Homeசெய்திகள்சட்டமன்ற உறுப்பினர் செயல்பாட்டில் எ.வ.வேலு அதிருப்தி

சட்டமன்ற உறுப்பினர் செயல்பாட்டில் எ.வ.வேலு அதிருப்தி

சட்டமன்ற உறுப்பினர் செயல்பாட்டில் எ.வ.வேலு அதிருப்தி

சாலை வசதி செய்து தர வந்தவாசி எம்.எல்.ஏ தனி கவனம் செலுத்த வேண்டும் என எ.வ.வேலு தெரிவித்தார். வெளியூர் ஒப்பந்தகாரர் என்பதால் உதவி செய்யாமல் இருப்பதா? எனவும் காட்டமாக கேட்டார். 

திருவண்ணாமலை நெடுஞ்சாலைத்துறை அலுவலக வளாகத்தில் நெடுஞ்சாலைத்துறை கட்டுமான மற்றும் பராமரிப்பு வட்ட அலுவலகத்தினை பொதுப்பணித் துறை அமைச்சர் எ.வ.வேலு இன்று (21.09.2021) ரிப்பன் கத்திரித்தும்¸ குத்து விளக்கேற்றியும்  திறந்து வைத்தார். 

விழாவுக்கு நெடுஞ்சாலை மற்றும் சிறு துறைமுகங்கள் துறை அரசு முதன்மைச் செயலாளர் தீரஜ்குமார் தலைமை தாங்கினார். தமிழக சட்டப்பேரவை துணை சபாநாயகர் கு.பிச்சாண்டி முன்னிலை வகித்தார். கண்காணிப்பு பொறியாளர் பி.செந்தில் அனைவரையும் வரவேற்றார். 

விழாவில் அமைச்சர் எ.வ.வேலு பேசியதாவது¸ 

திருவண்ணாமலை மாவட்டத்தில் செய்யாறு சிப்காட் தொழிற்சாலைகளில் உற்பத்தியாகும் பொருட்களை அயல் நாட்டிற்கு விற்பனைக்காக சென்னை துறைமுகத்திற்கு கொண்டு செல்ல நெடுஞ்சாலை முக்கியத்துவம் தருகிறது. ஆகவே¸ பொருளாதார வளர்ச்சிக்கு மிகவும் முக்கிய பங்கு வகிக்கிறது நெடுஞ்சாலைத்துறை. 

ஆங்கிலேயர் காலத்தில் தான் 1785-ல் இம்பிரியர் சாலை என்றும்¸ 1946-ல் நெடுஞ்சாலைத்துறை என்றும் துவக்கப்பட்டது. அன்று சென்னையில் அறிவித்த நான்கு வட்டங்கள்¸ சென்னை ராஜஸ்தானி மாநிலத்தில் தான் நான்கு வட்டங்கள் பிரிக்கப்பட்டது. ஒரிஷா¸ ஆந்திரா¸ கேரளா¸ கர்நாடகா¸ தெலுங்கனா எல்லாம் சேர்ந்தது தான் சென்னை ராஜஸ்தானி மாநிலம். இந்த நான்கு வட்டங்களை பார்க்கும் அதிகாரிகளுக்கு Inspector of Engineering என்று அழைக்கப்பட்டார்கள். பிற்காலத்தில் கண்காணிப்பு பொறியாளர் என்று பெயர் மாற்றம் செய்யப்பட்டது. 

திருவண்ணாமலை பொறுத்த வரையில்¸ 01.04.1961-ல் தான் திருவண்ணாமலை¸ விழுப்புரம்¸ செங்கல்பட்டு என்ற புதிய கோட்டங்கள் உருவாக்கப்பட்டது. அதன்பிறகு¸ 1964-ல் திருநெல்வேலியில் தான் முதன்முதலாக வட்டங்கள் உருவாக்கப்ட்டது. 1971-ஆம் ஆண்டு தேசிய நெடுஞ்சாலை பராமரிப்பு தனிப்பிரிவு முன்னாள் முதலமைச்சர் டாக்டர் கலைஞரால்  துவங்கப்பட்டது. 

