தேசநலனுக்காகவும்¸ பிரதமர் மோடி நீடுழி வாழவும் திருவண்ணாமலை கிரிவலப் பாதையில் 14 கிலோ மீட்டர் தூரம் பா.ஜ.க நிர்வாகி அங்கப்பிரதட்சனம் வந்தார்.
பிரதமர் மோடி நேற்று (17-09-2921) தனது 71வது பிறந்த நாளை கொண்டாடினார். அவருக்கு தலைவர்கள் பலர் வாழ்த்து தெரிவித்துள்ளனர். தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின்¸ எடப்பாடி பழனிச்சாமி ஆகியோரும் வாழ்த்துக்களை பதிவு செய்துள்ளனர்.
மோடியின் பிறந்த நாளான நேற்று இந்தியாவில் 2 கோடி பேருக்கு கொரோனா தடுப்பூசி செலுத்தப்பட்டு சாதனை படைக்கப்பட்டுள்ளதாக மத்திய சுகாதாரத்துறை அமைச்சர் தெரிவித்துள்ளார். மேலும் பா.ஜ.கவினர் அவரது பிறந்த நாளை சேவை தினமாக கடைபிடித்தனர். சென்னையில் மத்திய அமைச்சர் எல்.முருகன்¸ பா.ஜ.க தலைவர் அண்ணாமலை மற்றும் பா.ஜ.கவினர் தூய்மை பணியில் ஈடுபட்டனர். பிரதமர் மோடியின் சொந்த தொகுதியான வாரணாசியில் 71 தீபங்கள் ஏற்றி வழிபாடு செய்யப்பட்டது.
சத்யராஜ் |
திருவண்ணாமலையில் பா.ஜ.க நிர்வாகி ஒருவர் அங்கப்பிரதட்சணம் வந்தார். அவரது பெயர் சத்யராஜ்.திருவண்ணாமலை வடக்கு மாவட்ட பா.ஜ.கவில் ஆரணி கிழக்கு ஒன்றிய செயலாளராக உள்ளார்.
தேச நலனுக்காகவும்¸ இந்திய ராணுவ வீரர்களின் நலன் மற்றும் அவர்களது குடும்பத்தின் நலனுக்காகவும்¸ பிரதமர் மோடி நோய் நொடியின்றி நீண்ட நாட்கள் வாழவும் நேற்று மாலை அண்ணாமலையாருக்கு வேண்டிக் கொண்டு ராஜகோபுரம் முன்பிருந்து அங்கப்பிரதட்சணம் துவங்கினார். திருவண்ணாமலை கோட்ட அமைப்பு செயலாளர் குணசேகரன் அங்கப்பிரதட்சணத்தை துவக்கி வைத்தார்.
இந்த நிகழ்ச்சியில் திருவண்ணாமலை வடக்கு மாவட்ட பா.ஜ.க¸ ஆரணி கிழக்கு ஒன்றிய தலைவர் சதீஷ்¸ ஒன்றிய பொதுச் செயலாளர் அருண்¸ வடக்கு மாவட்ட துணை தலைவர் கோபி¸ வடக்கு மாவட்ட பா.ஜ.க செயலாளர் வழக்கறிஞர் ஜெயகோபி¸ பொருளாளர் கோபி உள்ளிட்ட பா.ஜ.க நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.
அண்ணாமலையார் மலையை சுற்றி அவர் “அண்ணாமலையாருக்கு அரோகரா” என்ற பக்தி முழக்கத்தோடு அங்கப்பிரதட்சணமாக உருண்டு வந்தார். 14 கிலோமீட்டர் தூரம் கொண்ட கிரிவலப்பாதையை அங்கப்பிரதட்சணமாக வலம் வந்த சத்யராஜ்¸ அண்ணாமலையார் கோயில் முன்பு அங்கப்பிரதட்சணத்தை நிறைவு செய்தார்.