முறைகேடு புகார்களால் திருவண்ணாமலை தாசில்தாரை அதிரடியாக மாற்றம் செய்து கலெக்டர் உத்தரவிட்டார்.
செங்கம் தாசில்தாராக இருந்த வெங்கடேசன் மாற்றப்பட்டு கடந்த வருடம் அக்டோபர் மாதம் 8ந் தேதி திருவண்ணாமலை தாசில்தாராக பொறுப்பேற்றுக் கொண்டார். சில மாதங்களில் ஏரி மணல் கடத்தல்¸ பட்டா மாற்றலில் முறைகேடு என அவர் மீது அடுக்கடுக்கான புகார்கள் கூறப்பட்டன. ரோட்டை பட்டா போட்டு கொடுத்த புகாரிலும் அவர் சிக்கினார். இது அனைவரையும் அதிர வைத்தது.
போலி பட்டா கொடுத்த விவகாரத்தில் அவர் மீது மாவட்ட ஆட்சித் தலைவர் பா.முருகேஷ்சிடம் புகார்கள் கொடுக்கப்பட்டன. அந்த புகார்கள் குறித்த விவரம் வருமாறு¸
திருவண்ணாமலை ஒன்றியம் வேங்கிக்கால் கிராமத்தில் வசிக்கும் ஜெகதீசன் மற்றும் அவரது உறவினர்கள் ஆகியோர் சேர்ந்து அளித்த மனு¸
எங்களுடைய தாத்தா வேலாயுத முதலியார் கடந்த 1957ஆம் ஆண்டு ராஜமாணிக்கம் என்பவரிடம் கிரையம் பெற்று அனுபவித்து வந்த சொத்தினை¸ எங்களுடைய தந்தை உள்ளிட்ட பிற வாரிசுதாரர்களுக்கு பதிவு செய்யப்பட்ட உயில் எழுதி வைத்தார். அவர் மறைவிற்குப் பின் நாங்கள் கூட்டுக் குடும்பமாக எந்தப் பிரிவினையும் இல்லாமல் இதுவரையில் அனுபவித்து வந்தோம். எங்களது பக்கத்து நிலத்தை சேர்ந்த அண்ணாமலை மற்றும் ஆரிமுத்து ஆகியோர் தங்களுக்கு பாத்தியப்பட்ட நிலத்தினை கடந்த 35 ஆண்டுகளுக்கு முன்பு வேறு நபர்களுக்கு கிரையம் செய்து கொடுத்துவிட்டார்.
தாசில்தார் வெங்கடேசன் |
தற்சமயம் நாங்கள் அனுபவித்து வரும் சொத்தினை எந்த ஒரு பட்டா மாறுதலுக்கான நடைமுறையும் பின்பற்றாமல் போலி ஆவணங்களைக் கொண்டு கடந்த 24.06. 2021 அன்று ஒரே நாளில் அண்ணாமலை மற்றும் ஆரிமுத்து ஆகியோர் வாரிசுதாரர்களுக்கு எங்கள் நிலத்தில் அனுபவம் உள்ளதாக பட்டா மாறுதல் செய்து அடங்கலும் வழங்கியுள்ளனர்.
ஆகவே கடந்த 64 ஆண்டுகளாக எந்த வில்லங்கமும் இல்லாமல் நாங்கள் ஆண்டு அனுபவித்து வந்த சொத்தினை எந்தவித உரிமையும்¸ பாத்தியமும் இல்லாத¸ எங்களுக்கு மட்டுமே பாத்தியப்பட்ட நிலத்தினை போலியான ஆவணங்கள் கொண்டு ஒரே நாளில் பட்டா பெயர் மாற்றம் செய்த தாசில்தார் வெங்கடேசன் உள்ளிட்ட அலுவலர்கள் மீது நடவடிக்கை எடுக்கவும்¸ மேற்படி பட்டாவை ரத்து செய்யவும்¸ அவர்கள் மீது மோசடி வழக்கு பதிவு செய்து தகுந்த நடவடிக்கை எடுக்க கேட்டுக் கொள்கிறோம்.