தமிழக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் 10¸000 கிலோ மீட்டர் கிராம சாலைகளை தரம் உயர்த்த வேண்டும் என்று நெடுஞ்சாலை துறைக்கு ஆணையிட்டுள்ளார். திருவண்ணாமலை மாவட்ட ஆட்சித்தலைவர்; 10¸000 கிலோ மீட்டர் தேர்வு செய்து¸ உள்ளாட்சித்துறையின் மூலம் நெடுஞ்சாலைத்துறை வசம் ஒப்படைத்தால் பொதுமக்கள் பயன்பெறும் வகையில் கிராம சாலைகள் தரம் உயர்த்தப்படும். திருவண்ணாமலை- கள்ளக்குறிச்சி சாலையை தேசிய நெடுஞ்சாலையாக்க முதல்வர் உத்தரவிட்டுள்ளார். 

திருவண்ணாமலை மருத்துவ கல்லூரி மருத்துவமனைக்கு செல்ல நெடுஞ்சாலைத்துறை சார்பாக அவலூர் பேட்டை சாலையில் புதிய இரயில்வே மேம்பாலம் இந்த ஆண்டே தொடங்கப்படும். வேட்டவலம் சாலையில் புதிய இரயில்வே மேம்பாலம் அடுத்த ஆண்டு தொடங்கப்படும். தற்போதுள்ள திருவண்ணாமலை மத்திய பேருந்து நிலையம் போதிய வசதி¸ வாய்ப்புகள் குறைவாக உள்ள காரணத்தினால் புதிய பேருந்து நிலையம் கட்டுவதற்கு 10 ஏக்கர் நிலப்பரப்பில் சர்விஸ் ரோடுடன் பணி துவங்க ஆணை பிறப்பிக்கபட்டுள்ளது.  அதற்கான பணிகள் நெடுஞ்சாலைத்துறை மூலம் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. திருவண்ணாமலை ஆன்மிக நகரில் தேர் ஒடும் மாடவீதியினை சுற்றி கான்கிரிட் சாலை இந்த வருடமே அமைக்க திட்ட மதிப்பீட்டை தயார் செய்து வருகிறோம். 

செய்யாறு¸ வந்தவாசி¸ போளுர் சாலையை விரிவுப்படுத்தி சிறப்பாக செய்ய வேண்டும் என பணியை எடுத்துள்ளோம். மக்கள் பிரதிநிதிகளாக உள்ள சட்டமன்ற உறுப்பினர்களுக்கு சொல்லிக்கொள்வது என்னவென்றால் அரசின் சார்பில் சாலை அமைக்கப்படும் போது அதற்கு சட்டமன்ற உறுப்பினர்கள் முக்கியத்துவம் தரவேண்டும். யாரோ வேலையை எடுத்து பணி செய்கிறார்கள் என்று நினைக்கக் கூடாது. நமது மாவட்டத்தின் வளர்ச்சிக்கு தான் சாலை போடுகிறார்கள். ஒப்பந்ததாரர்கள் யார் வேண்டுமானாலும் பணியை எடுப்பார்கள்.

தரமுள்ள ஒப்பந்ததாரர்கள் யார் வேண்டுமானாலும் பணியை எடுக்கலாம். இந்த ஊர் ஒப்பந்ததாரர்கள் தான் வேலையை செய்ய வேண்டும் என சொல்ல முடியாது. தகுதி உள்ளவர்களுக்குத்தான் வேலை கிடைக்கும். தகுதி இல்லாதவர்களுக்கு கிடைக்காது. தரம்¸ பைனான்ஸ் இப்படி பல்வேறு பிரிவுகளை பார்த்துதான் வேலைகள் தரமான ஒப்பந்ததாரர்களிடம் ஒப்படைக்கப்படுகிறது. 

