போலி ஏ.டி.எம் கார்டை கொடுத்து மோசடி செய்தவரை போலீசார் கைது செய்து ரூ.4 லட்சத்தை கைப்பற்றினார்கள்.
திருவண்ணாமலை மாவட்டம்¸ செங்கம் வட்டம்¸ மேல்புழுதியூர் கிராமத்தைச் சேர்ந்தவர் பாபு. இவரது மனைவி கோகிலதீபா (வயது 34). கடந்த 01.09.2021 ஆம் தேதி தனது தந்தையின் ATM கார்டு மூலம் பணம் எடுப்பதற்காக¸ செங்கத்தில் உள்ள பாரத ஸ்டேட் வங்கியில் உள்ள ATM-ல் பணம் எடுக்க சென்றார். ஆனால் அந்த ATM– ல் பணம் இல்லாததால் அருகிலிருந்த India No1 ATM-ல் பணம் எடுக்க சென்றார்.
புதிய இயந்திரம் என்பதால் பணம் எடுக்க கோகிலதீபா திணறினார். இதைப் பார்த்துக் கொண்டிருந்த டிப்-டாப்பாக அருகில் நின்றிருந்த வாலிபர் ஒருவர் பணம் எடுக்க உதவி செய்வதாக கூறினார். இதை நம்பிய கோகிலதீபா ஏ.டி.எம்-மின் கார்டை கொடுத்து¸ ரகசிய எண்ணையும் அவரிடம் தெரிவித்தார். அவரும் பணம் எடுப்பது போல் முயன்று கடைசியில் ஏ.டி.எம்-மில் பணம் இல்லை என சொல்லி கோகிலதீபாவை அங்கிருந்து அனுப்பி விட்டாராம்.
வீடு திரும்பிய கோகிலதீபாவிற்கு அதிர்ச்சி காத்திருந்தது. அவரது தந்தையின் செல்போனிற்கு அவரது வங்கி கணக்கில் இருந்து 2 முறை தலா ரூ.9ஆயிரத்து 500 எடுக்கப்பட்டதாகவும்¸ ஒரு முறை ரூ.1000 எடுக்கப்பட்டதாகவும் மெசேஜ் வந்திருந்தது.
தான் ஏமாற்றப்பட்டதை உணர்ந்த கோகிலதீபா¸ பாரத ஸ்டேட் வங்கியில் சென்று விசாரித்த போது ஏ.டி.எம்-மில் இருந்து பணம் எடுக்கப்பட்டது தெரிய வந்தது. மேலும் உதவுவது போல் நடித்த அந்த வாலிபர் ஒரிஜனல் ஏ.டி.எம் கார்டுக்கு பதில் போலி கார்டை கொடுத்தது தெரிய வந்தது.
இது குறித்து கோகிலதீபா செங்கம் போலீஸ் நிலையத்தில் புகார் செய்தார். போலீசார் வழக்குப்பதிவு செய்து அந்த வாலிபரை தேடி வந்தனர். திருவண்ணாமலை மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு அ.பவன்குமார் உத்தரவின் பேரில்¸ செங்கம் துணை போலீஸ் சூப்பிரண்டு ஆர்.சின்ராஜ் தலைமையில்¸ செங்கம் இன்ஸ்பெக்டர் கே.சரவணன்¸ சப்-இன்ஸ்பெக்டர் வி. யுவராஜ் மற்றும் போலீசார் ஏ.டி.எம். மையத்தில் உள்ள சி.சி.டி.வி கேமராவில் பதிவான அந்த வாலிபரின் புகைப்படத்தை கொண்டு ஏ.டி.எம். மையங்களில் கண்காணிப்பு பணியை தீவிரப்படுத்தினர்.
செங்கம் ஸ்ரீ ராமகிருஷ்ணா பள்ளி அருகே உள்ள SBI ATM அருகே அந்த நபர் வந்த போது போலீஸ் விரித்த வலையில் சிக்கினார். அவரிடம் போலீசார் விசாரணை நடத்தினர். அப்போது அந்த வாலிபர் கீழ்பென்னாத்தூர் தாலுக்கா¸ எரும்பூண்டி கிராமத்தைச் சேர்ந்த மாசிலாமணி மகன் நவீன்குமார் (வயது. 27) என்பது தெரிய வந்தது.
அவர் ஏற்கனவே திண்டிவனம் மற்றும் அவலூர்பேட்டையில் இதேபோன்று ATM-ல் பணம் எடுப்பதற்கு உதவி செய்வதுபோல் ஏமாற்றியதற்காக 2019-ம் ஆண்டு 10 வழக்குகளில் கைது செய்யப்பட்டு சிறைக்குச் சென்று ஜாமினில் வெளியே வந்ததும்¸ பின்னர் திருவண்ணாமலை¸ செங்கம்¸ போளூர் உள்ளிட்ட பகுதிகளில் இதே போன்ற செயல்களில் ஈடுபட்டு வந்ததும் தெரிந்தது.
இவர் மீது திருவண்ணாமலை மாவட்டத்தில் மட்டும் 24 வழக்குகள் நிலுவையில் இருப்பதாக போலீஸ் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. போலீசார் நவீன்குமாரை கைது செய்து அவரிடமிருந்து ரூ.4 லட்சத்தையும்¸ ஒரு மோட்டார் சைக்கிளையும் பறிமுதல் செய்தனர். இதையடுத்து போலீசார் நவீன்குமாரை கோர்ட்டு உத்தரவின் பேரில் ஜெயிலில் அடைத்தனர்.