கண்ணமங்கலம் அருகே இரவில் வயல்வெளிக்கு சென்ற விதவை பெண் கழுத்து அறுபட்ட நிலையில் பிணமாக கிடந்தார். இது குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
திருவண்ணாமலை மாவட்டம் கண்ணமங்கலம் அடுத்த புதுப்பாளையம் கிராமத்தை சேர்ந்தவர் சாந்தி (45) கூலி தொழிலாளி. இவரது கணவர் இசக்கியப்பன் கடந்த 14 ஆண்டுகளுக்கு முன்பு இறந்துவிட்டார். இவருக்கு தீபா (15) என்ற 11ம் வகுப்பு படிக்கும் மகள் உள்ளார்.
இந்நிலையில் சாந்தி நேற்று இரவு 8-30 மணி அளவில் வீட்டுக்கு அருகில் உள்ள பலராமன் என்பருக்கு சொந்தமான நிலத்திற்கு சென்றார். பின்னர் வீடு திரும்பவில்லை. நேரம் ஆகியும் சாந்தி வராததால் அவரது மகள் தீபா தேடிப்பார்த்தார். ஆனால் சாந்தி கிடைக்கவில்லை. செல்போனிலும் சாந்தியை தொடர்பு கொள்ள முடிவில்லை.
இதனைத் தொடர்ந்து இன்று அதிகாலை அந்த வழியாக வந்த விவசாயத் தொழிலாளர்கள் சாந்தி கழுத்து அறுபட்ட நிலையில் பிணமாக கிடப்பதை பார்த்து அதிர்ச்சி அடைந்தனர். தகவல் கிடைத்ததும் கிராம நிர்வாக அதிகாரி கார்த்தி சம்பவ இடத்திற்கு சென்று பார்த்து போலீசுக்கு தகவல் தெரிவித்தார்.
விரைந்து வந்த கண்ணமங்கலம் போலீசார் பிணத்தை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக வேலூர் அடுக்கம்பாறை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். ஆரணி டி.எஸ்.பி கோட்டீஸ்வரன் நேரில் சென்று விசாரணை நடத்தினார். மோப்ப நாய் வரவழைக்கப்பட்டது. அது ஓடி சிறிது தூரம் வரை மோப்பம் பிடித்து ஓடி நின்று விட்டது.
சாந்தி இயற்கை உபாதை கழிப்பதற்காக அந்த நிலத்திற்கு செல்வது வழக்கம் என்றும்¸ அவரை கொலை செய்து¸ காதை அறுத்து கம்பலை பறித்து சென்றுள்ளதாக சாந்தியின் தம்பி சரவணன் தெரிவித்தார்.
இது சம்மந்தமாக கண்ணமங்கலம் போலீஸ் இன்ஸ்பெக்டர் விஜயகுமார் வழக்குப்பதிவு செய்து கொலையாளியை தேடி வருகிறார். ஆடைகள் கலைந்த நிலையில் சாந்தி அலங்கோலமாக இருந்ததால் அவரை யாராவது பலாத்காரம் செய்து கொலை செய்து விட்டு சென்று விட்டார்களா? அல்லது நகைக்காக கொலை நடந்துள்ளதா? என்ற கோணத்தில் போலீசார் விசாரணையை முடுக்கி விட்டுள்ளனர்.
தந்தை இல்லாத நிலையில் தன்னை கஷ்டப்பட்டு வளர்த்து படிக்க வைத்த தாயாரும் பிணமாக கிடந்ததை பார்த்து தீபா கதறி அழுதது பரிதாபத்தை ஏற்படுத்தியது.