
மேல்சோழங்குப்பம் மாணிக்கம்
திருவண்ணாமலை அருகே பெற்றோர்களை பராமரிக்காமல் கைவிட்ட மகன்களிடமிருந்து சொத்தை மீட்டு கொடுத்தார் திருவண்ணாமலை மாவட்ட ஆட்சித் தலைவர்.

கலெக்டரின் இந்த நடவடிக்கை பெற்றோர்களை பரிதவிக்கவிடும் பிள்ளைகளுக்கு பாடமாக அமைந்துள்ளது.
இந்தியாவில் உள்ள மக்கள் தொகையில் இனி வரும் காலங்களில் முதியோர்கள் 20 சதவீதம் பேர் இருப்பார்கள் என கணக்கீடு செய்யப்பட்டிருக்கிறது. இது மட்டுமன்றி உலகிலேயே 60 வயதை கடந்தவர்கள் அதிகமாக உள்ள நாடுகளில் இந்தியாவும் ஒன்றாக உள்ளது. இப்படிப்பட்ட சூழலில் இன்றைய உலகில் பெற்றோர்களை¸ பிள்ளைகள் கவனிக்காமல் விட்டு விடுவது அதிகரித்து வருவது வேதனை அளிக்கும் விஷயமாகும்.
இந்நிலையில் 2007 ஆம் ஆண்டு நிறைவேற்றப்பட்ட குடிமக்கள் பாதுகாப்பு மற்றும் நல்வாழ்வு சட்டத்தில் முக்கிய சில திருத்தங்களை மத்திய அரசு செய்துள்ளது. இச்சட்டத்தின்படி மூத்த குடிமக்கள் தங்கள் பிள்ளைகளிடமிருந்து உணவு உடை மருத்துவ சிகிச்சை போன்றவை கிடைக்கவில்லை என்றால் புகார் செய்யலாம்.குற்றம் நிரூபிக்கப்பட்டால் பிள்ளைகள் கைது செய்யப்படுவார்கள்.இது மட்டுமன்றி மாமனார்¸ மாமியாரை பராமரிக்காமல் விட்டாலும் தண்டனை வழங்கும் வகையில் சட்டம் கொண்டு வரப்பட்டுள்ளது. இச்சட்டத்தின் படி பெற்றோரை தவிக்க விட்ட மகனுக்கு அகமதாபாத் நீதி மன்றம் 4 வருடம் சிறை தண்டனை அளித்தது குறிப்பிடத்தக்கது.
திருவண்ணாமலை மாவட்டத்தில் கடந்த 2018 ஆம் ஆண்டு கீழ்பென்னாத்தூர் தாலுக்காவைச் சேர்ந்த கண்ணன் (75) என்பவர் தனது மனைவி பூங்காவனத்துடன் வந்து அப்போதைய கலெக்டர் கந்தசாமியிடம் தங்களது மகன்கள் தங்களிடமிருந்து 5 ஏக்கர் நிலத்தை எழுதி வாங்கிக்கொண்டு தங்களுக்கு உணவு அளிக்காமல் துன்புறுத்தி வருவதாகவும்¸ இதனால் வாழ வழியில்லாமல் தவித்து வருவதாகவும் புகார் அளித்தார். இதன்பேரில் பெற்றோர் மற்றும் மூத்த குடிமக்கள் பராமரிப்பு சட்டத்தின் கீழ் இரு மகன்களுக்கும் நிலத்தை வழங்கியதற்கான பத்திரப் பதிவுவை மாவட்ட ஆட்சித் தலைவர் கந்தசாமி ரத்து செய்து கொடுத்தார். கலெக்டரின் இந்த அதிரடி நடவடிக்கை தமிழ்நாட்டில் பெற்றோர்களை நடுத்தெருவில் நிறுத்துபவர்கள் மத்தியில் அதிர்வலையை ஏற்படுத்தியது.
