைமையில் மாவட்டத் தலைவர் செங்கம் குமார் திறந்து வைத்தார். 

இந்து இயக்கங்கள் சார்பில்

அனைத்து இந்து இயக்கங்கள்

திருவண்ணாமலை அண்ணாமலையார் கோயில் முன்பு விசுவ இந்து பரிஷத்¸ இந்து முன்னணி¸ பஜ்ரங்கதல் உள்பட அனைத்து இந்து இயக்கங்கள் சார்பில் பாரத மாதா படம் வைக்கப்பட்டு தேசிய கொடி ஏற்றப்பட்டது. பாரத மஸ்தூர் சங்கம் சார்பில் முத்து விநாயகர் கோயில் தெருவில் நடைபெற்ற சுதந்திர தின விழாவில் மாநில செயற்குழு உறுப்பினர் செங்கம் ராஜா தேசியக் கொடியை ஏற்றி வைத்தார்.

காந்தி பேரவை

தமிழ்நாடு காந்தி பேரவையின் சார்பில் தேரடி வீதியில் உள்ள காந்தி சிலைக்கு பேரவையின் பொதுச் செயலாளர் எழுத்தாளர் ந. சண்முகம் தலைமையில்¸ தலைவரும் முன்னாள் சட்டமன்ற உறுப்பினருமான பி எஸ் விஜயகுமார் மாலை அணிவித்தார். 

ரயில்வே நிலையம்

திருவண்ணாமலை ரயில்வே நிலையம்

திருவண்ணாமலை ரயில்வே நிலையத்தில் இந்த வருடம் 100 அடி கொடி கம்பம் புதியதாக அமைக்கப்பட்டுள்ளது. இதில் 12 கிலோ எடை கொண்ட தேசியக் கொடியை நிலைய அதிகாரி ஏற்றி வைத்தார். பிரமாண்டமான இந்த கொடி கம்பத்தை பார்த்து வியப்படைந்த பொதுமக்கள் அதை தங்கள் செல்போனில் படம் பிடித்தனர். 

மத்திய கூட்டுறவு வங்கி

திருவண்ணாமலை மாவட்ட மத்திய கூட்டுறவு வங்கி தலைமையக வளாகத்தில் நடைபெற்ற சுதந்திர தின விழாவில் வங்கியின் பெருந்தலைவர் பெருமாள் நகர்.கே.ராஜன் தேசிய கொடியினை ஏற்றி வைத்து சிறப்புரையாற்றினார். இதில் பொது மேலாளர் அ.இளங்கோவன்¸ நிர்வாக குழு உறுப்பினர்கள் கே.வி.ரகோத்தமன்¸ ஜி.சி.வேலு¸ ஆர்.முத்துகுமார்¸ உதவிப்பொது மேலாளர்கள் அ.இளங்கோவன்¸ சு.கணபதி மற்றும் இணைப்பு சங்கங்களின் தலைவர்கள்¸ மத்திய வங்கி பணியாளர்கள் திரளாக கலந்து கொண்டனர்.

நகர்புற கூட்டுறவு வங்கி

இதே போல் திருவண்ணாமலை நகர்புற கூட்டுறவு வங்கியில் அதன் தலைவர் டிஸ்கோ குணசேகரன் தேசிய கொடியை ஏற்றி வைத்தார். அப்போது வங்கி மேலாளர் சத்திய நாராயணன் மற்றும் இயக்குநர்கள் உடன் இருந்தனர்.

Join us for more Update

YouTube

@agnimurasu

Popular Post

Must Read

error: Content is protected !!