திருவண்ணாமலை மற்றும் 2 மாவட்டங்களைச் சேர்ந்த 10 ஆயிரம் பேர் விரைவில் தாய் மதம் திரும்ப உள்ளதாக அர்ஜூன் சம்பத் கூறினார்.
தாய் மதம் திரும்புவர்களுக்கு சான்றிதழ் அளிக்க கோயில்களில் சிறப்பு அலுவலரை தமிழக அரசு நியமிக்க வேண்டும் எனவும்¸ தடையை மீறி விநாயகர் சதுர்த்தி விழா கொண்டாடப்படும் எனவும் அவர் தெரிவித்தார்.
திருவண்ணாமலை பகுதியைச் சேர்ந்த ஒருவர் சென்னை புளியந்தோப்பு பகுதியில் வேலைக்கு சென்ற போது கிறிஸ்துவ மதத்திற்கு மாற்றப்பட்டார். இந்நிலையில் அவர் தனது குடும்பத்தினருடன் தாய் மதம் திரும்ப விருப்பம் தெரிவித்திருந்தார். இதற்கான நிகழ்ச்சி திருவண்ணாமலை அண்ணாமலையார் கோயிலில் இன்று(1-9-2021) காலை நடந்தது.
இதில் இந்து மக்கள் கட்சி தலைவர் அர்ஜூன் சம்பத் கலந்து கொண்டார். உரிய சடங்குகளுடன் தாய் மதத்திற்கு மாறியவர்களுக்கு தீட்சை வழங்கப்பட்டது. தாய் மதம் திரும்பியவருக்கு தேவா என்றும்¸ அவரது மனைவிக்கு இளங்கொடி எனவும் அர்ஜூன் சம்பத் பெயர் சூட்டினார்.
பிறகு கோயிலில் சாமி தரிசனம் செய்தார். அதன்பிறகு செய்தியாளர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறியதாவது¸
இந்தப் பகுதியிலே தலித் கிறிஸ்தவர்கள் என்று சொல்லப்படக் கூடியவர்கள் பெருமளவில் ஜாதிய ஒடுக்கு முறைகளுக்கு ஆளாகி வருகிறார்கள். அவர்களுக்கு தண்ணீர் தீண்டாமை¸ சுடுகாட்டு தீண்டாமை¸ சர்ச்சுக்குள் நுழைவதற்கு உரிமை மறுப்பு ஆகியவை நடந்திருப்பதால் தலித் கிறிஸ்தவர்கள் போராட்டம் நடத்தத் தொடங்கி இருக்கிறார்கள் அதில் பல பேர் எங்களை அணுகி நாங்கள் மீண்டும் தாய் சமயம் திரும்புகிறோம் என்று விருப்பம் தெரிவித்திருக்கிறார்கள்¸ எழுதிக் கொடுத்தும் இருக்கிறார்கள்.100 நாட்களுக்குள்ளாக 10 ஆயிரம் பேர் வரை விழுப்புரம்¸ கடலூர்¸ திருவண்ணாமலை மாவட்டங்களில் தாய் சமயம் திரும்புவதற்கு ஆயத்தமாகியிருக்கிறார்கள்.
இன்றைக்கு முதற்கட்டமாக ஒரு குடும்பத்தை நாங்கள் தாய் சமயம் திரும்புகின்ற நிகழ்ச்சியை இங்கே நடத்தி அண்ணாமலையார் தரிசனம் செய்து வைத்திருக்கின்றோம். இதுமாதிரியான நிகழ்ச்சிகள் தமிழகம் முழுக்க தொடரும். இந்து சமய அறநிலையத் துறைக்கு¸ தமிழக முதலமைச்சருக்கு ஒரு கோரிக்கை மனுவை இன்றைக்கு நாங்கள் அண்ணாமலையார் திருக்கோயில் வழியாக சமர்ப்பிக்கிறோம்.
தாய் சமயம் திரும்புகின்றவர்கள்¸அவர்களுடைய சுத்தி சடங்கை செய்து கொள்வதற்கும் அவர்களுக்கு நாமகரணம் சூட்டுவதற்கும்¸ அவர்களுக்கு சான்றிதழ் கொடுப்பதற்கும்¸ அறநிலையத்துறை¸ அறநிலையத்துறைக்கு சொந்தமான கோவில்களில் ஒரு சிறப்பு அலுவலரை நியமிக்க வேண்டும் அந்த தாய் சமயம் திரும்பக்கூடிய சான்றிதழை இந்த அரசாங்கம் வழங்கிட வேண்டும்.அந்த முயற்சியை இன்றைக்கு நாங்கள் தொடங்கியிருக்கிறோம். இந்த கோரிக்கை மனுவை தமிழக முதலமைச்சருக்கு அறநிலையத் துறை அமைச்சருக்கும் நாங்கள் அனுப்பி வைத்து இருக்கிறோம்.
தமிழக அரசாங்கம் விநாயகர் விழாக்களுக்கு தடை விதித்திருப்பது என்பது ஒரு தலைபட்சமானது தமிழர்களுக்கு எதிராக தமிழருடைய வழிபாட்டு உரிமைக்கு எதிராக விதிக்கப்பட்டிருந்த தடை என்பது தமிழர்களுக்கு இழைக்கப்பட்டிருக்கிற ஒரு அநீதியாக நாங்கள் கருதுகிறோம். இதை சட்டபூர்வமாகவும்¸ மக்கள் மத்தியிலும் நாங்கள் அணுகி விநாயகர் விழாக்களை தடையை மீறி கொண்டாடுவோம்.
கொரோனா விதிமுறைகளுக்கு உட்பட்டு¸ அரசாங்கம் விதிக்கக் கூடிய எல்லா நிபந்தனைக்கு உட்பட்டு விழாவை நடத்த நாங்கள் தயாராக இருக்கிறோம். விநாயகர் சிலை அமைப்பாளர்களை¸ விழா குழுவினரை அழைத்து அரசாங்கம் பேசியிருக்க வேண்டும். இது நியாயமில்லை. முதல்வர் மு.க.ஸ்டாலின்¸ விநாயகர் விழாவை சிறப்பாக கொண்டாடிட அனுமதி வழங்கிட வேண்டும். அவர்கள் அனுமதித்தாலும்¸ அனுமதிக்காவிட்டாலும் இந்து மக்கள் கட்சியின் சார்பில் தமிழகம் முழுக்க நாங்கள் இந்த விழாக்களை நடத்துவோம். எங்களுடைய வழிபாட்டு உரிமையை நிலைநாட்டிக் கொள்வதற்கு சத்தியாகிரகம் செய்யவும் தயாராக இருக்கிறோம்.
இவ்வாறு அவர் கூறினார்.