திருவண்ணாமலையில் டி.டி.வி.தினகரன் மகள் திருமணம் வருகிற 16ந் தேதி சசிகலா முன்னிலையில் நடக்கிறது.
இதற்காக பிரமாண்டமான ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளது. 2 நாட்களும் 3 வேலை வாழை இலையில் அறுசுவை உணவு பரிமாறப்படுகிறது.
தஞ்சாவூரைச் சேர்ந்த காங்கிரஸ் முன்னாள் எம்.பி துளசி வாண்டையார் பேரனும்¸ காங்கிரஸ் கட்சியின் மாவட்டத் தலைவர் கிருஷ்ணசாமி வாண்டையார் மகனுமான ராமநாதன் துளசி அய்யா வாண்டையாருக்கும்¸ அ.ம.மு.க பொதுச் செயலாளர் டி.டி.வி.தினகரனின் மகள் ஜெயஹரிணிக்கும் 2020ம் ஆண்டு நவம்பர் மாதம் திருமணம் நிச்சயிக்கப்பட்டது.
தங்களுக்கு குழந்தை வரம் தந்த அண்ணாமலையார் கோயிலில் டி.டி.வி.தினகரன்- அனுராதாவின் மகள் ஜெயஹரணிக்கு காதுகுத்தல் நிகழ்ச்சி ஜெயலலிதா தலைமையில் நடத்தப்பட்டது. இதையடுத்து ஜெயஹரணியின் திருமணத்தையும் திருவண்ணாமலை கோயிலிலேயே நடத்திட முடிவு செய்யப்பட்டது. 2021 தை மாதம் திருமணம் நடத்த முடிவு எடுக்கப்பட்ட நிலையில் சசிகலா¸ சிறையிலிருந்து ரிலீஸ் ஆவது தள்ளி போனதாலும்¸ மணமகனின் தாத்தா மறைவினாலும் 2 முறை திருமணம் தள்ளி போனது. இந்நிலையில் இந்த திருமணம் வருகிற 16-09-2021 வியாழக்கிழமை காலை 8-30 மணிக்கு மேல் 10-30 மணிக்குள் திருவண்ணாமலை அருள்மிகு அருணாச்சலேசுவரர் திருக்கோயிலில் அமைந்துள்ள அருள்மிகு கல்யாண சுந்தரேசுவரர் சன்னதி புதிய மேடையில் நடைபெறுகிறது.
15-09-2021 புதன்கிழமை இரவு 6-50 மணிக்கு மேல் ஹோட்டல் அர்ப்பணாவில் இருந்து ஆண்டாள் சிங்காரவேலு திருமண மண்டபம் வரை மாப்பிள்ளை அழைப்பு நடக்கிறது. இதற்காக வழி நெடுகிலும் போக்கஸ் லைட்டுகள் அமைக்கப்பட்டு வருகிறது. அர்ப்பணா ஓட்டலில் இருந்து திருமண மண்டபம் ஒன்னறை கிலோ மீட்டர் தூரம் இருப்பதால் மாப்பிள்ளை அழைப்பை திருமண மண்டபத்துக்கு அருகில் இருக்கும் ஓம் சக்தி கோயிலில் இருந்து தொடங்குவதற்கு ஆலோசிக்கப்பட்டு வருகிறது. திருமண நிகழ்ச்சிகள் அனைத்தும் சசிகலா முன்னிலையில் நடக்கின்றன.
இதற்கான திருமண பத்திரிகை அச்சடிக்கப்பட்டு விநியோகிக்கப்பட்டு வருகிறது. திருமண ஏற்பாடுகளை கவனிப்பதற்காக டி.டி.வி.தினகரன் நேற்று முன்தினம் இரவே திருவண்ணாமலை அர்ப்பணா ஓட்டலில் வந்து தங்கி விட்டார். நேற்று முக்கிய பிரமுகர்களை சந்தித்து திருமண அழைப்பிதழ்களை வழங்கினார். திருவண்ணாமலை தெற்கு மாவட்ட அ.ம.மு.க நிர்வாகிகள்¸ தொண்டர்களுக்காக அழைப்பிதழ் ஒன்றை மாவட்ட கழக செயலாளரிடம் டி.டி.வி.தினகரன் வழங்கினார். இதே போல் ஒவ்வொரு மாவட்ட கழக செயலாளர்களுக்கும் அழைப்பிதழ்கள் வழங்கப்பட்டுள்ளன. திருவண்ணாமலை மாவட்ட ஆட்சித் தலைவர்¸ மாவட்ட காவல் கண்காணிப்பாளர் ஆகியோரை டி.டி.வி.தினகரனின் நேர்முக உதவியாளர் நேரில் சந்தித்து அழைப்பிதழ்களை வழங்கினார்.
