திருவண்ணாமலை டி.டி.சி.பி அலுவகத்தில் லஞ்ச ஒழிப்பு போலீசார் நடத்திய அதிரடி சோதனையில் பைலுக்குள் கட்டுக்கட்டாக லஞ்சப் பணம் இருந்தது கண்டுபிடிக்கப்பட்டது.
போலீசின் விசாரணை வலையில் புரோக்கர்கள் சிக்கி உள்ளனர்.
டி.டி.சி.பி அப்ரூவல் பெற்ற வீட்டு மனைகள் என்ற வாசகம் இல்லாத ரியல் எஸ்டேட் விளமபரங்களை இப்போதெல்லாம் பார்க்காமல் இருக்க முடியாது. அந்த அளவிற்கு டி.டி.சி.பி அப்ரூவல் முக்கியத்துவம் பெற்றுள்ளது. விவசாய நிலத்தை குடியிருப்பு நிலமாக மாற்றுதல்¸ அடுக்குமாடி குடியிருப்பு கட்டுதல்¸ தொழிற்சாலைக்கு ஒதுக்கப்பட்ட நிலத்தை குடியிருப்பு பகுதியாக மாற்றுதல் போன்றவற்றிற்கு அங்கீகாரம் தருவதுதான் மாவட்ட நகர் ஊரமைப்பு அலுவலகத்தின் வேலையாகும். இந்த அலுவலகம் தமிழ்நாட்டில் பல இடங்களில் உள்ளது. திருவண்ணாமலையில் மணலூர் பேட்டை செல்லும் சாலையில் இந்த அலுவலகம் அமைந்திருக்கிறது.
இந்த அலுவலகத்தில் உதவி இயக்குநராக மோகன் என்பவர் பணியாற்றி வருகிறார். லஞ்சம் வாங்குவதில் இவரது பாணியே தனி என்கின்றனர் பொதுமக்கள். இது குறித்து ரியல் எஸ்டேட் தொழில் செய்யும் சிலரிடம் பேசினோம். டி.டி.சி.பி. அலுவலகத்தில் இந்தியன் பட பாணியில் ஒவ்வொரு பைலும் பணம் இருந்தால் மட்டுமே அடுத்த கட்டத்திற்கு நகரும். அப்ரூவலுக்கு வரும் பைலிலேயே பணமும் இருக்க வேண்டும். இதற்காக சில புரோக்கர்கள் அந்த அலுவலகத்தை சுற்றிலும் கடைகளை வாடகைக்கு எடுத்துள்ளனர். யாராக இருந்தாலும் மாவட்ட நகர் ஊரமைப்பு அலுவலகத்திற்கு நேரடியாக செல்ல முடியாது. உதவி இயக்குநராக மோகனால் நியமிக்கப்பட்டுள்ள புரோக்கர்களைத் தான் நாடி தர வேண்டியதை தந்தால்தான் அப்ரூவல் கிடைக்கும். எதிர்த்து கேள்வி கேட்பவர்கள் மிரட்டலுக்கு ஆளாக்கப்படுவார்கள் என்றனர்.
மோகன் |
இது சம்மந்தமாக நாம் மேலும் விசாரித்த போது டி.டி.சி.பி அலுவலகத்தில் லஞ்சம் தலைவிரித்தாடுவது குறித்து மேலதிகாரிகளுக்கு புகார்கள் சென்றும் அவர்கள் கண்டும்¸ காணாமல் இருந்துள்ளனர். இதனால் அதிமுக ஆட்சியில் கொடி நாட்டிய உதவி இயக்குநர் மோகன்¸ திமுக ஆட்சியிலும் அசைக்க முடியாத சக்தியாக இருந்துள்ளார் என்பது தெரிய வந்தது.
இந்நிலையில் திருவண்ணாமலை மாவட்ட லஞ்ச ஒழிப்பு துணை போலீஸ் சூப்பிரண்டு மதியழகன் தலைமையில் 10 பேர் கொண்ட குழுவினர் இன்று(30-09-2021) காலை ஜீப்பில் அந்த அலுவலகத்திற்கு அருகே வந்து இறங்கினர். டி.டி.சி.பி அலுவலகத்தில் அதிரடியாக நுழைந்து அலுவலகத்தை உள்புறமாக மூடினர். அலுவலகத்திலிருந்து வெளியேற யாரையும் அனுமதிக்கவில்லை.
பிறகு ஒவ்வொரு அறையாகவும்¸ மேசை டிராயர்கள்¸ பீரோக்களை திறந்து சோதனை செய்தனர். ஆனால் அங்கெல்லாம் பணம் ஏதும் சிக்கவில்லை. கடைசியாக உதவி இயக்குநர் மோகனின் மேசை மீதிருந்த பைலை எடுத்து பிரித்த போது அதிலிருந்து கட்டுக்கட்டாக பணம் கீழே விழந்தது. மொத்தம் ரூ.3 லட்சம் கைப்பற்றப்பட்டது. இதையடுத்து அவரிடமும்¸ அலுவலக கண்காணிப்பாளர் பானுமதியிடமும் போலீசார் தீவிர விசாரணை நடத்தினர். இதில் அவர்களுக்கு லஞ்சம் பெற்று தரும் புரோக்கர்கள் பற்றிய விவரங்கள் தெரிய வந்தது.
இதையடுத்து அந்த அலுவலகத்திற்கு எதிரே கடை வைத்திருந்த தானேஷ்¸ அருணாச்சலம்¸ வீரா ஆகிய 3 பேரை போலீசார் அழைத்து வந்து விசாரணை நடத்தினர். இரவு வரை விசாரணை நடைபெற்றது. மொத்தம் 10 பேரிடம் விசாரணை நடந்தது. இது சம்மந்தமாக வழக்குப்பதிவு செய்யப்பட்டு மேல் நடவடிக்கை எடுக்கப்படும் என போலீசார் தெரிவித்தனர்.
உதவி இயக்குநர் மோகனின் சொத்து விவரங்கள் குறித்து விரிவான விசாரணை நடத்தப்பட வேண்டும் எனவும்¸ மாவட்ட நகர் ஊரமைப்பு அலுவலகத்தை நகரின் மையப்பகுதியில் அமைக்க வேண்டும் எனவும் பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.