திருவண்ணாமலையில் லாட்ஜ்களில் போலீசார் நடத்திய அதிரடி ரெய்டில் 6 பெண்கள் கைது செய்யப்பட்டனர்.
திருவண்ணாமலை மத்திய பஸ் நிலையத்தின் அருகில் உள்ள சில லாட்ஜ்களில் விபச்சாரம் கொடிகட்டி பறக்கிறது. முத்து விநாயகர் கோயில் தெருவில் நகராட்சிக்கு சொந்தமான டி.எம்.சி.தங்கும் விடுதி உள்ளது. திருவண்ணாமலைக்கு வரும் ஆன்மீக பக்தர்கள்¸ வெளியூர் பயணிகள் குறைந்த கட்டணத்தில் தங்குவதற்காக இந்த விடுதி கட்டப்பட்டுள்ளது. டெண்டர் முறையில் இந்த விடுதியை சிலர் எடுத்து நடத்தி வருகின்றனர். டெண்டர் எடுக்கும் அரசியல்வாதிகள் உள்வாடகையாக சிலருக்கு மாற்றி விடுவதும் உண்டு.
காலப்போக்கில் எந்த நோக்கத்திற்காக கட்டப்பட்டதோ அதிலிருந்து மாறி நகராட்சி தங்கும் விடுதி¸ விபச்சார லாட்ஜ்ஜாக மாறிவிட்டது. இந்த லாட்ஜ் இயங்கி வரும் முத்து விநாயகர் கோயில் தெரு வழியாகத்தான் நகர மற்றும் கிராமிய டி.எஸ்.பி ஆபீசுகளுக்கு செல்ல வேண்டும். இது மட்டுமன்றி ரெயில்வே நிலையத்திற்கும் இந்த வழியாகத்தான் செல்ல வேண்டும். லாட்ஜ்க்கு யார் வருகிறார்கள் என்பதை மற்றவர்கள் பார்க்காமல் இருப்பதற்காக திரைச்சீலை போட்டு முன்புறத்தை மூடி தொழிலை தொடர்ந்து நடத்தி வந்தனர்.
இந்நிலையில் இன்று 26.09.2021-ந் தேதி இந்த லாட்ஜ்ஜிலும்¸ மத்தலாங்குளத் தெருவில் உள்ள ஒரு லாட்ஜ்¸ கட்டபொம்மன் தெருவில் உள்ள ஒரு லாட்ஜ் ஆகியவற்றிலும் போலீசார் அதிரடி சோதனை நடத்தினர். திருவண்ணாமலை மாவட்ட காவல் கண்காணிப்பாளர் பவன் குமார் உத்திரவின் பேரில் திருவண்ணாமலை உட்கோட்ட உதவி காவல் கண்காணிப்பாளர் கிரண் ஸ்ருதி¸ மேற்பார்வையில் இன்ஸ்பெக்டர்கள் மற்றும் மாவட்ட காவல் கண்காணிப்பாளரின் அதிரடிப்படை துணையுடன் இந்த சோதனை நடத்தப்பட்டது.
அப்போது லாட்ஜ்களில் பெண்களை தங்க வைத்து விபச்சாரத்தில் ஈடுபடுத்தும் புரோக்கர்களான திருவண்ணாமலையைச் சேர்ந்த ஹரிகரன்(வயது.24)¸ குமார்(50)¸ மணிகண்டன்(35) ஆகிய 3 பேரும்¸ விபச்சாரத்தில் ஈடுபட்ட உளுந்தூர்பேட்டைச் சேர்ந்த அஞ்சலை¸ ஈரோட்டைச் சேர்ந்த மேரி¸ ஆத்தூரைச் சேர்ந்த ராணி¸ திருவண்ணாமலையைச் சேர்ந்த மலர் உள்பட 6 பெண்களும் கைது செய்யப்பட்டனர்.
ஞாயிற்றுக்கிழமை விடுமுறை தினம் என்பதால் கஸ்டமர்களுக்கு குறைவிருக்காது என எண்ணி வெளியூர் அழகிகளை வரவழைத்து விபச்சாரம் நடத்தியது தெரியவந்தது. 3 புரோக்கர்களும் கோர்ட்டு உத்தரவின்படி ஜெயிலில் அடைக்கப்பட்டனர். விபச்சாரத்தில் ஈடுபட்ட பெண்கள் திருப்பத்தூரில் உள்ள பெண்கள் பாதுகாப்பகத்திற்கு அனுப்பி வைக்கப்பட்டனர்.
விபச்சாரம் நடத்தி வரும் தங்கும் விடுதிகளை மூட நடவடிக்கை எடுக்கப்பட்டு வருவதாக மாவட்ட காவல்துறை தெரிவித்துள்ளது.