திருமணத்திற்காக வருகை தரும் மணமகன் மற்றும் மணமகள் வீட்டார்¸ உறவினர்கள்¸ நண்பர்கள் தங்குவதற்காக திருவண்ணாமலை போளுர் ரோடு¸ வேங்கிக்காலில் உள்ள தங்கும் விடுதிகள்¸ கிரிவலப்பாதை¸ செங்கம் ரோட்டில் உள்ள உயர்ரக விடுதிகளும் புக் செய்யப்பட்டுள்ளன. தங்கும் விடுதிகளின் முன்புறம் அலங்கார வளைவுகள் அமைக்கப்பட்டுள்ளன.
திருமண வரவேற்பு நடைபெறும் ஆண்டாள் சிங்காரவேலு திருமண மண்டபம் முழுவதும் அலங்கரிக்கப்பட்டுள்ளது. பிரமாண்டமான பந்தல்களும் அமைக்கப்பட்டுள்ளன. 15ந் தேதி தொடங்கி 16ந் தேதி வரை 2 நாட்கள் 3 வேலையும் பஃபே சிஸ்டம் போன்று இல்லாமல் அனைவரையும் உட்கார வைத்து வாழை இலையில் அறுசுவை உணவு பரிமாறப்படுகிறது. ஒரே நேரத்தில் 1500 பேர்கள் சமூக இடைவெளியுடன் அமர்ந்து சாப்பிடும் அளவு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளது. சாப்பாடு வேலைகள் அனைத்தும் திருவண்ணாமலை தெற்கு மாவட்ட அ.ம.மு.க நிர்வாகிகளிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளது.
9 மாதங்களாக தள்ளி போன திருமணத்தை சிறப்பாக நடத்திட மணமக்கள் வீட்டார் மட்டுமன்றி அ.ம.மு.க நிர்வாகிகளும் மண்டல பொறுப்பாளர் என்.ஜி.பார்த்தீபன்¸ முன்னாள் எம்.எல்.ஏ பாலசுந்தரம் மேற்பார்வையில் பம்பரமாக சுழன்று பணியாற்றி வருகின்றனர்.
இந்நிலையில் மகள் திருமணத்தையொட்டி டி.டி.வி.தினகரன் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது¸
நெஞ்சில் நிறைந்திருக்கும் பேரன்புக்குரிய கழக உடன்பிறப்புகளுக்கு…அரசியல் இயக்கம் என்பதைத் தாண்டி¸ இதய தெய்வம் புரட்சித்தலைவி அம்மா அவர்களின் உண்மையான பிள்ளைகள் என்ற பந்தத்தில் நாம் அனைவரும் ஒரே குடும்பத்தைச் சேர்ந்தவர்கள் என்ற பாசப்பிணைப்பு நமக்குள் எப்போதும் இருக்கிறது. என் மீது நீங்கள் காட்டுகிற அளவிடமுடியாத அன்பும்¸ உங்கள் மீது எனக்குள்ள அசைக்க முடியாத பற்றுமே அதற்கான சாட்சி.
அத்தகைய கழகம் என்னும் நம்முடைய அன்புக்குடும்பத்தின் மகிழ்ச்சி விழாவாக¸ என் அன்பு மகள் ஜெயஹரிணி அவர்களுக்கும்¸ பூண்டி வாண்டையார் குடும்பத்தின் இளவல் திருநிறைச்செல்வன்.மு. ராமநாத துளசி அய்யா வாண்டையார் அவர்களுக்கும் வருகிற 16.09.2021 வியாழக்கிழமை அன்று திருவண்ணாமலையில் திருமணம் நடைபெறவிருக்கிறது.
தாங்கள் அனைவரும் குடும்பத்தினரோடு வந்திருந்து திருமணத்தை நடத்திட வேண்டும் என்பதே எனது பெரும் விருப்பம். எனினும் கொரோனா பேரிடர் பாதிப்பு இன்னும் முழுமையாக விலகாத நிலையில் உங்கள் ஒவ்வொருவரின் பாதுகாப்பும் முக்கியம் என்பதால்¸ தங்கள் அனைவரின் முன்னிலையில் திருமண விழாவை நடத்திட முடியாத சூழல் ஏற்பட்டிருக்கிறது.
அதனால்¸ இல்லறம் ஏற்கும் மணமக்கள் பல்லாண்டு காலம் சீரோடும்¸ சிறப்போடும் வாழ்ந்திட தங்களின் மனப்பூர்வமான அன்பையும்¸ இதயம் நிறைந்த வாழ்த்துகளையும் தந்திட வேண்டுகிறேன். இறையருளால் கொரோனா சு10ழல் மாறியவுடன் நல்விருந்து ஒன்றில் நாம் சந்திப்போம்.
இவ்வாறு அவர் தெரிவித்துள்ளார்.