Homeஆன்மீகம்திருவண்ணாமலை கோயிலில் பசு மாடு இறந்த விவகாரம்

திருவண்ணாமலை கோயிலில் பசு மாடு இறந்த விவகாரம்

திருவண்ணாமலை கோயிலில் பசு மாடு இறந்த விவகாரம்

திருவண்ணாமலை அண்ணாமலையார் கோயில் கோசாலையில் கன்று ஈன்ற மாடு ஒன்று சரியான பராமரிப்பு இன்றி இறந்து விட்டதாக குற்றசாட்டு எழுப்பப்பட்டுள்ளது. ஆனால் கோயில் நிர்வாகம் இதை மறுத்துள்ளது. 

திருவண்ணாமலை அண்ணாமலையார் கோயிலில் எண்ணற்ற பக்தர்கள் வருகை தந்து தங்களது துயரங்கள்¸ துன்பங்கள் விலகிட வேண்டிச் செல்கின்றனர். தங்களது பிரார்த்தனைகளை தங்க ரதம் இழுத்தும்¸ கரும்பு தொட்டில் கட்டியும்¸ மகாதீப நெய்குடம் கட்டியும் நிறைவேற்றுகின்றனர். மேலும் விசேஷ நாட்களில் தங்களது நட்சரத்தின் பெயரில் அர்ச்சனையும் செய்கின்றனர். இது மட்டுமன்றி நேர்த்திக் கடனாக கோயிலுக்கு பசு மாடுகளையும் பக்தர்கள் வழங்குகின்றனர். 

இந்த பசு மாடுகள் திருவண்ணாமலை அண்ணாமலையார் கோயிலில் 4வது பிரகாரத்தில் உள்ள கோசாலையில் வைத்து பராமரிக்கப்படுகிறது. கடந்த 20ந் தேதி இந்த கோசாலையில் கன்று ஈன்ற மாடு ஒன்று இறந்து விட்டது. இறந்து கிடக்கும் மாட்டின் படம் சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது. இது மட்டுமன்றி மேலும் ஒரு பசு மாடு கவலைக்கிடமாக உள்ளதாக சொல்லப்படுகிறது. 

இது பற்றி அம்மா ஆன்மீக பேரவையைச் சேர்ந்த பர்மா.கே.ராஜா சமூக வலைத்தளங்களில் இறந்து கிடக்கும் மாட்டின் படத்தோடு ஒரு பதிவை வெளியிட்டிருக்கிறார். அதில் அவர் 

திருவண்ணாமலை அருணாச்சலேஸ்வரர் கோவிலில் உள்ளே உள்ள கோசாலையில் ஒரு பசுமாடு மிகவும் கவலைக்கிடமாக உள்ளது அதை கோவில் நிர்வாகம் சரிவர கவனிக்காமல் இருக்கிறது.இதே போல் போன இந்த ஆண்டு மார்ச் மாதம் கன்று ஈன்ற பசு ஒன்று இறந்துவிட்டது இந்த வாரத்தில் ஒரு பசுமாடு இறந்து விட்டது நேற்று முதல் இன்னும் ஒரு பசு மாடு கவலைக்கிடமாக உள்ளது கோவில் நிர்வாகம் மிகவும் அலட்சியமாக உள்ளது. கோசாலை பொறுப்பாளர் மீது இன்னும் எந்த ஒரு நடவடிக்கையும் எடுக்கவில்லை உணவு சரிவர கொடுப்பது கிடையாது. அதனால் பசுமாடுகள் உணவு கிடைக்காமல் இறந்துவிடுகின்றன. இதை கண்டித்து ராஜகோபுரத்தை முன்பு அக்டோபர் 2ஆம் தேதி ஒருநாள் அடையாள உண்ணாவிரதம் இருக்க அம்மா ஆன்மீக பேரவை சார்பில் முடிவு செய்யப்பட்டுள்ளது என தெரிவித்துள்ளார். 

