தீபாவளி பண்டிகைக்கு பட்டாசு கடை வைப்பவர்கள் வருகிற 30ந் தேதிக்குள் ஆன்லைனில் மட்டுமே விண்ணப்பிக்க வேண்டும் என கலெக்டர் அறிவித்துள்ளார்.
இது சம்மந்தமாக திருவண்ணாமலை மாவட்ட ஆட்சித்தலைவர் பா.முருகேஷ் வெளியிட்டுள்ள பத்திரிகை செய்தியில் கூறியிருப்பதாவது¸
திருவண்ணாமலை மாவட்டத்தில் தீபாவளி பண்டிகை-2021-க்கான வெடிபொருள் பட்டாசு சில்லறை விற்பனை தற்காலிக உரிமம் கோரும் விண்ணப்பதாரர்கள் 30.09.2021- க்குள் இ-சேவை மையங்கள் மூலமாக ஆன்லைனில் மட்டுமே விண்ணப்பிக்கப்பட வேண்டும் என்று அரசால் வழிவகை செய்யப்பட்டுள்ளது.
அவ்வாறு விண்ணப்பிக்கும் போது கீழ்க்கண்ட ஆவணங்களை தவறாமல் இணைக்க வேண்டும்.
கடை அமைவிடத்திற்கான சாலை வசதி¸ கொள்ளளவு¸ சுற்றுப்புறங்களைக் குறிக்கும் வகையிலான வரைபடம் மற்றும் கட்டடத்திற்கான நீல வரைபடம் (Blue print) – 6 நகல்கள்.
கடை வைக்க உத்தேசிக்கப்பட்டுள்ள இடம் சொந்த கட்டடமாக இருப்பின் அதற்கான உரிய ஆவணம் (அ) வாடகை கட்டிடமாக இருப்பின் ரூ. 20-க்கான முத்திரைத்தாளில் பெறப்பட்ட அசல் வாடகை ஒப்பந்தப்பத்திரம்.
தற்காலிக உரிமத்திற்கான கட்டணம் ரூ.600- ஐ SBI வங்கி மூலம் அரசு கணக்கில் செலுத்தியமைக்கான அசல் சலான்.
இருப்பிடத்திற்கான ஆதாரம் (ஆதார் அட்டை /வாக்காளர் அடையாள அட்டை /குடும்ப அட்டை)
தற்காலிக பட்டாசு சில்லறை விற்பனை உரிமம் கோரும் கட்டிடத்திற்கான சொத்து வரி ரசீது
தற்காலிக பட்டாசு சில்லறை விற்பனை உரிமம் கோரும் விண்ணப்பதாரர் புகைப்படம் – 2 ( passport size)
உரிமம் கோரி விண்ணப்பம் அளிப்போர் பட்டாசு கடை நடத்தும் இடத்தை பொது மக்களுக்கு எவ்வித சிரமமும் இல்லாமலும்¸ பாதுகாப்பான இடமாக தேர்வு செய்து ஆட்சேபனை இல்லாத இடத்திற்கு மட்டும் விண்ணப்பம் அளிக்க வேண்டும். ஏற்கனவே¸ கடந்த ஆண்டு உரிமம் பெற்ற நபர்கள் அதே இடத்தில் கடை வைக்க உரிமம் பெற விண்ணப்பம் அளித்தால் ஏற்கனவே¸ வழங்கப்பட்ட உரிமத்தையும் விண்ணப்பத்துடன் இணைத்து அனுப்ப வேண்டும்.
மேற்கூறிய வழிமுறைகளை கடைபிடித்து தற்காலிக பட்டாசு சில்லறை விற்பனை உரிமம் பெற விண்ணப்பதாரர்கள் 30.09.2021-க்குள் இ-சேவை மையங்கள் மூலமாக ஆன்லைனில் விண்ணப்பிக்க வழிவகை செய்யப்பட்டுள்ளது. மேற்குறிப்பிட்ட தேதிக்கு மேல் ஆன்லைனில் இ-சேவை மையங்கள் மூலமாகவும் மற்றும் அஞ்சல் / நேரடியாகவோ மேற்படி உரிமம் கோரும் விண்ணப்பங்கள் ஏற்றுக் கொள்ளப்பட மாட்டாது.
மேலும் நிரந்தர பட்டாசு சில்லறை விற்பனை உரிமம் கோருவோர் மற்றும் வருடாந்திர உரிமம் புதுப்பித்தலுக்கு இவ்வழி முறை பொருந்தாது.
இவ்வாறு மாவட்ட ஆட்சித்தலைவர் பா.முருகேஷ் தெரிவித்துள்ளார்.