திருவண்ணாமலை பஸ் நிலையத்தில் கொய்யா பழக்கடையை அடித்து துவம்சம் செய்தவர் மனநிலை பாதிக்கப்பட்டவர் என மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு தெரிவித்துள்ளார்.
திருவண்ணாமலை மத்திய பஸ் நிலைத்தில் நேற்று (13-08-2021) நின்றிருந்த 25 வயது மதிக்கத்தக்க வாலிபர் ஒருவர் திடீரென ரகளையில் ஈடுபட்டதால் பயணிகள் அலறி அடித்துக் கொண்டு ஓடினர். இதனால் பஸ் நிலையத்தில் பரபரப்பு ஏற்பட்டது. அந்த வாலிபர் கொய்யா பழ கட்டையால் அடித்து கீழே சாய்த்து விட்டு பக்கத்தில் நின்றிருந்தவர்களை மிரட்டினார். பிறகு கையில் கிடத்தவற்றை தூக்கியெறிந்தார். அதன்பிறகு கிரிக்கெட் பந்தை அடிப்பது போல் கொய்யா பழக் கூடையை கட்டையால் அடித்து நொறுக்கினார்.
இதையடுத்து அங்கிருந்தவர்கள் அந்த வாலிபரை மடக்கி தர்ம அடி கொடுத்து பஸ் நிலையத்தில் உள்ள புறக்காவல் நிலையத்தில் ஒப்படைத்தனர். அங்கு அவர் மயங்கி விழுந்தார். போலீசார் தண்ணீரை முகத்தின் மீது தெளித்து அவரை எழுப்பி சிகிச்சைக்காக திருவண்ணாமலை அரசு மருத்துவ கல்லூரி மருத்துவமனையில் சேர்த்தனர்.
அந்த வாலிபர்¸ பஸ் நிலையத்தில் ரகளையில் ஈடுபடும் வீடியோ காட்சி சமூக வலைதளங்களில் வைரலானது. கஞ்சா போதையில் அந்த வாலிபர் ரகளை செய்ததாகவும் செய்திகள் வெளியானது. இதை மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு பவன்குமார் ரெட்டி மறுத்துள்ளார். கஞ்சாவிற்கும் அந்த வாலிபருக்கும் தொடர்பில்லை என்றும் தெரிவித்துள்ளார்.
இந்நிலையில் திருவண்ணாமலை மாவட்ட காவல்துறை சார்பில் வெளியிடப்பட்டுள்ள பத்திரிகை செய்தியில் கூறியிருப்பதாவது¸
திருவண்ணாமலை நகர மத்திய பேருந்து நிலையத்தில் 25 வயது மதிக்கத்தக்க இளைஞர் கொய்யாப்பழம் விற்பனை செய்து கொண்டிருந்த பெண்ணிடம் தகராறு செய்து¸ கட்டையால் கொய்யாப்பழ கூடையை அடித்து உடைத்து ரகளையில் ஈடுபட்டுள்ளார்.
இதனால் அங்கிருந்த பொதுமக்கள் அவரை மடக்கிப்பிடித்து காவல்துறையிடம் ஒப்படைத்தனர். பின்னர் அவருடன் வந்த அவரின் தாயை விசாரணை செய்ததில்¸ அந்த நபர் விழுப்புரம் மாவட்டம்¸ செஞ்சி தாலுக்கா¸ சே.பேட்டை கிராமத்தைச் சேர்ந்தவர் என்பதும்¸ திருவண்ணாமலை முத்து விநாயகர் கோவில் தெருவில் உள்ள அப்பா மனநல மருத்துவமனையில் கடந்த ஆறு மாத மனநல சிகிச்சை எடுத்து வந்ததும் தெரியவந்தது.
மனநல சிகிச்சைக்காக கடந்த 10 நாட்களுக்கு முன்பு பெங்களுருக்கு அவரை அழைத்துக் கொண்டு சென்றதாகவும் இந்நிலையில் நேற்று 13.08.2021 அன்று தனது சொந்த ஊருக்கு செல்வதற்காக பெங்களுரிலிருந்து திருவண்ணாமலைக்கு அவரை அழைத்து வந்தததும் தெரியவந்தது. அப்போது மனநலம் அவர் கொய்யாப்பழம் விற்றுக் கொண்டிருந்த பெண்ணிடம் தகராறு செய்து ரகளை செய்துள்ளார். அந்த இளைஞர் மனநலம் பாதிக்கப்பட்டவர் என்பதால காவல்துறையினர் அவரை திருவண்ணாமலை அரசு மருத்துவ கல்லூரி மற்றும் மருத்துவமனையில் சேர்த்தனர்.
இது சம்பந்தமாக திருவண்ணாமலை மத்திய பேருந்து நிலையத்தில் கொய்யாப்பழம் விற்பனை செய்து கொண்டிருந்த பாதிக்கப்பட்ட பெண் மனநலம் பாதிக்கப்பட்ட நபர் மீது புகார் எதுவும் அளிக்கவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.
இவ்வாறு பத்திரிகை செய்தியில் தெரிவிக்கப்பட்டுள்ளது.