திருவண்ணாமலை கோயிலில் பசு மாடு இறந்த விவகாரம்

இது பற்றி பர்மா ராஜாவிடம் பேசினோம். மாடுகளை பராமரிக்க தானம் கொடுப்பவர்களிடம் ரூ.10 ஆயிரம் கணக்கில் வராமல் பெற்று கொள்கின்றனர். சரிவர பராமரிக்காததால் கடந்த ஒன்னறை வருடத்தில் 10மாடுகள் இறந்துள்ளது. இதனால் அக்டோபர் 2ந் தேதி காந்தி ஜெயந்தி அன்று கோயில் முன்பு உண்ணாவிரதம் இருக்க முடிவு செய்திருக்கிறேன். என்று கூறினார். 

ஆனால் அவரது குற்றச்சாட்டை கோயில் நிர்வாகம் மறுத்துள்ளது. கோசாலையில் தற்போது ஒரு மாடு இறந்தது போக 40 மாடுகள் உள்ளன. 2 மாடுகளுக்கு ஏற்பட்ட சண்டையில் கன்று ஈனும் நிலையில் இருந்த மாடு காயம் அடைந்து கீழே விழுந்து விட்டது. பிறகு அதனால் எழுந்து நிற்க முடியவில்லை. பெல்ட்டை வயிற்றில் கட்டி எழுப்ப முயற்சித்தும் முடியவில்லை. அதற்கு சிகிச்சை அளித்து வந்தோம். கன்று ஈன்ற பிறகு கடந்த 20ந் தேதி அந்த மாடு இறந்து விட்டது. மாட்டை பிரேத பரிசோதனை செய்து புதைத்து விட்டோம். 

கோசாலையில் உள்ள மாடுகளுக்கு போதுமான வைக்கோல் இருப்பில் உள்ளது. 5ம் பிரகாரத்தில் தீவனப்புல் வளர்த்து வருகிறோம். மாதம் தோறும் ஒன்னறை லட்சம் ரூபாய்க்கு புண்ணாக்கு போன்ற தீவனம் வாங்கி போடுகிறோம். 10 மாடுகள் இறந்திருப்பதாகவும்¸ ஒரு மாடு கவலைக்கிடமாக இருப்பதாகவும் கூறுவது தவறானது என கோயில் தரப்பில தெரிவிக்கப்படுகிறது. 

திருவண்ணாமலை கோயிலில் பசு மாடு இறந்த விவகாரம்

கடந்த 2013ம் ஆண்டு இந்த கோசாலையில் இறந்து போன கன்று குட்டிகளை கோயிலுக்குள்ளேயே ரகசியமாக புதைத்த ஊழியர் ஒருவர் சஸ்பெண்ட் செய்யப்பட்டார். மற்றொரு ஊழியர் பணி நீக்கம் செய்யப்பட்டார். அப்போது இந்த கோசாலை நவீன மாட்டு தொழுவமாக மாற்றப்படும் என அதிகாரிகள் கூறியிருந்தனர். ஆனால் அறிவிப்பை செயல்படுத்தவில்லை. கடந்த 2018ம் ஆண்டு வைக்கோல் பற்றாக்குறையால் மாடுகள் தவிக்கும் நிலை ஏற்பட்டது. 2021 மார்ச் மாதம் தானமாக வழங்கிய ஓங்கோல் இன பசு மாடு கோசாலையில் இல்லாமல் இருப்பதை பார்த்து பெங்களுரைச் சேர்ந்த தொழிலதிபர் புகார் அளித்தார். அந்த மாடு¸ கலெக்டரின் உத்தரவின் பேரில் மகளிர் குழுவிடத்தில் ஒப்படைக்கப்பட்டது தெரிய வந்து அதன்பிறகு மீட்கப்பட்டது. 

இப்படி அடிக்கடி பிரச்சனையில் சிக்கி வரும் திருவண்ணாமலை அண்ணாமலையார் கோயில் கோசாலை மீது அதிகாரிகள் தனி கவனம் செலுத்தி லட்சுமி தேவியின் அம்சமாக கருதப்படும் பசுக்களை காப்பாற்ற நடவடிக்கை எடுத்திட வேண்டும் என பக்தர்கள் தரப்பில் கோரிக்கை எழுப்பப்பட்டுள்ளது. 

-செ.அருணாச்சலம். 

See also  சாத்தனூர் அணை கட்ட துணை புரிந்த வேடியப்பன்

Join us for more Update

YouTube

@agnimurasu

Popular Post

Must Read

error: Content is protected !!