நிலத்தகராறில் விவசாயியை¸ பக்கத்து நிலத்துக்காரர் நாட்டுத் துப்பாக்கியால் சரமாறியாக சுட்டதில் 30க்கும் மேற்பட்ட குண்டுகள் பட்டு படுகாயம் அடைந்தார்.
திருவண்ணாமலை அடுத்த பேராயம்பட்டு கிராமத்தைச் சேர்ந்தவர் பச்சையப்பன்(வயது 61). விவசாயி. பக்கத்து ஊரான அத்திப்பாடியில் இவருக்கு சொந்தமாக நிலம் உள்ளது. நிலத்தில் கரும்பு பயிரிட்டுள்ள பச்சையப்பன்¸ குட்டை அமைத்து மீன் வளர்த்து வருகிறார். தினமும் இரவு காவலுக்காக நிலத்துக்கு சென்று தங்கி விடுவார்.
நேற்று இரவும் காவலுக்கு சென்ற பச்சையப்பன் நிலத்தில் உள்ள கொட்டகையில் தூங்கிக் கொண்டிருந்தார். அதிகாலை நேரத்தில் அங்கு சிலர் வந்தனர். தூங்கிக் கொண்டிருந்த பச்சையப்பன் மீது அதில் ஒருவர் முயல் போன்ற விலங்குகள்¸ பறவைகளை சுடுவதற்கு பயன்படுத்தப்படும் நாட்டுத் துப்பாக்கியால் சரமாறியாக சுட்டாராம். துப்பாக்கியிலிருந்து வெளிவந்த மிகச்சிறிய அளவிலான 30க்கும் மேற்பட்ட குண்டுகள் பச்சையப்பனின் தோள்பட்டையை பதம் பார்த்தன. பிறகு 3 பேரும் ஓடி விட்டனர்.
இதனால் பச்சையப்பனின் உடலிருந்து ரத்தம் கொட்டியது. அருகில் யாரும் இல்லாததால் ரத்தம் சொட்ட¸ சொட்ட தன்னந்தனியாக பச்சையப்பன் அரை கிலோ மீட்டர் தூரம் நடந்து வந்து சாலையில் மயக்கம் போட்டு விழுந்தார். அந்த நேரத்தில் நிலங்களுக்கு வேலைக்கு சென்றவர்கள் பச்சையப்பன் ரத்த வெள்ளத்தில் விழுந்து கிடப்பதை பார்த்து அதிர்ச்சியடைந்தனர். பச்சையப்பனின் உறவினர்களுக்கு தகவல் கொடுத்துள்ளனர்.
அதன் பிறகு அங்கு வந்த அவரது உறவினர்கள் பச்சையப்பனை திருவண்ணாமலை அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். அங்கு பச்சைப்பனுக்கு முதலுதவி சிகிச்சை அளிக்கப்பட்டது. அதன்பிறகு அவர் மேல்சிகிச்சைக்காக பாண்டிச்சேரி ஜிப்மர் மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டார்.
தகவல் கிடைத்ததும் திருவண்ணாமலை ரூரல் டி.எஸ்.பி டி.எஸ்.பி அண்ணாதுரை சம்பவ இடத்திற்கு சென்று விசாரணை நடத்தினார். இது குறித்து வாணாபுரம் போலீசார் வழக்குப்பதிவு செய்தனர்.
தனது பக்கத்து நிலத்தைச் சேர்ந்த அன்பழகனின் தம்பி பூமிநாதனின் நிலத்தை பச்சையப்பன் விலைக்கு வாங்கியதாக சொல்லப்படுகிறது. எனது தம்பி நிலத்தை நீ எப்படி வாங்கலாம் என கூறி அன்பழகன்¸ பச்சையப்பனிடம் தகராறு செய்து வந்தாராம். தம்பியின் நிலத்துக்கு செல்ல முடியாமல் பச்சையப்பனை தடுத்து வந்தாராம். இதனால் அவர்களிடையே விரோதம் நீடித்து வந்தது. இந்த தகராறு முற்றி அன்பழகன் தரப்பு துப்பாக்கியால் பச்சையப்பனை சுட்டது போலீஸ் விசாரணையில் தெரிய வந்தது.
இதையடுத்து போலீசார் அன்பழகன்¸ அவரது மனைவி ஜெயந்தி¸ அன்பழகனின் நண்பர் சுப்பிரமணி ஆகிய 3 பேரை கைது செய்தனர். நிலத்தகராறில் விவசாயியை துப்பாக்கியால் சுட்ட சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.