திருவண்ணாமலையில் பார்சல் குடோனில் குட்கா இருந்ததாக கூறி சீல் வைக்க முயன்ற அதிகாரிகளுடன்¸ பணியாளர்கள் வாக்குவாதத்தில் ஈடுபட்டதால் பரபரப்பு ஏற்பட்டது.
திருவண்ணாமலை போத்தராஜா கோயில் தெருவில் எஸ்.எல்.என்.டி. என்ற பார்சல் சர்வீஸ் நிறுவனம் உள்ளது. பெங்களுரிலும் இந்நிறுவனம் செயல்பட்டு வருகிறது. இந்நிலையில் இன்று(26-09-2021) மாலை அந்த குடோனில் உணவு பாதுகாப்புத் துறை அதிகாரிகள் சோதனை நடத்தினர். இதில் ரூ.5 லட்சம் மதிப்புள்ள தடை செய்யப்பட்ட குட்கா இருந்தது கண்டுபிடிக்கப்பட்டது.
அந்த நிறுவனத்தில் உணவு பாதுகாப்புத் துறை மாவட்ட நியமான அலுவலர் ராமகிருஷ்ணன் நேரில் விசாரணை நடத்தினார். அப்போது உணவு பாதுகாப்பு அலுவலர்கள் எழில்சிக்கையராஜா¸ கைலேஸ்குமார்¸ சிவபாலன் ஆகியோர் உடனிருந்தனர். அப்போது அதிகாரிகளுடன்¸ அந்நிறுவன பணியாளர்கள் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர்.
உணவு பாதுகாப்புத் துறை அலுவலர் கைலேஸ்குமார்¸ துளுவ வேளாளர் மண்டபம் அருகே சாலையோரம் இருந்த 5 குட்கா பண்டல்களை எடுத்து வந்து பார்சல் அலுவலகத்தில் வைத்ததாகவும்¸ அந்த பண்டலுக்கும்¸ தங்களுக்கும் எந்தவித சம்மந்தமும் இல்லை என அவர்கள் தெரிவித்தனர். மேலும் உணவு பாதுகாப்புத் துறை அலுவலர் கைலேஸ்குமார்¸ பண்டலை எடுத்து வந்த லாரிகள் மீது கேஸ் போடாமல் அனுப்பி விட்டதாகவும் குற்றம் சாட்டினர். சம்மந்தப்பட்ட இடத்தில் இருக்கும் வீடியோ புட்டேஜை பார்வையிட்டால் உண்மை தெரியவரும் எனவும் அவர்கள் கேட்டுக் கொண்டனர்.
அதிகாரிகளுடன்¸ பணியாளர்கள் வாக்குவாதத்தில் ஈடுபட்டதால் அங்கு சிறிது நேரம் பரபரப்பு நிலவியது. இதையடுத்து அந்த பார்சல் நிறுவனத்தை அதிகாரிகள் பூட்டு போட்டு பூட்டினர். சீல் வைப்பதை தள்ளி வைத்தனர். இது சம்மந்தமாக அந்நிறுவன உரிமையாளர்களிடம்¸ உரிய விளக்கம் கேட்கப்பட்டுள்ளதாகவும்¸ விளக்கத்தில் உண்மை தன்மை இல்லாவிடில் சட்டப்படி நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் உணவு பாதுகாப்புத் துறை மாவட்ட நியமான அலுவலர் ராமகிருஷ்ணன் தெரிவித்தார்.