காதல் கணவன் இறந்த துக்கம் தாளாமல் மருத்துவமனையின் 4வது மாடியிலிருந்து குதித்த பெண் சிகிச்சை பலனின்றி இறந்தார்.
திருவண்ணாமலை கோபால் தெருவைச் சேர்ந்தவர் புவனா(46) ஓட்டல் ஒன்றில் கணக்கு பிரிவில் பணிபுரிந்து வந்தார். இவருக்கு 2 மகன்கள்¸ 1 மகள் உள்ளனர். 2வது மகன் பரத்(25) மீன் கடையில் வேலை செய்து வந்தார். அப்போது இளம் பெண் ஒருவருடன் காதல் வயப்பட்டார். இந்த காதல் கைகூடாததால் விரக்தியில் இருந்து வந்த பரத்தை அவரது தாய் சென்னைக்கு வேலைக்கு அனுப்பினார். பிறகு அவரது தாயார் புவனா திருவண்ணாமலையிலிருந்து தண்டராம்பட்டு தாலுகா தென்முடியனூர் கிராமத்திற்கு சென்று நிலத்தில் வேலை செய்து அங்கேயே வசித்து வந்தார்.
சென்னைக்கு சென்ற பரத்துக்கு அங்கு உடன் பணிபுரிந்த சேலம் மாவட்டம் சிவதாபுரம் கிராமத்தைச் சேர்ந்த லோகேஸ்வரியுடன்(21) காதல் ஏற்பட்டது. கடந்த 1 மாதத்திற்கு முன்பு இருவரும் திருமணம் செய்து கொண்டனர். இந்நிலையில் புதுமண தம்பதியினருக்கிடையே தகராறு ஏற்பட்டது. இதில் கடந்த 17ந் தேதி பரத் எலி பேஸ்ட்டை சாப்பிட்டதால் சிகிச்சைக்காக திருவண்ணாமலை அரசு மருத்துவமனைமருத்துவகல்லூரி மருத்துவமனையில் சேர்க்கப்பட்டார்.
அங்கு சிகிச்சை பெற்று வந்த நிலையில் 21ந் தேதி சிகிச்சை பலனின்றி பரிதாபமாக இறந்தார். இதனால் கதறி அழுத லோகேஸ்வரி கணவனுக்கு உரிய சிகிச்சையளிக்கவில்லை என்றும்¸ மருத்துவனை ஊழியர்கள் தனது கணவனை அடித்து துன்புறுத்தி ஊசி போட்டதாகவும் குற்றம்சாட்டினார். மருத்துவமனை ஊழியர்களிடமும் அவர் தகராறில் ஈடுபட்டதால் மருத்துவமனையில் பரபரப்பு ஏற்பட்டது.
பின்னர் தனது காதல் கணவன் உயிரிழந்த துக்கம் தாளாமல் அவர் மருத்துவமனையின் 4வது மாடிக்கு சென்று அங்கிருந்து கீழே குதித்தார். இதில் அவசர சிகிச்சை பிரிவு வளாகத்தில் போடப்பட்டிருந்த தகர கொட்டகையை பிளந்து கொண்டு கீழே விழுந்தார். ரத்த வெள்ளத்தில் உயிருக்கு போராடி கொண்டிருந்தவரை மருத்துவமனை ஊழியர்கள் மருத்துவமனையில் சேர்த்தனர். அங்கிருந்து லோகேஸ்வரி மேல் சிகிச்சைக்காக சென்னை ராஜீவ்காந்தி அரசு பொது மருத்துவமனையில் சேர்க்கப்பட்டார். 4நாட்கள் சிகிச்சை பெற்றும் பலனின்றி நேற்று மாலை பரிதாபமாக இறந்தார்.
எலி பேஸ்ட்டால் பலி அதிகம்
திருவண்ணாமலை பகுதியில் சமீபகாலமாக எலி பேஸ்ட்டை சாப்பிட்டு தற்கொலை செய்து கொள்பவர்களின் எண்ணிக்கை அதிகரித்து வருகிறது. அரளி விதை¸ பூச்சி மருந்தை சாப்பிட்டவர்களை கூட காப்பாற்றி விடலாம் என்கிற நிலையில் அரசு மருத்துவமனை மருத்துவகல்லூரி மருத்துவமனையில் எலி பேஸ்ட்டை சாப்பிட்டு வந்து அட்மிட் ஆனவர்களில் பெரும்பாலானோர் பிழைப்பதில்லை. எலி பேஸ்ட்டை சாப்பிட்ட உடன் குடலில் ஒட்டிக்கொண்டு கல்லீரலை பாதிப்படைச் செய்து பிறகு மூளை¸ நுரையீரலை ரத்தம் கசிய வைத்து உயிரை குடிப்பதுதான் இந்த எலி பேஸ்ட் தனித்தன்மையாகும்.
எலிகளை கொல்லும் மருந்து தற்போது அதிக அளவில் மனிதர்களை கொன்று வருகிறது. பூச்சி மருந்து கடைகளில் மட்டுமே எலி பேஸ்ட்டை விற்பனை செய்ய வேண்டும் என்ற உத்தரவு உள்ள நிலையில் பெட்டி கடை மற்றும் மளிகை கடைகளில் சர்வ சாதாரணமாக எலி பேஸ்ட் கிடைத்து வருவதே பலர் உயிரை பறிப்பதற்கு காரணமாக உள்ளது. சம்மந்தப்பட்ட அதிகாரிகள் உடனடியாக எலி பேஸ்ட் விற்பனையை கட்டுப்படுத்த நடவடிக்கை எடுக்க வேண்டும் என்ற கோரிக்கை எழுந்துள்ளது. இனிமேலாவது விழித்துக் கொள்வார்களா அதிகாரிகள்?