Homeசுகாதாரம்தரமற்ற உணவா? குண்டர் சட்டம் பாயும்- கலெக்டர்

தரமற்ற உணவா? குண்டர் சட்டம் பாயும்- கலெக்டர்

தரமற்ற உணவா? குண்டர் சட்டம்  பாயும்-கலெக்டர்

ஓட்டல்களில் தரமற்ற உணவு கண்டுபிடிக்கப்பட்டால் உரிமையாளர் குண்டர் சட்டத்தில் கைது செய்யப்படுவார் என கலெக்டர் தெரிவித்துள்ளார். 

ஆரணி நியூ 7 ஸ்டார் பிரியாணி சென்டர் ஓட்டலில் சாப்பிட்ட ஆரணியை அடுத்த லட்சுமி நகரைச் சேர்ந்த அரிசி ஆலையில் பணிபுரியும் ஆனந்த்தின் மகள் லோஷினி (வயது 10) வாந்தி¸ மயக்கம் ஏற்பட்டு மருத்துவமனையில் சிகிச்சை பலனின்றி இறந்தார். ஆனந்த்¸ அவரது மனைவியும் கல்லூரி பேராசிரியருமான பிரியாதர்ஷினி¸ மகன் சரண்(14) ஆகியோருக்கு வேலூர் நாராயணி மருத்துவமனையில் சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. இதில் ஆனந்த் ஆபத்தான கட்டத்தில் இருப்பதாக கூறப்படுகிறது. 

மேலும் அந்த ஓட்டலில் சாப்பிட்ட 39 பேருக்கு வாந்தி¸ மயக்கம் ஏற்பட்டுள்ளது. இவர்கள் தனியார் மற்றும் அரசு மருத்துவமனைகளில் சிகிச்சை பெற்றுள்ளனர். இச்சம்பவம் தமிழ்நாடு முழுவதும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. இது குறித்து ஆரணி போலீசார் வழக்குப்பதிவு செய்து ஓட்டல் உரிமையாளர் அம்ஜத் பாஷா¸ சமையல்காரர் முனியாண்டி ஆகிய இருவரையும் கைது செய்தனர். இவர்கள் கோர்ட்டு உத்தரவுபடி ஜெயிலில் அடைக்கப்பட்டனர். 

சிறுமி கண் மூடிய பிறகு விழித்தெழிந்த உணவு பாதுகாப்பு துறை அதிகாரிகள் ஓட்டல்களில் சோதனையை தீவிரப்படுத்தியுள்ளனர். 

ஆரணியில் உள்ள 10க்கும் மேற்பட்ட ஓட்டல்களில் உணவு பாதுகாப்பு அலுவலர் இளங்கோவன்¸ சேகர்¸ கைலேஷ் குமார்¸ எழில் இசக்கி மற்றும் அலுவலர்கள் இன்று சோதனை மேற்கொண்டனர். உணவுகள் தயாரிக்கும் சமையல் கூடம் மற்றும் சமையலுக்கு பயன்படுத்தும் பொருட்களின் தரம் சிக்கன்¸ மீன்¸ நண்டு¸ மட்டன் உள்ளிட்ட மாமிச பொருட்களை ஆய்வு செய்தனர்.

அப்போது 5 ஸ்டார் பிரியாணி கடையில் கூலர் இயந்திரத்தில் பதப்படுத்தியிருந்த கெட்டுப்போன 15 கிலோ சிக்கன்¸ மீன்¸ மட்டன் ஆகியவற்றை பறிமுதல் செய்தனர். இதையடுத்து அந்த ஓட்டல் உரிமையாளர்களுக்கு அபராதம் விதித்தனர்.

ஆம்புலன்சில் அழைத்து வரப்பட்ட தாய் 

லோஷினியின்  உடல் இன்று அடக்கம் செய்யப்பட்டது. இறுதி சடங்கில் கலந்து கொள்வதற்கு மருத்துவமனையிலிருந்து அவரது தாய் பிரியாதர்ஷினி ஆம்புலன்ஸ் மூலம் அழைத்து வரப்பட்டார். மகளின் உடலை பார்த்து அவர் கதறி அழுதது காண்போரை கண்கலங்கச் செய்தது. 

தரமற்ற உணவா? குண்டர் சட்டம்  பாயும்-கலெக்டர்

மாவட்ட ஆட்சியர் பேட்டி

இச்சம்பவம் தொடர்பாக திருவண்ணாமலை மாவட்ட ஆட்சித் தலைவர் பா.முருகேஷ் செய்தியாளர்களிடம் கூறியதாவது¸

ஆரணியில் உள்ள அசைவ உணவகத்தில் 7 குடும்பத்தினர் உணவு சாப்பிட்டுள்ளனர். அவர்களுக்கு வாந்தி மயக்கம் ஏற்பட்டுள்ளது. இதனால் அவர்கள் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டனர். இதில் 3 பேர் மேல்சிகிச்சைக்காக வேலூர் மருத்துவமனைக்கு மாற்றப்பட்டனர். இதில் 10 வயது சிறுமி சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளார்.

இச்சம்பவத்தில் அசைவ உணகத்திற்கு சீல் வைக்கப்பட்டு ஓட்டல் உரிமையாளர் கைது செய்யப்பட்டிருக்கிறார். சிறுமி உயிரிழப்புக்கு காரணமான உணவகத்திலிருந்து உணவு சேகரித்து ஆய்வுக்காக சேலத்தில் உள்ள ஆய்வகத்திற்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளது. ஆரணி நகராட்சியில் உள்ள அனைத்து கடைகளிலும் ஆய்வு செய்து 13ம் தேதிக்குள் ஆய்வு அறிக்கையை சமர்பிக்க உத்தரவிடப்பட்டுள்ளது.

மேலும் மாவட்டத்தில் உள்ள அனைத்து நகராட்சி பகுதிகளிலும் உள்ள கடைகளிலும் ஏஜென்சி மூலம் ஆய்வு நடத்தப்படும். இதற்கான ஆய்வறிக்கையை அடுத்த வாரத்திற்குள் கொடுக்கப்பட்டு விடும். இந்த ஆய்வில் தவறுகள் கண்டறியப்பட்டால் கண்டிப்பாக சம்மந்தப்பட்டவர்கள் குண்டர் சட்டத்தில் கைது செய்யப்படுவார்கள்.  

உணவகங்களில் பொதுமக்களுக்கு வழங்கப்படும் உணவுகள் மிகவும் கவனமாகவும்¸ சுகாதரமாகவும்¸ தரமாகவும் தயாரிக்க வேண்டும். இதனை பின்பற்றவில்லை என்றாலும் கடும் நடவடிக்கை எடுக்கப்படும். ஆரணி அசைவ உணவகத்தில் உணவு சாப்பிட்டவர்களுக்கு பாதிப்பு ஏற்பட காரணம் என்ன என்பது பரிசோதனை முடிவுகள் வந்த பிறகே தெரிய வரும். 

இவ்வாறு மாவட்ட ஆட்சித் தலைவர் பா.முருகேஷ் கூறினார். 

See also  காலியாகும் ஈசான்ய குப்பை கிடங்கு

Join us for more Update

YouTube

@agnimurasu

Popular Post

Must Read

error: Content is protected !!