எனவே மக்கள் பிரதிநிதிகள் அவர்களுக்கு உதவிகளை செய்ய வேண்டும். பொது மக்களுக்கு ஆயிரம் பிரச்சினைகள் இருக்கும். சாலை வந்தால் என்ன? வரவில்லை என்றால் என்ன? என பொதுமக்கள் சில நேரம் நினைப்பார்கள். மக்கள் பிரதிநிதிகளாக இருப்பவர்கள் தான் அதில் அக்கறை செலுத்த வேண்டும். செய்யாறு¸ வந்தவாசி¸ போளூர் சாலை பணி நிறைவேற சட்டமன்ற உறுப்பினர் அம்பேத்குமார்(வந்தவாசி)தனி கவனம் செலுத்த வேண்டும்.பணி ஒதுக்கீடு செய்யும்போது சில கிராமங்களில் பிரச்சனை எழுப்பப்படுகிறது இவற்றை நாம் தான் தீர்த்து வைக்க வேண்டும். பிரச்சனையை தீர்த்து வைக்கவில்லை என்றால் பணி எப்படி நடக்கும்? 

நெடுஞ்சாலைத் துறை மூலம்  நில ஆர்ஜிதம் செய்துகொள்ள சுப்ரீம் கோர்ட் அனுமதி அளித்துவிட்டது. எனவே இதை யாரும் தடுக்க முடியாது. நிலத்துக்கு கூடுதல் விலை கொடுங்கள் என்று  கேட்கலாமே தவிர புதிய சட்டத்தின் மூலம் நில ஆர்ஜிதத்தை தடுக்க முடியாது. எனவே சட்டமன்ற உறுப்பினர்கள்¸ ஒன்றிய குழு தலைவர்கள்¸ ஊராட்சி மன்ற தலைவர்கள் இதில் தனிக்கவனம் செலுத்திட வேண்டும். புறவழிச் சாலைக்கு நில எடுப்பு பணிகளை காலதாமதமின்றி செய்திட மாவட்ட நிர்வாகமும் உதவியாக இருந்திட வேண்டும். 

இவ்வாறு அவர் பேசினார். 

விழாவில் மாவட்ட ஆட்சித் தலைவர் பா. முருகேஷ்¸ திருவண்ணாமலை பாராளுமன்ற உறுப்பினர் சி.என்.அண்ணாதுரை¸ சட்டன்ற உறுப்பினர்கள் மு.பெ.கிரி (செங்கம்)¸ எஸ்.அம்பேத்குமார்(வந்தவாசி)¸ ஓ. ஜோதி (செய்யாறு) பெ.சு.தி.சரவணன் (கலசப்பாக்கம்)¸ மாவட்ட ஊராட்சிக்குழு தலைவர் பார்வதி சீனுவாசன்¸ தலைமை பொறியாளர் ஆர்.சந்திரசேகரன்¸ முதன்மை இயக்குநர் பி. ஆர். குமார்¸ திருவண்ணாமலை கோட்ட பொறியாளர்  க.முரளி¸ மாவட்ட ஊரக வளர்ச்சி முகமை கூடுதல் ஆட்சியர்¸ திட்ட இயக்குநர்  மு. பிரதாப் அரசுத்துறை உயர் அலுவலர்கள் மற்றும் உள்ளாட்சி பிரதிநிதிகள் கலந்து கொண்டனர்.

புதிய கட்டுமானம் மற்றும் பராமரிப்பு வட்ட அலுவலகம்¸ 6 மாவட்டங்களை உள்ளடக்கியதாக இருக்கும். இந்த மாவட்டங்களுக்கான ஒப்பந்த வேலைகள்¸ சென்னையில் நடைபெறாமல் இனி திருவண்ணாமலையிலேயே நடைபெறும். 

See also  அண்ணாமலையார் கோயில் உண்டியல் பணத்தை திருடியவன் கைது

Join us for more Update

YouTube

@agnimurasu

Popular Post

Must Read

error: Content is protected !!