வந்தவாசி அருகே சாலையோரம் வசித்து வந்த மனநிலை பாதித்தவரும்¸ அவரது தாயாரும் கலெக்டர் உத்தரவின் பேரில் மறுவாழ்வு இல்லத்தில் சேர்க்கப்பட்டனர்.
பத்திரிகை மற்றும் சமூக வலைதளங்களில் வெளியான செய்தியை பார்த்து மறுநாளே அவர்களை மீட்டதுடன் மட்டுமன்றி தேவையான வசதிகளை செய்து தரவும் கலெக்டர் நடவடிக்கை எடுத்துள்ளார்.
திருவண்ணாமலை மாவட்டம்¸ வந்தவாசி தாலுக்கா¸ தேசூர் கிராமத்தை சேர்ந்தவர் ரகிமாபீ. கால் பாதிக்கப்பட்ட மாற்றுத்திறனாளி. இவரது மகன் எம்.அஸ்லாம்¸ மனநலம் பாதிக்கப்பட்டவர். இவர்கள் வசித்து வந்த வீடு எரிந்து சேதமானது. இதனால் அவர்கள் தங்க இடம் இல்லாமல் கடந்த மூன்று மாதங்களாக சாலையோரம் வசித்து வந்தனர்.
எந்தவித பராமரிப்பும் இல்லாமல் அவர்கள் சாலையோரம் வசித்து வரும் செய்தி நாளிதழ்கள் மற்றும் சமூக வலைதளங்களில் 18.08.2021 தேதி அன்று வெளியானது. இதைப் பார்த்ததும் மாவட்ட ஆட்சித்தலைவர் பா.முருகேஷ் தாய் மற்றும் மகனை உடனடியாக மீட்டு உடல் ஊனமுற்றோருக்கான மறுவாழ்வு இல்லத்தில் சேர்த்து அவர்களை பராமரிக்க தேவையான ஏற்பாடுகளை செய்யுமாறு திருவண்ணாமலை மாவட்ட மாற்றுத்திறனாளிகள் நல அலுவலருக்கு உத்தரவிட்டார்.
இதைத் தொடர்ந்து மனநலன் பாதிக்கப்பட்ட மாற்றுத்திறனாளி நபர் எம்.அஸ்லாமையும்¸ அவரது தாயாரும்¸ கால் பாதிக்கப்பட்ட மாற்றுத் திறனாளியுமான ரகிமாபீயையும் 19.08.2021 தேதி திருவண்ணாமலை மாவட்ட மாற்றுத்திறனாளிகள் நல அலுவலர் மீட்டார். இருவரும் சேத்பட்டு வட்டம்¸ சூசைநகரில் உள்ள புனித அமலராக்கினி மனநலம் பாதிக்கப்பட்டடோருக்கான மறுவாழ்வு இல்லத்தில் சேர்க்கப்பட்டனர்.
மனநலன் பாதிக்கப்பட்ட அஸ்லாம் என்பவருக்கு உரிய மருத்துவ பரிசோதனைகள் மற்றும் சிகிச்சை அளித்திடவும்¸ தொடர்ந்து எவ்வித கட்டணமும் இன்றி உணவு¸ உடை¸ மருந்துகள் அளித்து மறுவாழ்வு இல்லத்தில் தங்கிடவும்¸ தாயாருக்கு உடல் ஊனமுற்றோருக்கான மாதாந்திர உதவித் தொகை கிடைக்கவும் மாவட்ட ஆட்சித் தலைவர் ஏற்பாடுகளை செய்துள்ளார்.
செய்தி வெளியான ஒரு நாளுக்குள் மிகவும் வேகமாக துரித நடவடிக்கை மேற்கொண்டு கட்டணமின்றி உரிய மருத்துவ வசதிகளுடன் இல்லத்தில் சேர்த்த மாவட்ட ஆட்சித்தலைவருக்கு, ரகிமாபீ நன்றி தெரிவித்துக் கொண்டார்.