திருவண்ணாமலை அண்ணாமலையார் கோயிலில் தேய்பிறை அஷ்டமியை யொட்டி காலபைரவருக்கு சிறப்பு அபிஷேகம் நடைபெற்றது.
சிவபெருமானின் 64 திருமேனிகளுள் ஒருவரான பைரவர் சனி பகவானின் குருவாகவும்¸ 12 ராசிகள்¸ 8 திசைகள்¸ பஞ்ச பூதங்கள்¸ நவகிரகங்கள் மற்றும் காலத்தையும் கட்டுப்படுத்துபவராக விளங்குபவர். காக்கும் கடவுளான காலபைரவர் சன்னதி பஞ்சபூத ஸ்தலங்களில் அக்னி ஸ்தலமாக விளங்கக்கூடிய திருவண்ணாமலை அண்ணாமலையார் கோயிலில் உள்ள பிரம்ம தீர்த்தக் கரையில் அமைந்திருக்கிறது.
அஷ்டமி திதியில் பைரவருக்கு பூஜைகள் நடைபெற்றாலும்¸ செவ்வாய்கிழமை வருகிற அஷ்டமி சிறப்பு வாய்ந்ததாகும். இன்று(28-09-2021) செவ்வாய்கிழமை தேய்பிறை அஷ்டமியை யொட்டி அண்ணாமலையார் கோயிலில் உள்ள காலபைரவருக்கு சிறப்பு அபிஷேகம் விமர்சையாக நடைபெற்றது.
காலபைரவருக்கு பச்சரிசி மாவு¸ அபிஷேக பொடி¸ பால்¸ சந்தனம்¸ பஞ்சாமிர்தம்¸ எலுமிச்சை சாறு¸ சந்தனம்¸ தேன்¸ விபூதி¸ இளநீர் உள்ளிட்டவைகளை கொண்டு மகா அபிஷேகம் நடைபெற்றது. இதனைத் தொடர்ந்து காலபைரவருக்கு வடைமாலை மற்றும் முந்திரி மாலை அணிவிக்கப்பட்டது. பஞ்சகலை என்று அழைக்கக்கூடிய மகா தீபாராதனையை இளவரசு பட்டம் ரமேஷ் சிவாச்சாரியார் மற்றும் ராமமூர்த்தி சிவாச்சாரியார் காட்டினார்கள். அப்போது வேத மந்திரங்கள் முழங்கப்பட்டது.
தேய்பிறை அஷ்டமி அபிஷேகத்தின் போது கால பைரவரின் பாதத்தில் வைத்த பச்சையை கட்டினால் கண்திருஷ்டி விலகும்¸ எதிரிகளால் ஏற்படும் தீங்கிலிருந்து பாதுகாக்கும்¸ பைரவர் ரட்சை அணியும் மக்களுக்கும் செல்வம் கொழிக்கும் என்பது ஐதீகம். காலபைரவருக்கு பக்தர்கள் பூசணிக்காயில் இலுப்பை எண்ணெய் ஊற்றி விளக்கேற்றியும், தேங்காய் மூடியில் விளக்கேற்றியும் தங்களுடைய நேர்த்திக் கடனை செலுத்தினார்கள்.
தேய்பிறை அஷ்டமி வழிபாடு மரண பயத்தை போக்கும்¸ ஆபத்திலிருந்து காக்கும்¸ தீராத நோய்¸ கடன் தீர்க்கும் என்பதால் திரளான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர். பக்தர்களுக்கு பைரவர் ரட்சை பிரசாதமாக வழங்கப்பட்டது. இந்த அபிஷேகத்தில் பிரபல திரைப்பட இயக்குநரும் நடிகருமான மைன் கோபி தனது குடும்பத்தினருடன் கலந்துகொண்டு சாமி தரிசனம் செய்தார்.