ஏரி தண்ணீர் ஊருக்குள் புகுந்ததால் அமைச்சர் காரை நிறுத்தி மனு கொடுக்க திரண்ட கிராம மக்களால் பரபரப்பு ஏற்பட்டது.
திருவண்ணாமலை மாவட்டத்தில் கடந்த சில தினங்களாக பரவலாக மழை பெய்து வருகிறது. இந்த மழையினால் ஏரி¸ குளம்¸ குட்டை உள்ளிட்ட நீர்நிலைகளில் நிரம்பி வருகிறது. திருவண்ணாமலை¸ கீழ்பென்னாத்தூர்¸ கலசப்பாக்கம்¸ ஜமுனாமரத்தூர் போன்ற பகுதிகளில் நேற்று முன்தினம் இரவு பலத்த மழை பெய்தது. இதன் காரணமாக திருவண்ணாமலையில் பல இடங்களில் ரோட்டில் வெள்ளம் பெருக்கெடுத்து ஓடியது. தாழ்வான பகுதிகளில் வீடுகளில் தண்ணீர் புகுந்ததால் பொதுமக்கள் கடும் சிரமம் அடைந்தனர்.
திருவண்ணாமலை அடுத்த நொச்சிமலை ஏரி நிரம்பி தண்ணீர் வெளியேறி வருவதால் நொச்சிமலை¸ கீழநாச்சிப்பட்டு¸ நாவக்கரை¸ பல்லவன்நகர்¸ ராமவிட்டோபாநகர்¸ மகாலட்சுமி நகர்¸ விஜயலட்சுமி நகர் உள்ளிட்ட இடங்களில் உள்ள குடியிருப்பு பகுதிக்குள் தண்ணீர் 4 அடி உயரம் வரை சூழ்ந்தது. இதனால் பொது மக்கள் பெரும் அவதிக்குள்ளாகியுள்ளனர். இதனால் அவர்கள் வெளியே வர முடியாமல் வீட்டிற்குள்ளேயே முடங்கினர். இதே போல் கீழ்நாத்தூர் ஏரியும் நிரம்பி தண்ணீர் குடியிருப்பு பகுதிக்குள் புகுந்தது. விஜயலட்சுமி நகரில் இடுப்பளவு தண்ணீரில் மக்கள் நடந்து செல்லும் நிலை ஏற்பட்டது.
தண்ணீர் செல்லும் கால்வாய்களை ஆக்கிரமித்து வீட்டுமனை அமைத்து விற்பனை செய்து கட்டிடம் கட்டியதால் தண்ணீர் வெளியேற வழியில்லாமல் குடியிருப்பு பகுதிக்குள் புகுந்துள்ளதாக பொதுமக்கள் குற்றம் சாட்டினர். இந்நிலை தொடர்ந்தால் போராட்டங்களை நடத்துவதை தவிர வேறு வழியில்லை என்றும் அவர்கள் தெரிவித்தனர்.
இந்நிலையில் நேற்று நொச்சிமலை அருகில் உள்ள நெடுஞ்சாலைத்துறை அலுவலகத்தில் நடைபெற்ற விழாவுக்கு திருவண்ணாமலை தொகுதி சட்டமன்ற உறுப்பினரும்¸ அமைச்சருமான எ.வ.வேலு கலந்து கொள்ள இருப்பதை அறிந்து அப்பகுதி மக்கள் அமைச்சர் வரும் வழியில் அவரது காரை நிறுத்தி மனு கொடுக்க திரண்டனர். இதனால் அங்கு பரபரப்பு ஏற்பட்டது. ஆனால் அவர்களை போலீசார் தடுத்து நிறுத்தினர்.
அமைச்சர் கார் அந்த பகுதியை கடந்தது சென்றதும் விழா நடைபெறும் இடத்திற்கு மனு கொடுக்க 4 பேர் மட்டுமே வரும்படி கிராம மக்களிடம் சொல்லி விட்டு போலீஸ் உயரதிகாரிகள் சென்று விட்டனர். இதையடுத்து விழா நடந்த இடத்திற்கு கிராம மக்கள் சார்பில் சிலர் சென்று மனு அளித்தனர்.
பருவமழையினால் ஏற்படும் இடர்பாடுகளை தவிர்த்திட ஏதுவாக 20.09.2021 முதல் 25.09.2021 வரை மாபெரும் மழைநீர் வடிகால் தூய்மைப் பணி முகாமினை நடத்திட அரசு உத்தரவிட்டுள்ளது. குடியிருப்பு பகுதிகளில் பல்வேறு இடங்களில் வீடுகளுக்குள் வெள்ள நீர் புகும் அபாயம் உள்ளது. அதிகப்படியாக தேக்கமாகும் மழை நீரால் டெங்கு மற்றும் மலேரியா நோய் பரப்பும் கொசுக்கள் உற்பத்தியாகும் சூழ்நிலையும் உள்ளது. மேலும் மழைநீர் சாக்கடையுடன் கலந்து தேங்குவதால் இதர தொற்று நோய்கள் பரவும் அபாயமும் உள்ளது. இதை தடுத்திடுவதே இத்திட்டத்தின் நோக்கமாகும். இந்நிலையில் முகாம் தொடங்கிய மறுநாளே குடியிருப்பு பகுதிகளில் தண்ணீர் சூழ்ந்தது குறிப்பிடத்தக்கது.