திருவண்ணாமலையில் டி.டி.வி.தினகரன் மகள் திருமணத்தை வேலூர் நாராயணி பீடம் சக்தி அம்மா நடத்தி வைத்தார்.
அ.ம.மு.க பொதுச் செயலாளர் டி.டி.வி.தினகரனின் மகள் ஜெயஹரிணிக்கும்¸ தஞ்சாவூர் காங்கிரஸ் கட்சியின் மாவட்டத் தலைவர் கிருஷ்ணசாமி வாண்டையார் மகனுமான ராமநாதன் துளசி அய்யா வாண்டையாருக்கும் திருவண்ணாமலையில் இன்று திருமணம் நடைபெற்றது.
இதையொட்டி திருமணம் நடைபெற்ற வேங்கிக்கால் பகுதியில் திருமண மண்டபத்திற்கு செல்லும் வழி நெடுகிலும் போக்கஸ் லைட்டுகள் போடப்பட்டிருந்தன. அர்ப்பணா ஓட்டலில் இருந்து புறப்பட வேண்டிய மாப்பிள்ளை அழைப்பு ஊர்வலம்¸ ஓம் சக்தி கோயிலில் இருந்து நேற்று இரவு புறப்பட்டது. குதிரை வண்டி பூட்டி அலங்கரீக்கப்பட்ட சாரட் வண்டியில் மாப்பிள்ளையான ராமநாதன் துளசி அய்யா வாண்டையார் உட்கார வைத்து உறவினர்கள்¸ நண்பர்கள்¸ அ.ம.மு.க தொண்டர்கள் புடை சூழ அழைத்து வரப்பட்டார். கரகாட்டம்¸ பொய்க்கால் குதிரை¸ தாரை¸ தப்பட்டை முழங்க ஊர்வலம் ஏ.எஸ்.மகால் திருமண மண்டபத்தை சென்று அடைந்தது.
சென்னையில் இருந்து புறப்பட்டு வந்த சசிகலா¸ மாப்பிள்ளை அழைப்பு நடப்பதற்கு முன்னதாகவே மண்டபத்திற்கு வந்து விட்டார். அ.தி.மு.க கட்சி கொடி கட்டிய காரில் அவர் வந்திருந்தார். மண்டப வாசலில் அவரை வரவேற்க தொண்டர்கள் முண்டியத்ததால் நெரிசல் ஏற்பட்டது. சசிகலாவுடன் வந்திருந்த பாதுகாவலர்கள் கூட்டத்தை சரி படுத்தி அவரை மண்டபத்திற்குள் அழைத்துச் சென்றனர். மாப்பிள்ளை அழைப்பு ஊர்வலம் முடிந்ததும் சசிகலா முன்னிலையில் நிச்சயதார்த்த நிகழ்ச்சிகள் நடந்தது. இதில் மகாதேவமலை ஆனந்த சித்தர் கலந்து கொண்டு மணமக்கள் மீது பூத் தூவி வாழ்த்தினார்.
இன்று (16-09-2021) காலை 8-30 மணியிலிருந்து 10 மணிக்குள் திருவண்ணாமலை அண்ணாமலையார் கோயிலில் உள்ள கல்யாணசுந்தரேஸ்வரர் சன்னதியில் ஜெயஹரிணி- ராமநாதன் துளசி அய்யா வாண்டையார் திருமணம் நடைபெற இருந்தது. ஆனால் அண்ணாமலையார் கோயில் நிர்வாகம்¸ கொரோனாவால் விதித்துள்ள கட்டுப்பாடுகள் காரணமாக இந்த திருமணம்¸ நிச்சயதார்த்தம் நடந்த திருமண மண்டபத்திலேயே நடைபெற்றது.
வேலூர் நாராயணி பீடம் சக்தி அம்மா¸ மாங்கல்யம் எடுத்துக் கொடுக்க அதை மணமகள் ஜெயஹரிணி கழுத்தில் மணமகன் ராமநாதன் துளசி அய்யா வாண்டையார் கட்டினார். அப்போது சசிகலா உடனிருந்தார்.
திருமண விழாவில் இளவரசி¸ நடிகர் பிரபு¸ தேமுதிக இளைஞரணி தலைவர் எல் கே சுதீஷ்¸ விஜய பிரபாகரன்¸ திமுக சட்டமன்ற உறுப்பினர்கள் சாக்கோட்டை அன்பழகன்¸ துரை சந்திரசேகர்¸ வேலூர் வி.ஐ.டி. துணை வேந்தர் செல்வம் உள்பட ஆயிரக்கணக்கானோர் கலந்து கொண்டனர்.
இதனைத் தொடர்ந்து மணமக்கள் அண்ணாமலையார் கோவிலுக்குச் சென்று சாமி தரிசனம் செய்தனர்.