![]() |
உடையானந்தல் ராயர் |
அதன்பிறகு தற்போது திருவண்ணாமலை மாவட்ட ஆட்சியர் பா.முருகேஷ் பெற்றோர் மற்றும் மூத்த குடிமக்கள் பராமரிப்பு சட்டத்தின் கீழ் நடவடிக்கைகளை எடுத்துள்ளார். அதன் விவரம் வருமாறு¸
திருவண்ணாமலை கலெக்டர் அலுவலகத்தில் கடந்த 20ஆம் தேதி வயதான தம்பதிகள் இரண்டு பேர் மாவட்ட ஆட்சித்தலைவர் அலுவலகத்திற்குள் செல்ல முடியாமல் சோர்ந்து போய் படிகட்டிலேயே மனுவை கையில் வைத்துக் கொண்டு அமர்ந்திருந்தனர். இதைக் கேள்விப்பட்டு தனது அறையில் இருந்து கீழே இறங்கி வந்த மாவட்ட ஆட்சித்தலைவர் பா.முருகேஷ் அவர்களிடமிருந்து மனுவை பெற்று படித்துப் பார்த்தார்.அதில் அவர்கள் தங்கள் மகன்கள் இரண்டு பேரும் தன்னிடம் இருந்த நிலத்தை ஏமாற்றி வாங்கிக்கொண்டு தங்களை கைவிட்டு விட்டதாக தெரிவித்திருந்தனர். இது சம்பந்தமாக உரிய நடவடிக்கை எடுப்பதாக ஆறுதல் சொல்லி அவர்களை அனுப்பி வைத்தார் மாவட்ட ஆட்சித் தலைவர். இந்த மனு மீது விசாரணை செய்து அறிக்கை தருமாறு ஆரணி ஆர்.டி.ஓவுக்கு அவர் உத்தரவிட்டிருந்தார்.
மனு கொடுத்தவர் பெயர் மாணிக்கம் (வயது 85). மனைவி பெயர் சின்னம்மாள் (75) திருவண்ணாமலையை அடுத்த கலசப்பாக்கம் வட்டம் மேல்சோழங்குப்பம் கிராமத்தை சேர்ந்தவர்கள். இவர்களுக்கு காத்தவராயன்¸ ஜெயலட்சுமி¸ ஜான்சிராணி¸ சங்கர்¸ செல்வி ஆகிய 5 பிள்ளைகள் உள்ளனர் அனைவருக்கும் திருமணமாகி விட்டது. மாணிக்கம் தான் சுயமாக சம்பாதித்த சொத்துக்களில் மேல்சோழங்குப்பத்திலுள்ள 3 ஏக்கர் நிலத்தை தனது மகன்கள் காத்தவராயன்¸ சங்கர் ஆகியோரது பெயர்களுக்கு கடந்த 2018 அன்று தான செட்டில்மென்ட் எழுதி கொடுத்துள்ளார்.
மீதி உள்ள ஒன்றரை ஏக்கர் மற்றும் 378 சதுர மீட்டர் நிலம் மட்டும் மாணிக்கம் பெயரில் இருந்து வந்தது. அந்த நிலத்தில் இரண்டு வீடுகளும் இருந்துள்ளன. இதில் காத்தவராயனும்¸ சங்கரும் வசித்து வந்துள்ளனர். மாணிக்கமும் அவரது மனைவியும் அந்த நிலத்துக்கு அருகில் சாலையோரம் குடிசை போட்டு வசித்து வந்துள்ளனர். மின் இணைப்புக்கு பெயர் மாற்றம் செய்ய வேண்டும் என பொய்யாக கூறி மாணிக்கத்தை அவரது மகன்கள் காத்தவராயனும்¸சங்கரும் கடலாடி சார் பதிவாளர் அலுவலகத்திற்கு கடந்த பிப்ரவரி மாதம் 8ந் தேதி அழைத்துச் சென்று அவரது பெயரில் உள்ள நிலங்களை தான செட்டில்மெண்டாக எழுதி வாங்கியுள்ளனர்.
