திருவண்ணாமலை மாவட்டத்தில் 19ந் தேதி முதல் திறக்கப்படும் உழவர் சந்தையில் விவசாயிகள் கையுறை அணிந்து காய்கறி விற்க மாவட்ட ஆட்சியர் உத்தரவிட்டுள்ளார்.
விவசாயிகள் தாங்கள் உற்பத்தி செய்த பொருளை நேரடியாக விற்பனை செய்ய திமுக ஆட்சி காலத்தில் தொடங்கப்பட்ட உழவர் சந்தை¸ கடந்த அதிமுக ஆட்சி காலத்தில் மேம்படுத்தப்படவில்லை. இந்நிலையில் தற்போது பொறுப்பேற்றுள்ள திமுக ஆட்சி¸ உழவர் சந்தைகளை பராமரிக்கவும்¸ புதியதாக 120க்கும் மேற்பட்ட உழவர் சந்தைகளை திறந்திடவும் திட்டமிட்டுள்ளது.
பொதுமக்களிடம் வரவேற்பை பெற்றுள்ள உழவர் சந்தைகள் கொரோனா தொற்றை கட்டுப்படுத்திடும் வகையில் கடந்த மே மாதம் 10ந் தேதி பிறப்பிக்கப்பட்ட முழு ஊரடங்கினால் மூடப்பட்டது. பிறகு ஊரடங்கில் பல்வேறு தளர்வுகள் அறிவிக்கப்பட்டதும் பல இடங்களில் உழவர் சந்தைகள் மீண்டும் திறக்கப்பட்டது. ஆனால் திருவண்ணாமலை மாவட்டத்தில் உழவர் சந்தைகள் திறக்கப்படாமல் இருந்தது. ஓட்டல்கள்¸ துணிக்கடைகள்¸ வணிக நிறுவனங்கள் திறக்கவும்¸ பஸ் போக்குவரத்துக்கும் அனுமதி அளித்த நிலையில் உழவர் சந்தை திறக்க அனுமதி அளிக்கப்படாதது குறித்து பத்திரிகையில் செய்தி வெளியானது.
இதையடுத்து விழித்து கொண்ட திருவண்ணாமலை மாவட்ட நிர்வாகம் வருகிற 19ந் தேதி முதல் உழவர் சந்தைகள் செயல்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது. இது குறித்து மாவட்ட ஆட்சியர் பா.முருகேஷ் வெளியிட்டுள்ள செய்தி குறிப்பில் கூறியிருப்பதாவது¸
தமிழக முதலமைச்சரின் உத்தரவுப்படி¸ பொது மக்களின் வாழ்வாதாரத்தை கருத்தில் கொண்டும்¸ பொருளாதாரத்தை மீட்டெடுக்கும் நோக்கத்திலும்¸ கோவிட்-19 ஊரடங்கு தளர்வுகள் பல்வேறு பணிகளுக்கு வரைமுறைகளுடன் அனுமதி அளிக்கப்பட்டுள்ளது.
திருவண்ணாமலை மாவட்டத்தில் உழவர் சந்தைகள் செயல்படவும்¸ விவசாயிகளின் விளைபொருட்கள் நுகர்வோருக்கு நேரடியாக உரிய விலையில் கிடைத்திடவும்¸ வேளாண் விற்பனை மற்றும் வேளாண் வணிகத் துறை மூலம் இயங்கும் திருவண்ணாமலை¸ தாமரை நகர்¸ செங்கம்¸ போளுர்¸ ஆரணி¸ செய்யாறு¸ வந்தவாசி மற்றும் கீழ்பென்னாத்தூர் ஆகிய 8 உழவர் சந்தைகள் வருகிற 19ந்தேதி முதல் செயல்படும் என்று அறிவிக்கப்படுகிறது.
மேலும்¸ அரசின் கோவிட்-19 வழிகாட்டு நடைமுறைகள் உழவர் சந்தைக்கு வரும் நுகர்வோர் மற்றும் விவசாயிகள் முகக்கவசம் அணிந்து¸ முறையான சமூக இடைவெளியை பின்பற்றுமாறு அறிவுறுத்தப்படுகிறது. விவசாயிகள் உரிய கிருமி நாசினி பயன்படுத்தி அடிக்கடி கைகளை கழுவுமாறும் மற்றும் கையுறைகள் அணிந்து காய்கறிகள் விற்பனை செய்யுமாறும் கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள்.
இவ்வாறு அவர் தெரிவித்துள்ளார்.
நீண்ட நாட்களுக்கு பிறகு உழவர் சந்தைகள் செயல்பட அனுமதி அளிக்கப்பட்டுள்ளதால் விவசாயிகளும்¸ பொதுமக்களும் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.