மழைநீர் வடிகால் தூய்மைப் பணி முகாமில் அமைச்சர் எ.வ.வேலு கால்வாய் தூர் வாருதல்¸ மருந்து அடித்தல்¸ மரக்கிளைகளை வெட்டுதல் போன்ற பணிகளில் ஈடுபட்டார்.
தமிழ்நாட்டில் அக்டோபர் மாதம் 6 மற்றும் 9ந் தேதிகளில் விடுபட்ட 9 மாவட்டங்களுக்கான ஊரக உள்ளாட்சித் தேர்தல் நடக்க உள்ளது. 9 மாவட்டங்களுக்கும் திமுக சார்பில் தேர்தல் பொறுப்பாளர்களாக அமைச்சர்கள் நியமிக்கப்பட்டுள்ளனர். கள்ளக்குறிச்சி மாவட்டத்திற்கு தேர்தல் பொறுப்பாளராக பொதுப்பணி¸ நெடுஞ்சாலை மற்றும் சிறு துறைமுகங்கள் துறை அமைச்சர் எ.வ.வேலு நியமிக்கப்பட்டுள்ளார். கட்சி பணியோடு அவர் மாவட்ட தலைநகரான திருவண்ணாமலை மாவட்ட வளர்ச்சி பணிகளிலும் கவனம் செலுத்தி வருகிறார்.
நேற்று திருவண்ணாமலை- திண்டிவனம் ரோட்டில் உள்ள டான்காப் எண்ணெய் பிழியும் தொழிற்சாலை இயங்கி வந்த இடத்தில் புதிய பஸ் நிலையம் அமைப்பதற்கான ஆய்வு பணிகளை மேற்கொண்டார். இன்று தூய்மை பணியில் ஈடுபட்டார்.
தற்போது தமிழகம் எதிர்நோக்கி உள்ள வடகிழக்கு பருவமழையினால் குடியிருப்பு பகுதிகளில் பல்வேறு இடங்களில் வீடுகளுக்குள் வெள்ள நீர்; புகும் அபாயம் உள்ளது. அதிகப்படியாக தேக்கமாகும் மழைநீரால் டெங்கு மற்றும் மலேரியா நோய் பரப்பும் கொசுக்கள் உற்பத்தியாகும் சூழ்நிலையும் உள்ளது. மேலும் மழைநீர்; சாக்கடையுடன் கலந்து தேங்குவதால் இதர தொற்று நோய்கள் பரவும் அபாயமும் உள்ளது. ஆகவே¸ எதிர்வரும் பருவமழையினால் ஏற்படும் இடர்பாடுகளை தவிர்த்திட ஏதுவாக 20.09.2021 முதல் 25.09.2021 வரை மாபெரும் மழைநீர் வடிகால் தூய்மைப் பணி முகாமினை நடத்திட ஊரக மற்றும் நகர்புற பகுதிகளில் உள்ள அனைத்து மழைநீர் வடிகால்களையும் 100 சதவீதம் தூர்வாரி தூய்மைப்படுத்தும் பணி நடைபெற்று வருகிறது.
வேட்டவலம் ரோடு |
திருவண்ணாமலை நகரில் வடிகால் வசதி சரியில்லாததால் மழை பெய்யும் போது வெள்ளம் ரோடுகளில் பெருக்கெடுத்து ஓடி குடியிருப்பு பகுதிகளில் நுழைந்து விடுகிறது. இதனால் மக்கள் கடும் சிரமத்தை அனுபவித்து வருகின்றனர். எ.வ.வேலுவால் துவக்கப்பட்ட தூய்மை அருணை திட்டத்தின் மூலம் 39 வார்டுகளிலும் கால்வாய் தூர் வாருதல் செய்யப்பட்டாலும்¸ மிக ஆழமாக தூர் வார இயந்திரங்களின் உதவி தேவைப்பட்டது. நகராட்சி¸ நெடுஞ்சாலைத்துறை சார்பில் கால்வாய் தூர் வாரும் பணி ஜே.சி.பி இயந்திரம் மற்றும் பணியாளர்கள் மூலம் நடைபெற்று வருகிறது.
இதன் தொடர்ச்சியாக வேட்டவலம் சாலை¸ கீழ்நாத்தூர்¸ நாவக்கரை¸ பெருமாள் நகர்¸ காந்திநகர் ஆகிய பகுதிகளில் திருவண்ணாமலை நகராட்சி¸ நெடுஞ்சாலைத்துறை¸ தூய்மை அருணை இயக்கம் இணைந்து இன்று நடத்திய மழைநீர் வடிகால் தூய்மைப் பணி முகாமினை அமைச்சர் எ.வ.வேலு துவக்கி வைத்து¸ ஆய்வு செய்தார். தூய்மை அருணை சீருடையான நீல நிற பேண்ட்¸ மஞ்சள் நிற டீ ஷர்ட் அணிந்து வந்த அமைச்சர் எ.வ.வேலு¸ சில இடங்களில் கால்வாயை தூர் வாரினார். தூர் வாரிய கால்வாய்க்கு கொசு மருந்து அடித்தார். கால்வாய் மீது புதர் போன்று மண்டிக்கிடந்த மரக்கிளைகளை கொடுவாளால் வெட்டி அகற்றினார்.
அப்போது¸ மாவட்ட ஆட்சித்தலைவர் பா.முருகேஷ்¸ நாடாளுமன்ற உறுப்பினர் சி.என்.அண்ணாதுரை¸ சட்டமன்ற உறுப்பினர் மு.பெ.கிரி¸ நகராட்சி ஆணையர் சந்திரா¸ டாக்டர் கம்பன்¸ முன்னாள் நகரமன்றத் தலைவர் இரா.ஸ்ரீதர்¸ திமுக நகர செயலாளர் கார்த்திவேல்மாறன் மற்றும் அலுவலர்கள்¸ நகராட்சி பணியாளர்கள்¸ நெடுஞ்சாலைத்துறை அலுவலர்கள் தூய்மை அருணை இயக்க நிர்வாகிகள் உடனிருந்தனர்.