அதன் பிறகு தாய் தந்தையை கவனிக்காமல் கைவிட்டுவிட்டு 2018ஆம் ஆண்டு எழுதி வாங்கிய நிலத்துக்கு குடியேறிவிட்டனர். இதனால் உணவு. உடை¸ மருத்துவ வசதி இன்றி வயதான தம்பதிகள் இருவரும் அவதிப்பட்டு வந்துள்ளனர். இதுபற்றி கேட்டதற்கு அவர்கள் மிரட்டி அடிக்க வந்ததாகவும் சொல்லப்படுகிறது தன்னை ஏமாற்றிய மகன்களிடம் உள்ள தனது சொத்தை மீட்க வேண்டும் என்ற உறுதியோடு தள்ளாத வயதிலும் மாணிக்கம் தனது மனைவியோடு கலெக்டரை தேடி வந்து மனுவை அளித்துள்ளார்.
இந்த மனு மீது ஆரணி ஆர்.டி.ஓ கவிதா விசாரணை நடத்தினார் .விசாரணை நடப்பதை தெரிந்து கொண்டு காத்தவராயனும்¸ சங்கரும் தலா ரூ.3000 வீதம்¸ ரூ.6 ஆயிரத்தை தனது தந்தையின் வங்கி கணக்கில் செலுத்தி மேல் நடவடிக்கையிலிருந்து தப்பித்துக் கொள்ளலாம் என பார்த்துள்ளனர். ஆனால் மகன்கள் கொடுத்த பணத்தை வேண்டாம் என மறுத்து விட்ட மாணிக்கம் தன்னை ஏமாற்றி வாங்கிய நிலத்தை திரும்பப் பெறுவதில் உறுதியாக இருந்தார். முதியோர் உதவித்தொகை மூலம் ரூ 1000 வருவதையும்¸ அரசு மீட்டுத் தரும் நிலத்தை குத்தகைக்கு விட்டு அதன் மூலம் வரும் பணத்தையும் வைத்துக் கொண்டு தாங்கள் வாழ்ந்து கொள்வதாகவும் மாணிக்கமும் அவரது மனைவியும் உறுதியாக கூறிவிட்டனர்.
இதையடுத்து காத்தவராயன் மற்றும் சங்கரிடமிருந்து 5 ஏக்கர் நிலங்களையும் மீட்டு மீண்டும் மாணிக்கத்தின் பெயருக்கு மாற்றி அதற்கான ஆவணத்தை மாவட்ட ஆட்சித் தலைவர் பா.முருகேஷ் இன்று(31-08-2021) மாவட்ட ஆட்சித் தலைவர் அலுவலகத்தில் நடைபெற்ற நிகழ்ச்சியில் வழங்கினார். இதன் மூலம் தந்தையை தவிக்க விட்டவர்கள் தற்போது நிலமின்றி தவிக்கும் நிலைக்கு தள்ளப்பட்டுள்ளனர்.
மனைவி புறக்கணிப்பதாக விவசாயி புகார்
இதே போல் திருவண்ணாமலை வட்டம் உடையானந்தல் கிராமத்தை சேர்ந்த ராயர் என்பவர் தன்னிடம் உள்ள சொத்தை பெற்றுக் கொண்டு தனது மனைவியும்¸ மகன் ஹரிதாசும் தன்னை பராமரிப்பதில்லை என்றும்¸ வீட்டை விட்டு அடித்து விரட்டி விட்டதாகவும்¸ தனது வாழ்வாதாரத்தை பாதுகாத்துக் கொள்ளும் வகையில் மகன் மீது எழுதி வைத்த நிலத்தில் இரண்டு ஏக்கரை மீண்டும் தனது பெயருக்கு மாற்றித் தரும்படி கண்ணீர் மல்க மாவட்ட ஆட்சித் தலைவரிடம் மனு அளித்திருந்தார்.
இதையடுத்து 2 ஏக்கர் நிலத்தை மீட்டு மீண்டும் ராயர் பெயருக்கு மாற்றி அதற்கான ஆணையையும் மாவட்ட ஆட்சித் தலைவர் பா.முருகேஷ் இன்று வழங்கினார்.
பெற்றோர்களை கைவிடும் மகன்களுக்கு கலெக்டரின் இந்த அதிரடி நடவடிக்கை பேரிடியாக அமைந்திருக்கிறது.