திருவண்ணாமலை அண்ணாமலையார் கோயிலில் கார்த்திகை தீபத்திருவிழா பூர்வாங்க பணிகள் தொடக்கமாக இன்று பந்தக்கால் நடப்பட்டது.
தமிழகத்தின் முக்கிய ஆன்மிக ஸ்தலமாகவும்¸ அக்னி ஸ்தலமாகவும் திகழ்வது திருவண்ணாமலையாகும். இங்குள்ள அருணாசலேஸ்வரர் இக்கோவிலில் ஆண்டுதோறும் கார்த்திகை தீபத்திருவிழா 10 நாட்கள் நடைபெறும். இந்த ஆண்டு வருகிற நவம்பர் மாதம் 10ந் தேதி கொடியேற்றத்துடன் தொடங்கி 19ந் தேதி கோயிலின் பின்புறம் உள்ள 2¸668 அடி உயரமுள்ள மலை உச்சியில் மகா தீபம் ஏற்றப்பட உள்ளது.
விழாவிற்கான பூர்வாங்க பணி தொடங்குவதற்கான¸ பந்தக்கால் முகூர்த்த விழா இன்று(16-9-2021) நடந்தது. இதை முன்னிட்டு¸ அதிகாலை கோவில்; நடை திறக்கப்பட்டு¸ அண்ணாமலையார்¸ உண்ணாமலையம்மன் மூலவர் மற்றும் உற்சவ மூர்த்திகளுக்கு சிறப்பு அபிஷேகம் மற்றும் சிறப்பு பூஜை செய்யப்பட்டது. தொடர்ந்து¸ தங்க கொடி மரத்தின் அருகே உள்ள சம்பந்த விநாயகருக்கு சிறப்பு பூஜை நடத்தப்பட்டது.
தொடர்ந்து பந்தக்காலுக்கு பால்¸ தயிர்¸ சந்தனம்¸ மஞ்சள் ஆகியவற்றால் அபிஷேகம் செய்யப்பட்டு ஆராதனை நடைபெற்றது. பிறகு இணை ஆணையர் அசோக்குமார்¸ பந்தகாலை எடுத்து தர பிச்சகர் ரகு அதை பெற்றுக் கொண்டு கோயிலுக்கு வெளியே கொண்டு வந்தார். அதன் பிறகு விநாயகர்¸ முருகர்¸ அண்ணாமலையார்¸ அம்மன்¸ சண்டிகேஸ்வரர் ஆகிய தேர்களின் முன்பு பந்தக்கால் வைக்கப்பட்டு சிறப்பு பூஜைகள் செய்யப்பட்டது. இதைத் தொடர்ந்து ராஜகோபுரம் முன்பு சிவாச்சாரியார்கள் வேத மந்திரம் முழங்க 5-45 மணிக்கு பந்தக்கால் நடப்பட்டது.
இந்த நிகழ்ச்சியில் மாவட்ட காவல்துறை கண்காணிப்பாளர் பவன்குமார் ரெட்டி¸ கோவில் இணை ஆணையாளர் அசோக்குமார்¸ திருவண்ணாமலை மாவட்ட மத்திய கூட்டுறவு வங்கித் தலைவர் பெருமாள் நகர் கே.ராஜன், நகர தி.மு.க செயலாளர் கார்த்தி வேல்மாறன் மற்றும் பலர் கலந்து கொண்டனர்.
கார்த்திகை தீபத் திருவிழா நடத்துவதற்கான பத்திரிகை அச்சடித்தல் பணி¸ பஞ்ச மூர்த்திகள் உலா வரும மூஷிக வாகனம்¸ மயில் வாகனம்¸ பூத வாகனம்¸ ரிஷப வாகனம் உள்ளிட்ட பல்வேறு வாகனங்கள் மற்றும் சப்பரங்கள் ஆகியவற்றை சீரமைக்கும் பணி¸ வண்ணங்கள் பூசும் பணி, தேர் பழுது பார்த்தல் ஆகியவை இன்று முதல் தொடங்கியுள்ளது.
கொரோனா தொற்று பரவலை தடுத்திட திருவண்ணாமலையில் பவுர்ணமி கிரிவலம் செல்ல கடந்த ஆண்டு ஏப்ரல் மாதம் முதல் தடை விதிக்கப்பட்டு வருகிறது. சென்ற ஆண்டு நடைபெற்ற தீபத்திருவிழா பக்தர்களின்றி நடைபெற்றது. எனவே இந்த ஆண்டு தீபத்திருவிழாவை பக்தர்கள் நேரில் கண்டு தரிசிக்க ஆவலாக இருக்கும் நிலையில் என்னென்ன கட்டுப்பாடுகள் விதிக்கப்படும் என்பது தெரியவில்லை.
பந்தக்கால் முகூர்த்த விழா வீடியோவை காண..
https://www.facebook.com/profile.php?id=100010512168519
இந்த ஐ.டி-யைகிளிக் செய்யவும்.