திருவண்ணாமலை திண்டிவனம் ரோட்டில் டான்காப் ஆலை செயல்பட்ட இடத்தில் புதிய பஸ் நிலையம் அமைக்கப்பட உள்ளதாக அமைச்சர் எ.வ.வேலு தெரிவித்தார்.
அதிமுக ஆட்சியில் திருவண்ணாமலை ஈசான்ய மைதானத்தில் புதிய பஸ் நிலையம் அமைக்க முடிவு செய்யப்பட்டு இதற்காக ரூ.30 கோடியே 15 லட்சம் மதிப்பீட்டில் திட்ட அறிக்கை தயார் செய்யப்பட்டது. இந்நிலையில் ஆட்சி மாற்றத்திற்கு பிறகு புதிய பஸ் நிலையம் நகரை விட்டு வெளியில் அதாவது ரிங் ரோட்டையொட்டி அமைக்கப்படும் என அமைச்சர் எ.வ.வேலு தெரிவித்திருந்தார்.
இதற்காக அதிகாரிகள் அரசு மருத்துவக்கல்லூரி பகுதி¸ திண்டிவனம் ரோடு டான்காப் ஆலை¸ கீழ்அணைக்கரை¸ திருக்கோயிலூர் ரோடு ஆகிய பகுதிகளில் உள்ள இடங்களை ஆய்வு செய்து அறிக்கையை அமைச்சரிடம் அளித்தனர். இதில் இறுதியாக புதிய பஸ் நிலையம் அமைக்க திண்டிவனம் ரோட்டில் உள்ள டான்காப் ஆலை இடம் தேர்வு செய்யப்பட்டிருக்கிறது.
இந்த இடத்தை பொதுப்பணித்துறை அமைச்சர் எ.வ.வேலு இன்று மாலை நேரில் பார்வையிட்டு அதிகாரிகளுடன் ஆலோசனை நடத்தினார். பிறகு செய்தியாளர்களிடம் அவர் கூறியதாவது¸
திருவண்ணாமலை தலைநகர் என்பது ஆன்மிக பூமி. இங்கு பல்வேறு¸ மாவட்டங்களிலிருந்தும்¸ பல்வேறு மாநிலங்களிலிருந்தும்¸ ஏன்¸ பல்வேறு நாடுகளிலிருந்தும் இருந்தும் ஆன்மிக பெருமக்கள் வருகின்ற காரணத்தினாலும்¸ திருவண்ணாமலைக்கு வருபவர்கள் எண்ணிக்கை நாளுக்கு நாள் கூடிக்கொண்டே இருக்கின்றது. 35 ஆண்டுகளுக்கு முன்னால் உருவாக்கப்பட்ட மத்திய பேருந்து நிலையம் தற்போது போக்குவரத்திற்கு உகந்ததாக இல்லை.
அதனால் திருவண்ணாமலைக்கு புதிய பேருந்து நிலையம் வேண்டும் என முதல்வரிடம் கோரிக்கை வைத்தேன் அவர் திருவண்ணாமலையில் இடத்தை தேர்வு செய்ய சொன்னார்¸ ஆனால் எங்கு இடத்தைத் தேடிப் பார்த்தாலும் போதுமான இடவசதி இல்லை இந்த இடம் விவசாயத்துறைக்கு சொந்தமானது¸ சுமார் 6 ஏக்கரில் இங்கு 25 ஆண்டுகளுக்கு முன்பாக எண்ணெய் வித்து தொழிற்சாலை நடைபெற்று இருந்தது¸ ஆனால் அது நஷ்டத்தில் இயங்கியது. அதன் காரணமாக அது மூடப்பட்டது.
எனவே இந்த இடத்தை பற்றி நான் முதல்வரிடம் கூறினேன் அவர் சம்பந்தப்பட்ட வேளாண்மைத் துறை அமைச்சர் எம்.ஆர்.கே. பன்னீர்செல்வம் நகர்ப்புற துறை அமைச்சர் நேரு மற்றும் என்னையும் சேர்த்து மூவரையும் அவருடைய அறைக்கு அழைத்து இந்த இடத்தை திருவண்ணாமலை பேருந்து நிலையத்திற்கு ஒதுக்கலாம் என முடிவு செய்யப்பட்டு அந்த அடிப்படையில் இந்த இடத்தை தேர்வு செய்திருக்கிறோம். இந்த இடத்தை ஒட்டி வருவாய் துறைக்கு சொந்தமான 5 ஏக்கர் உள்ளது எனவே ஒட்டு மொத்தமாக 10 ஏக்கர் அளவில் திருவண்ணாமலை புதிய பேருந்து நிலையம் இங்கு அமைக்கப்படும்.
எனவே மாவட்ட ஆட்சியரை அழைத்து வந்து இந்த இடத்தில் என்னென்ன பிரச்சனைகள் இருக்கிறது என்பதை தெரிந்து கொள்வதற்காக ஆய்வு செய்துள்ளோம். இந்த ஆண்டு இறுதிக்குள் புதிய பேருந்து நிலையம் கொண்டு வருவதற்கான முழு முயற்சிகள் அரசு எடுத்துக் கொண்டிருக்கிறது. தற்போது இந்த தொழிற்சாலையில் பழுதாகி உள்ள இரும்பு இயந்திரங்களை ஏலத்தில் விட்டு அந்த துறை அமைச்சர் மூலமாக பேசி முடிவெடுத்து அதற்கு பிறகு நகராட்சி துறை அமைச்சர் மூலமாக பேசி திட்டமிடல் செய்யப்பட்டு நிதி ஒதுக்கீடு செய்யப்படும்.
திருவண்ணாமலைக்கு ஆன்மீக அன்பர்கள் வந்து போவதை கருத்தில் கொண்டு புதியதாக அமைய உள்ள பஸ் நிலையத்தில் நகராட்சிக்கு வருமானம் வரும் வகையில் தங்கும் விடுதி கட்ட வேண்டும் என்பதை முதல்வரின் கவனத்திற்கு கொண்டு செல்ல உள்ளேன்.
இவ்வாறு அவர் கூறினார்.
இந்த ஆய்வின் போது¸ மாவட்ட ஆட்சித் தலைவர் பா. முருகேஷ்¸ திருவண்ணாமலை பாராளுமன்ற உறுப்பினர் சி. என்.அண்ணாதுரை¸ சட்டன்ற உறுப்பினர் மு.பெ.கிரி¸ முன்னாள் நகரமன்றத் தலைவர் இரா.ஸ்ரீதரன்¸ மாவட்ட வருவாய் அலுவலர் முத்துக்குமரசாமி¸ கோட்டாட்சியர் வெற்றிவேல்¸ நகராட்சி ஆணையாளர் சந்திரா¸ கண்காணிப்பு பொறியாளர் பழனிவேல்¸ கோட்டப் பொறியாளர் முரளி மற்றும் அரசுத்துறை அலுவலர்கள் உடன் இருந்தனர்.