குண்டும் குழியுமாக உள்ள சாலையில் பெண்கள் திரண்டு நாற்று நட்டதால் பரபரப்பு ஏற்பட்டது. இதே போல் குடிநீருக்காக சாலைமறியலிலும் பெண்கள் ஈடுபட்டனர்.
திருவண்ணாமலை பாலாஜி நகர் 1-வது தெருவில 100க்கும் மேற்பட்ட குடும்பத்தினர் வசித்து வருகின்றனர். இங்குள்ள சாலை குண்டும் குழியுமாக இருந்து வருகிறது. மேலும் கால்வாய் கட்டுவதற்காக தோண்டப்பட்ட பெரிய அளவிலான பள்ளம் அப்படியே இருந்து வருகிறது. இதன் காரணமாக அந்த தெரு மழை நீரும்¸ சாக்கடை நீரும் தேங்கி சேறும் சகதியுமாக காட்சியளித்து வருகிறது.
இது சம்மந்தமாக அப்பகுதி மக்கள் நகராட்சி அதிகாரிகளிடம் முறையிட்டும்¸ மனு அளித்தும் நடவடிக்கை ஏதும் எடுக்கப்படவில்லை. இதையடுத்து போராட்டம் நடத்த முடிவு எடுக்கப்பட்டது. அந்த தெருவில் குடியிருக்கும் பெண்கள் இன்று 19-08-2021 சேறும்¸ சகதியுமாக உள்ள இடங்களில் நாற்று நட்டனர். அந்த தெருவில் முக்கிய பிரமுகர்கள் வசிக்கும் பகுதியில் மட்டும் தோண்டப்பட்ட பள்ளங்களில் கால்வாய்கள் கட்டி முடிக்கப்பட்டு விட்டதாகவும்¸ மற்ற இடங்களை கண்டு கொள்ளாமல் விட்டு விட்டதாகவும் அப்பகுதி மக்கள் குற்றம் சாட்டினர். பொதுமக்களின் போராட்டத்தை கேள்விப்பட்டும் நகராட்சி அதிகாரிகள் யாரும் வந்து பேச்சு வார்த்தை நடத்த வரவில்லை.
இதையடுத்து போலீசார் வந்து அவர்களுடன் பேசி போராட்டத்தை கைவிடச் செய்தனர்.
சாலை மறியல்
திருவண்ணாமலை நகரில் பல இடங்களில் குடிநீர் விநியோகம் சீராக வழங்கப்படாத நிலை இருந்து வருகிறது. 10 நாட்களுக்கு மேலாக குடிநீர் வராத பகுதிகளும் உள்ளது. மேலும் சில பகுதிகளில் அசுத்தமான குடிநீரும் விநியோகிக்கப்படுகிறது. திருவண்ணாமலை அண்ணாநகர் 9வது தெருவில் கடந்த 15 நாட்களாக குடிநீர் விநியோகம் செய்யாததால் தண்ணீருக்காக அப்பகுதி மக்கள் அலையும் நிலை ஏற்பட்டது. இது சம்மந்தமாக புகார் தெரிவித்தும் நகராட்சி அதிகாரிகள் கண்டும்¸ காணாமல் இருந்து உள்ளனர்.
இதையடுத்து இன்று காலை திருவண்ணாமலை- தண்டராம்பட்டு சாலையில் அண்ணாநகர் 9வது தெருவைச் சேர்ந்த பெண்கள் சாலைமறியல் போராட்டத்தை நடத்தினர். மேலும் மனித சங்கலி போல் கைகளை கோர்த்து கொண்டு பஸ்களை மறித்து நின்றனர். இதனால் அப்பகுதியில் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.
தகவல் கிடைத்ததும் நகராட்சி அதிகாரிகள் வந்து இனிமேல் தடங்கலின்றி குடிநீர் வழங்கப்படும் என உறுதி அளித்ததால் பெண்கள் போராட்டத்தை தொடராமல் கைவிட்டனர்.