பா.ஜ.க மாநில வர்த்தகர் அணி துணைத் தலைவராக இருந்த தணிகைவேல் அக்கட்சியிலிருந்து நீக்கம் செய்யப்பட்டுள்ளார்.
இதுபற்றிய விவரம் வருமாறு¸
திருவண்ணாமலையைச் சேர்ந்த தொழிலதிபர் எஸ்.தணிகைவேல் சென்னையில் வசித்து வருகிறார். கடந்த 2020ஆம் வருடம் அப்போதைய பாஜக தலைவர் முருகன் முன்னிலையில் அக்கட்சியில் இணைந்த தணிகைவேலுக்கு பாரதிய ஜனதா கட்சியின் மாநில வர்த்தகர் அணி துணைத் தலைவர் பதவி கிடைத்தது.
திருவண்ணாமலையில் தனக்கென தனி கோஷ்டியை அமைத்துக் கொண்டு அரசியல் செய்து வந்த தணிகைவேல் பாரதிய ஜனதா கட்சியின் திருவண்ணாமலை மாவட்ட நிர்வாகத்தோடு ஒத்துப் போகாதது குறித்து தலைமைக்கு புகார்கள் சென்றன. தணிகைவேல் தலைமையில் ஒரு கோஷ்டியும் சீனியர்கள் தலைமையில் ஒரு கோஷ்டியும் செயல்பட்டு வந்தன. இதனால் தனித்தனியாக நிகழ்ச்சிகளை அவர்கள் நடத்தி வந்தனர்.
இந்நிலையில் கடந்த சட்டமன்றத் தேர்தலில் பாஜகவில் உள்ள சீனியர்களை ஓரங்கட்டிவிட்டு தணிகைவேல் திருவண்ணாமலை சட்டமன்ற தொகுதியில் போட்டியிட சீட் கேட்டு வாங்கி வந்தார். இதனால் கட்சியின் மூத்த நிர்வாகிகள் இடையே அதிருப்தி ஏற்பட்டது. ஆனாலும் அதை வெளியில் காட்டாமல் அவர்கள் தேர்தல் வேலைகளை செய்து வந்தனர்.
வாக்குப் பதிவுக்கு முன்னர் சென்னை சென்ற தணிகைவேல் அதன் பிறகு அரசியல் நிகழ்ச்சிகளில் தென்படவில்லை. திமுக தரப்பில் ஓட்டுக்கு ரூ 500 தரப்பட்டது. ஆனால் தணிகைவேல் தரப்பில் ஒரு கிராம் தங்கம் வழங்கப்படும் என டோக்கன் வினியோகம் செய்யப்பட்டது.
தணிகை வேலுவின் ஆதரவாளராக இருந்த பாஜக மாவட்ட துணைத்தலைவர் அருணை ஆனந்தனிடம் சில பகுதிகளுக்கு டோக்கன் தரும் பொறுப்பு வழங்கப்பட்டது. ஆனால் ஒரு சில ஏரியாக்களுக்கு இந்த டோக்கன் வினியோகிக்கபடாததால் அருணை ஆனந்தனுக்கும் தணிகை வேலுக்கும் கருத்து வேறுபாடு உண்டானது. தன்னிடம் தணிகைவேல் தேர்தல் செலவுக்காக வாங்கிய ஒரு 28 லட்சத்தை அருணை ஆனந்தன் திருப்பி கேட்கவே அவர்களிடையே மோதல் ஏற்பட்டது.
இந்த மோதல் முற்றி கடந்த ஏப்ரல் 27-ஆம் தேதி அருணை ஆனந்தன் வீட்டின் மீது பெட்ரோல் குண்டு வீசப்பட்டது. இது சம்பந்தமாக போலீசார் வழக்குப்பதிவு செய்து தணிகைவேல் ஆதரவாளர்கள் 2 பேரை கைது செய்தனர்.
இந்நிலையில் 96 ஆயிரத்து 234 வாக்குகள் வித்தியாசத்தில் பாஜக வேட்பாளரை தோற்கடித்து திமுக வேட்பாளர் எ.வ.வேலுவெற்றி பெற்றார். அதன் பிறகு தணிகைவேல் பாஜக நிகழ்ச்சிகளில் பங்கேற்கவில்லை. சமீபத்தில் திருவண்ணாமலையில் பாஜக தலைவர் அண்ணாமலை கலந்து கொண்ட கட்சிக் கூட்டத்திலும் அவர் பங்கேற்கவில்லை.
இந்நிலையில் தணிகைவேல் பாரதிய ஜனதா கட்சியில் இருந்து நீக்கம் செய்யப்பட்டிருப்பதாக அக்கட்சியின் மாநில பொதுச்செயலாளர் கரு.நாகராஜன் அறிவித்துள்ளார்.
இது சம்பந்தமாக அவர் இன்று வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது¸
திருவண்ணாமலை தெற்கு மாவட்டம்¸ வணிக பிரிவின் மாநில துணை தலைவர் திரு. s. தணிகைவேல் அவர்கள் கட்சியின் கட்டுப்பாட்டை மீறியும்¸ தற்பொழுது கட்சியில் எவ்வித செயல்பாடும் இல்லாத காரணத்தினால்¸ மாநில தலைவர் திரு. K. அண்ணாமலை Ex.IPS அவர்களின் ஒப்புதலுடன் கட்சியின் பொறுப்பில் இருந்தும்¸ அடிப்படை உறுப்பினரிலிருந்தும் நீக்கப்படுகிறார்.
ஆகவே கட்சியின் நிர்வாகிகள் மற்றும் உறுப்பினர்கள் அவரிடம் கட்சி சார்பாக எவ்வித தொடர்பும் வைத்துக் கொள்ள வேண்டாம் என அறிவுறுத்தப்படுகின்றது.
இவ்வாறு அந்த அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.
திருவண்ணாமலையில் பா.ஜ.க நிர்வாகிகள் கூட்டத்தை நடத்திய தமிழக பா.ஜ.க தலைவர் அண்ணாமலை,திருவண்ணாமலையில் போட்டியிட்ட நமது வேட்பாளர் எங்கே? என கேட்டுள்ளார். அப்போது தணிகைவேலின் நடவடிக்கைகள் குறித்தும்¸ கட்சி நிர்வாகியிடம் பணம் வாங்கி பிரச்சனை ஆனது குறித்தும் அண்ணாமலையிடம் நிர்வாகிகள் தெரிவித்துள்ளனர்.
இப்படிப்பட்ட ஆட்கள் பா.ஜ.கவிற்கு தேவையில்லை¸ அவர் கட்சியிலிருந்து விரைவில் நீக்கப்படுவார் என அண்ணாமலை¸ கட்சி நிர்வாகிகளிடம் சொல்லி விட்டு சென்றாராம்.
அதன்பிறகே கட்சியிலிருந்து தணிகைவேல் நீக்கப்பட்டிருக்கிறார்.