Homeசெய்திகள்மனு கொடுக்க 7ஆயிரம் பேர் குவிந்தனர்- கலெக்டர் திகைப்பு

மனு கொடுக்க 7ஆயிரம் பேர் குவிந்தனர்- கலெக்டர் திகைப்பு

மனு கொடுக்க 7ஆயிரம் பேர் குவிந்தனர்- கலெக்டர் திகைப்பு

திருவண்ணாமலை கலெக்டர் அலுவலகத்தில் மனு அளிக்க ஒரே நேரத்தில் 7 ஆயிரம் பேர் குவிந்ததால் பரபரப்பு உண்டானது. 

நீண்ட நாளிட்ட நிலப்பட்டா மாறுதல்¸ நில உடைமைப் பதிவுகள் மேம்பாட்டுத் திட்டத்தில் ஏற்பட்ட தவறுகள் திருத்தம் மற்றும் நத்தம் நிலவரித் திட்டத்தில் திருத்தம் ஆகியவற்றில் தீர்க்கப்பட வேண்டிய கோரிக்கைகள் குறித்து 22.09.2021 அன்று காலை 11.00 மணியளவில் திருவண்ணாமலை மாவட்ட ஆட்சித்தலைவர் அலுவலக வாளாகத்தில்¸ மாவட்ட ஆட்சித் தலைவர் தலைமையில் சிறப்பு பட்டா மாறுதல் கோரிக்கை மனுக்கள் பெறும் முகாம் நடைபெறும் என்றும்¸ திருவண்ணாமலை மாவட்டத்தைச் சேர்ந்த நில உரிமையாளர்கள் தங்களிடம் உள்ள உரிய ஆதார ஆவணங்களுடன் மனு செய்து பயன் பெறலாம் என மாவட்ட ஆட்சித்தலைவர் பா.முருகேஷ் தெரிவித்திருந்தார். 

மனு கொடுக்க 7ஆயிரம் பேர் குவிந்தனர்- கலெக்டர் திகைப்பு

அதன்படி இந்த சிறப்பு முகாம் இன்று காலை தொடங்கியது. இதற்காக காலை முதலே கலெக்டர் அலுவலகத்தில் கூட்டம் அலை மோதியது. நேரம் ஆக¸ ஆக கூட்டம் அதிகரித்தது. கலெக்டர் அலுவலகத்தின் உள்ளே எங்கு பார்த்தாலும் மக்கள் தலையாகவே தென்பட்டது. மனு கொடுக்க வந்தவர்கள் நீண்ட கியூவில் நிறுத்தப்பட்டனர். கலெக்டர் தலைமையில் முகாம் நடைபெறும் என அறிவிக்கப்பட்ட நிலையில் மாவட்ட வருவாய் அதிகாரி முத்துக்குமாரசாமி¸ கலெக்டர் அலுவலக மேல்மாடியில் உள்ள கூட்ட அரங்கில் பொது மக்களிடமிருந்து மனுக்களை பெற்றார். 

ஒரு கட்டத்தில் பொறுமையை இழந்த பொதுமக்கள் சினிமா தியேட்டரில் டிக்கெட் வாங்குவது போன்று முண்டியத்துக் கொண்டு கலெக்டர் அலுவலகத்தில் நுழைய முயற்சித்ததால் பரபரப்பு ஏற்பட்டது. பாதுகாப்பிற்காக 20 போலீசார் மட்டுமே இருந்ததால் கூட்டத்தை ஒழுங்கு படுத்த அவர்களால் முடியவில்லை. 

கொரோனா நோய் தொற்று பரவல் காரணமாக மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் வாரந்தோறும் திங்கட்கிழமை குறைதீர்வு நாள் கூட்டம் நடத்தப்படாத காரணத்தால் பொதுமக்கள் மனுக்களை மாவட்ட ஆட்சியர் அலுவலக வளாகம் முன்பு வைக்கப்பட்டிருந்த பெட்டியில் போட்டு செல்கின்றனர். 

வழக்கமாக திங்கட்கிழமை மக்கள் குறை தீர்வு நாளுக்கு வருவதை போன்று கூட்டம் வரும் என எதிர்பார்த்திருந்த நிலையில் ஒரே நேரத்தில் 7 ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் திரண்டதால் கலெக்டர் திகைத்தார். ரூமில் உட்கார்ந்து மனு வாங்காமல் வராண்டாவில் நின்று மனுக்களை பெறும்படி அதிகாரிகளுக்கு உத்தரவிட்டார். 

இதையடுத்து  மாவட்ட வருவாய் அதிகாரி முத்துக்குமாரசாமி கியூவில் நின்றிருந்தவர்களிடம் சென்று மனுக்களை பெற்றார்.  இதனால் சிறிது சிறிதாக கூட்டம் குறைய ஆரம்பித்தது. 

சில நாட்களுக்கு முன்பு கலெக்டர் அலுவலகத்திற்கு வரும் பொதுமக்களுக்காக டேங்க் மூலம் குடிநீர் வசதி செய்து தரப்பட்டிருந்தது. ஆனால் அதன் பிறகு அந்த டேங்க்கில் தண்ணீர் நிரப்பப்படாமல் காலியாக வைக்கப்பட்டிருக்கிறது. இதனால் இன்று கலெக்டர் அலுவலகத்தில் குவிந்த பொதுமக்கள் குடிக்க தண்ணீரின்றி அவதிப்பட்டனர். பட்டா மாறுதலுக்கு கூட்டம் அதிக அளவில் வருவதால் இனி இந்த மாதிரியான முகாம்களை வட்ட அளவில் நடத்த திட்டமிட்டுள்ளதாக அதிகாரிகள் தெரிவித்தனர். 

See also  அதிகாரிகளை கண்டித்து வியாபாரிகள் கடையடைப்பு

Join us for more Update

YouTube

@agnimurasu

Popular Post

Must Read

error: Content is protected !!