திருவண்ணாமலையில் நடைபெற்ற தனியார் வேலைவாய்ப்பு முகாமில் 384 பேருக்கு வேலைவாய்ப்பு கிடைத்தது. இதில் 20க்கும் மேற்பட்ட முன்னணி கம்பெனிகள் பங்கேற்றன.
திருவண்ணாமலை மாவட்ட நிர்வாகம்¸ திருவண்ணாமலை மாவட்ட வேலைவாய்ப்பு மற்றும் தொழில்நெறி வழிகாட்டும் மையம் இணைந்து படித்த வேலை வாய்ப்பற்ற இளைஞர்களுக்கு கல்வித் தகுதிகளுக்கு ஏற்ப வேலை வாய்ப்பை பெற்றுத்தரும் நோக்குடன் தனியார் துறை சிறப்பு வேலைவாய்ப்பு முகாம்களை ஒவ்வொரு பகுதிகளிலும் நடத்தி வருகிறது.
தனியார் துறைகளில் வேலைவாய்ப்பு பெறுபவர்களுக்கு அவர்களது வேலைவாய்ப்பு பதிவு ரத்து செய்யப்படமாட்டாது. அரசுத் துறைகளுக்கு அவர்களது பதிவு மூப்பின்படி அரசு பணிக்கு பரிந்துரைக்கப்படும். எனவே¸ வேலைவாய்ப்பு அலுவலகத்தில் பதிவு செய்துள்ள நபர்கள் தனியார் துறையில் வேலைக்கு சென்றால் தங்களது பதிவு ரத்து செய்யப்பட்டு விடுமோ என்று அச்சப்பட வேண்டியதில்லை என அரசு தெளிவுபடுத்தியிருந்தது.
இந்நிலையில் திருவண்ணாமலை மாவட்ட நிர்வாகம்¸ மற்றும் திருவண்ணாமலை மாவட்ட வேலைவாய்ப்பு மற்றும் தொழில்நெறி வழிகாட்டும் மையம் இணைந்து தனியார் துறை வேலைவாய்ப்பு முகாமை இன்று 25.09.2021 (சனிக்கிழமை) காலை 9 மணி அளவில் திருவண்ணாமலை மாவட்ட வேலைவாய்ப்பு மற்றும் தொழில்நெறி வழிகாட்டும் மைய வளாகத்தில் நடத்தியது.
இம்முகாமில் TVS Training & Services,Simho Hr Services Pvt Ltd, Arunai Info Services, HDFC, Kotak Mahindra, IDA Automation Pvt Ltd, Housur, 5K Car Networks, INS Data Services உள்ளிட்ட 20-க்கும் மேற்பட்ட முன்னணி நிறுவனங்கள் மற்றும் 3 திறன் பயிற்சி வழங்குபவர்கள் கலந்து கொண்டனர்.
இம்முகாமில் 1144 வேலைநாடுநர்கள் கலந்து கொண்டனர். இவர்களுக்கு CNC Operator, Supervisor, Machine Operator, Business Development Executive, HR Manager, Data Entry Operator, Apprentice உள்ளிட்ட பல பணியிடங்களுக்கு BSSLC, SSLC, HSC, DEGREE, DIPLOMA, ITI, BE, MBA உள்ளிட்ட கல்வித்தகுதி அடிப்படையில் நேர்முகத் தேர்வு நடத்தப்பட்டது.
இதில் 382 பேர் தேர்வு செய்யப்பட்டனர். இவர்களுக்கு பணி நியமன ஆணை உடனடியாக வழங்கப்பட்டது. வேலைவாய்ப்பு மற்றும் பயிற்சித் துறையின் சென்னை மண்டல இணை இயக்குநர் மு.சந்திரன் சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டு தேர்வு பெற்றவர்களுக்கு பணி நியமன ஆணைகளை வழங்கினார்.
இந்த நிகழ்ச்சிக்கு வந்தவர்களை திருவண்ணாமலை மாவட்ட வேலைவாய்ப்பு அலுவலர் லோ.யோகலட்சுமி வரவேற்றார். முடிவில் இளநிலை வேலைவாய்ப்பு அலுவலர் த.மோகன்ராஜ் நன்றி கூறினார்.