செங்கம் அருகே 10 நாட்களாக குடிநீர் வழங்காததால் ஆவேசமடைந்த பெண்கள் ரோட்டில் இறங்கி போராட்டம் நடத்தினர். அரசு பஸ்சை சிறை பிடித்ததால் பரபரப்பு ஏற்பட்டது.
திருவண்ணாமலை மாவட்டம் செங்கம் அடுத்த மேல் பள்ளிப்பட்டில் உள்ள சத்யா நகரில் நூற்றுக்கணக்கான மக்கள் வசித்து வருகின்றனர். இப்பகுதியில் சரிவர குடிநீர் விநியோகிப்பதில்லை என சொல்லப்படுகிறது. கடந்த சில மாதங்களாக 5 நாட்களுக்கு ஒரு முறை மட்டுமே குடிநீர் வழங்கப்படுவதாகவும்¸ அதுவும் சிறிது நேரம் மட்டுமே விடப்படுவதால் 5 குடம் அளவிற்கு கூட தண்ணீர் கிடைப்பதில்லை என பொது மக்களின் குற்றச்சாட்டாக உள்ளது.
இந்நிலையில் 5 நாட்களாக விடப்படும் தண்ணீரும் நிறுத்தப்பட்டு விட்டதாம். கடந்த 10 நாட்களாக குடிக்க தண்ணீரின்றி சத்யா நகர் குடியிருப்பு வாசிகள் அவதிப்பட்டு வந்தனர். இது பற்றி ஊராட்சி மன்றத் தலைவரிடம் சொல்லியும் அவர் நடவடிக்கை எடுக்கவில்லையாம்.
இதனால் ஆத்திரம் அடைந்த அப்பகுதி மக்கள் செங்கத்திலிருந்து இளங்குன்னி சென்ற அரசு பஸ்சை சிறை பிடித்தனர். பிறகு நூற்றுக்கும் மேற்பட்ட பெண்கள் செங்கம்- நீப்பத்துறை சாலையில் அமர்ந்து சாலைமறியல் போராட்டம் நடத்தினர். பெண்களின் இந்த ஆவேச போராட்டத்தின் காரணமாக அந்த பகுதியில் 2 மணி நேரத்திற்கும் மேலாக போக்குவரத்து அடியோடு பாதிக்கப்பட்டது.
தகவல் கிடைத்ததும் மேல்செங்கம் போலீசார் வந்து அவர்களிடம் பேச்சு வார்த்தை நடத்தினர். குடிநீர் தங்கு தடையின்றி வழங்குவதாக பி.டி.ஓ வந்து உத்தரவாதம் கொடுத்தால்தான் போராட்டத்தை கைவிடுவோம் என சுட்டெரிக்கும் வெயிலையும் பொருட்படுத்தாமல் காலி குடங்களுடன் ரோட்டில் உட்கார்ந்திருந்தனர்.
இதையடுத்து செங்கம் ஊராட்சி ஒன்றிய அதிகாரிகள் வந்து பேச்சு வார்த்தை நடத்தினர். மேநீர் தேக்கத் தொட்டி கட்டும் திட்டம் செயல்படுத்தப்படாமல் இருப்பதாகவும்¸ அதற்காக தோண்டப்பட்ட பள்ளத்தில் விழந்து சிலருக்கு காயங்கள் ஏற்பட்டுள்ளதாகவும்¸ மேநீர் தொட்டியை கட்டிய பிறகுதான் பைப்லைன் போட பள்ளம் தோண்ட வேண்டும் என பொதுமக்கள் தரப்பில் கோரிக்கை வைக்கப்பட்டது. இந்த கோரிக்கைகளை நிறைவேற்றித் தருவதாக அதிகாரிகள் தரப்பில் உறுதி அளிக்கப்பட்டதால் பொது மக்கள் போராட்டத்தை கைவிட்டனர்.