இவ்வாறு மனுவில் குறிப்பிட்டுள்ளது.
திருவண்ணாமலை முத்துவிநாயகர் கோவில் தெருவில் வசிப்பவர் ஸ்ரீராமுலு இவரது மனைவி மீனாட்சி மற்றும் இவரது உறவினர்கள் 19.07.2021 அன்று அளித்த புகார் மனுவில் எங்களுக்குரிய இடத்தினை உரிய ஆவணங்களுடன் ஏ.பி.ரமேஷ் என்பவருக்கு கிரையம் செய்து கொடுத்தோம். இந்த இடம் அவர் அனுபவத்தில் இருந்து வருகிறது. இந்நிலையில் இந்த இடத்தினை தாசில்தார் வெங்கடேசன் அடிஅண்ணாமலை கிராமத்தைச் சேர்ந்த லலிதா என்பவருக்கு முறைகேடாக பட்டா மாற்றம் செய்து கொடுத்துள்ளார். அந்த நிலத்தின் அருகிலுள்ள தார்சாலைகளுக்கும் பட்டா வழங்கப்பட்டுள்ளது என தெரிவித்துள்ளனர்.
சாலையை பட்டா போட்டு கொடுத்ததற்கான ஆவணங்களையும் மனுவோடு சேர்த்து அளித்தனர். இதனால் கலெக்டர் அதிர்ச்சி அடைந்தார். இது குறித்து உரிய விசாரணை நடத்த உத்தரவிட்டார்.
இந்த புகார்கள் விஸ்வரூபம் எடுத்ததால் சஸ்பெண்ட் நடவடிக்கையிலிருந்து தப்பிக்க மீண்டும் குறிப்பிட்ட இடங்களை மனுதார்களுக்கே பட்டா மாறுதல் செய்து கொடுத்தாராம் தாசில்தார் வெங்கடேசன்.
இந்நிலையில் 2 தினங்களுக்கு முன்பு பட்டா மாற்றப்பட்ட பிரச்சனையில் இருதரப்புக்கிடையே தாலுகா அலுவலகத்தில் தாசில்தார் வெங்கடேசன் முன்னிலையில் வாக்குவாதம் ஏற்பட்டது. ஒரு கட்டத்தில் இரு தரப்புக்கும் கைகலப்பு ஏற்படும் சூழல் உருவானது. இதனால் அங்கு பரபரப்பு ஏற்பட்டது. தாலுகா அலுவலக வளாகத்தில் இருந்த பொதுமக்கள் ஏராளமானோர் கூடி சண்டையை வேடிக்கை பார்த்தனர். இந்த சம்பவம் மாவட்ட ஆட்சித் தலைவரின் கவனத்திற்கு கொண்டு செல்லப்பட்டது.
இதையடுத்து தாசில்தார் வெங்கடேசன் அதிரடியாக மாற்றம் செய்யப்பட்டார். அவரை சென்னை- சேலம் தேசிய நெடுஞ்சாலை பிரிவு தனி தாசில்தாராக மாற்றம் செய்து மாவட்ட ஆட்சித் தலைவர் பா.முருகேஷ் உத்தரவிட்டார். திருவண்ணாமலை மாவட்டத்தில் பணியாற்றும் தாசில்தார்களில் இவர் ஒருவர் மட்டுமே மாற்றம் செய்யப்பட்டது குறிப்பிடத்தக்கது.
தாசில்தார் சுரேஷ் |
வெங்டேசனுக்கு பதில் எஸ்.சுரேஷ் என்பவர் திருவண்ணாமலை தாசில்தாராக நியமிக்கப்பட்டுள்ளார். இவர் இதற்கு முன்பு சென்னை- சேலம் தேசிய நெடுஞ்சாலை பிரிவு தனி தாசில்தாராக பணியாற்றி வந்தார். இன்று(26-08-2021) அவர் திருவண்ணாமலை தாசில்தாராக பொறுப்பேற்றுக் கொண்டார்.