ஆரணியில் 4 பெண்களை வீட்டில் பூட்டி சிறை வைத்த கடன்காரர் கைது செய்யப்பட்டார். 3 மணி நேரமாக தவித்த அவர்களை போலீசார் மீட்டனர்.
திருவண்ணாமலை மாவட்டம் ஆரணி டவுன் பெரியார் நகரை சேர்ந்தவர் ரகு (வயது 57) கூலி தொழிலாளி. இவரது மனைவி அஞ்சுகம் அரசு ஆரம்ப சுகாதார நிலையத்தில் ஓப்பந்த பணியாளராக பணிபுரிந்து வருகின்றார். இவர்களுக்கு ரித்விகா (17)¸ சத்விகா (17)¸ ரிஷ்கா (15) ஆகிய 3 மகள்கள் உள்ளனர்.
அஞ்சுகத்தின் பெயரில் சொந்தமாக வீடு உள்ளது. ரகுவின் தங்கை வீட்டுக்காரர் கேஷ்டிராஜா. ஆரணி என்.எஸ் நகரில் வசித்து வருகிறார். இவர் ஆரணி அரசு மருத்துவமனையில் செக்ரியூட்டியாக பணிபுரிந்து வருகிறார். ஒன்றை வருடத்திற்கு முன்பு கேஷ்டிராஜாவிடம் வீட்டின் பத்திரத்தை வைத்து ரகு ரூ.2 லட்சத்து 50 ஆயிரத்தை கடனாக வாங்கியிருந்தாராம்.
கொரோனா காலத்தில் இந்த கடனை திருப்பி செலுத்த முடியாமலும்¸ வட்டி கட்ட முடியாமலும் ரகுவும்¸ அவரது மனைவியும் சிரமப்பட்டு வந்தனர். கேஷ்டிராஜாவும் பணத்தை திருப்பி கேட்டு நச்சரித்து வந்தார்.
இந்நிலையில் இன்று காலை ரகு தனது மனைவி அஞ்சுகத்தை வேலையில் விட்டு விட்டு வீடு திரும்பினார். அப்போது கேஷ்டிராஜா ரகுவின் வீட்டை பூட்டிக் கொண்டு சாவியை எடுத்துக் கொண்டு சென்று விட்டார். இதனால் வீட்டில் இருந்த ரகுவின் 3 மகள்களும்¸ உறவினரின் மகள் யோகேஷ்வரியும் வீட்டுக்குள் சிக்கிக் கொண்டு வெளியே வர முடியாமல் செய்வதறியாது வீட்டின் கேட்டை பிடித்துக் கொண்டு நின்று கொண்டிருந்தனர்.
3 மணி நேரமாக தவித்த அவர்களை ஆரணி நகர போலீசார் வீட்டின் பூட்டை திறந்து மீட்டனர். இது குறித்து அஞ்சுகம் ஆரணி நகர போலீசில் புகார் செய்தார். போலீசார் வழக்குப்பதிவு செய்து கடனுக்காக பெண்களை பூட்டி சிறை வைத்த கேஷ்டிராஜாவை கைது செய்தனர்.
இச்சம்பவம் ஆரணி பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.