திருவண்ணாமலை அருகே ஆடல்¸ பாடல் நிகழ்ச்சியை பார்த்து விட்டு வந்த ஓட்டல் மாஸ்டர் 6 பேர் கொண்ட கும்பலால் வெட்டி கொலை செய்யப்பட்டார்.
திருவண்ணாமலை அடுத்த புதுப்பாளையம் வீரானந்தல் கிராமத்தைச் சேர்ந்தவர் வெங்கடேசன்(வயது 24) ஓட்டலில் மாஸ்டராக பணிபுரிந்து வந்தார். இவருக்கும்¸ ஜி.என்.பாளையத்தைச் சேர்ந்த மதுசூதனனுக்கும் கடந்த 2018ம் ஆண்டு ஏற்பட்ட மோதலில் மதுசூதனனின் கையை வெங்கடேசன் வெட்டி துண்டித்து விட்டதாக சொல்லப்படுகிறது. இதனால் அவர்களிடையே விரோதம் இருந்து வந்தது. இதனால் வெங்கடேசன்¸ சொந்த ஊரில் இல்லாமல் வேலைக்கு வெளியூருக்கு சென்று விட்டார்.
சில தினங்களுக்கு முன்பு அவர் சொந்த ஊரான வீரானந்தலுக்கு வந்திருந்தார். நேற்று(17-9-2021) இரவு செ.நாச்சிப்பட்டு கிராமத்தில் கோயில் திருவிழாவையொட்டி நடைபெற்ற ஆடல்¸ பாடல் நிகழ்ச்சியை பார்த்து விட்டு வெங்கடேசன் வீடு திரும்பிக் கொண்டிருந்தார். முத்தனூர் சாலையில் சென்று கொண்டிருந்தார்.
உண்ணாமலைபாளையம் அருகே 6 பேர் கொண்ட கும்பல் அவரை மடக்கி கையில் வைத்திருந்த ஆயுதங்களால் சரமாறியாக வெட்டி சாய்த்து விட்டு ஓடி விட்டனர். இதில் வெங்கடேசன் அதே இடத்தில் ரத்தவெள்ளத்தில் பிணமானார்.
தகவல் கிடைத்ததும் புதுப்பாளையம் போலீசார் சம்பவ இடத்திற்கு சென்று பிணத்தை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக திருவண்ணாமலை அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். இன்ஸ்பெக்டர் சரவணன் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி புதுப்பாளையம் ஜி.என். பாளையம் பகுதியைச் சேர்ந்த மதுசூதனன்.(33)¸ சுரேஷ்(30)¸ வல்லரசு(26)¸ ஏழுமலை(24) உள்ளிட்ட 4 பேரை கைது செய்தார். தலைமறைவாக உள்ள வசந்த்¸ வினோத் ஆகிய 2 பேரை போலீசார் தேடி வருகின்றனர்.
கையை வெட்டியதால் ஏற்பட்ட முன்விரோதத்தில் பழிக்கு பழியாக மதுசூதனன்¸ தனது நண்பர்களுடன் சேர்ந்து இந்த கொலையை அரங்கேற்றியது போலீஸ் விசாரணையில் தெரியவந்துள்ளது. புதுப்பாளையம் பகுதியில் இச்சம்பவம் பதட்டத்தை ஏற்படுத்தி உள்ளது. போலீசார் அப்பகுதியில் அதிக அளவில் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டுள்ளனர்.