பள்ளியை திறந்து விட்டீர்கள்.விநாயகர் சதுர்த்தியை ஏன் தடை செய்கிறீர்கள் என காரணம் காட்டுவது தவறானதாகும் என திருவண்ணாமலை கலெக்டர் தெரிவித்தார்.
விநாயகர் சதுர்த்தியின் போது பின்பற்றப்பட வேண்டிய நடைமுறைகளை இந்து அமைப்புகள் ஏற்றுக் கொண்டதாகவும் அவர் கூறியிருக்கிறார்.
கொரோனா நோய் பரவல் சூழ்நிலையை கருத்தில் கொண்டு¸ சமய விழாக்களை முன்னிட்டு மதசார்பான ஊர்வலங்கள்¸ திருவிழாக்கள் நடத்த தடை உள்ளது. பொது இடங்களில் உறியடி உள்ளிட விளையாட்டுக்களை நடத்துவதற்கும் தடை விதிக்கப்படுகிறது. விநாயகர் சதுர்த்தி விழா தொடர்பாக பொது இடங்களில் சிலைகளை நிறுவுவது அல்லது பொது இடங்களில் விழா கொண்டாடுவதற்கு அனுமதி மறுக்கப்படுகிறது. அதுபோன்று சிலைளை ஊர்வலமாக எடுத்துச் செல்வதற்கும்¸ நீர்நிலைகளில் கரைப்பதற்கும் அனுமதி இல்லாத நிலையில்¸ இச்சமய விழாக்களை பொது மக்கள் தங்களது இல்லங்களிலேயே கொண்டாடுமாறு கேட்டுக் கொள்ளப்பட்டுள்ளது.
தனி நபர்கள் தங்களது இல்லங்களில் விநாயகர் சிலைகளை வைத்து வழிபடவும்¸ தனிநபர்களாக சென்று அருகிலுள்ள நீர்நிலைகளில் சிலைகளை கரைப்பதற்கும் அனுமதிக்கப்படுகிறது. மேற்குறிப்பிட்ட அனுமதி தனிநபர்களுக்கு மட்டும் பொருந்தும். அமைப்புகள் இச்செயல்பாடுகளில் ஈடுபடுவது முழுவதுமாக தடைசெய்யப்படுகிறது. தனிநபர்கள்¸ தங்களது இல்லங்களில் வைத்து வழிபாடு செய்யப்பட்ட சிலைகளை ஆலயங்களின் வெளிப்புறத்திலோ அல்லது சுற்றுப்புறத்திலோ வைத்துச் செல்வதற்கு அனுமதி அளிக்கப்படுகிறது. இச்சிலைகளை பின்னர் முறையாக அகற்றுவதற்கு இந்து சமய அறிலையத்துறையால் தக்க நடவடிக்கை மேற்கொள்ளப்படும் என அரசு அறிவித்துள்ளது.
பொது இடங்களில் விநாயகர் சிலை வைத்து வழிபட அரசு தடை விதித்திருப்பதற்கு இந்து அமைப்புகள் எதிர்ப்பு தெரிவித்துள்ளன. தடையை மீறி விநாயகர் சதுர்த்தி விழா கொண்டாடப்படும் என இந்து மக்கள் கட்சித் தலைவர் அர்ஜூன் சம்பத் தெரிவித்திருந்தார்.
இந்நிலையில் திருவண்ணாமலை மாவட்ட ஆட்சியர் அலுவலக கூட்டரங்கில்¸ 10.09.2021ந் தேதி விநாயகர் சதுர்த்தி பண்டிகையின் போது பின்பற்றப்பட வேண்டிய நடைமுறைகள் குறித்த ஆய்வு கூட்டம் மாவட்ட ஆட்சித்தலைவர் பா. முருகேஷ் தலைமையில் இன்று (03.09.2021) காலை நடைபெற்றது.
இதில் ஜீவானந்தம்(பா.ஜ.க மாவட்டத் தலைவர்) பேசியதாவது¸
பஸ்களில் கூட்டத்தை கட்டுப்படுத்த முடியவில்லை. டவுன் பஸ்களில் 100 பேருக்கு மேல் செல்கிறார்கள். இதையெல்லாம் ஏற்றுக் கொள்கிற போது கட்டுப்பாடோடு¸ சமூக இடைவெளியோடு நிகழ்ச்சியை நடத்திட தடை ஏன்?
ம.சதீஷ்குமார்(பா.ஜ.க மாவட்ட பொதுச் செயலாளர்) –
சபரிமலையில் தினந்தோறும் தடுப்பூசி போட்டுக் கொண்டுள்ள 15 ஆயிரம் பக்தர்களை முக கவசத்தோடும்¸ சமூக இடைவெளியோடும் அனுமதிக்கிறார்கள். அதே விதிமுறையை கடைபிடித்து குறைந்த பட்ச சிலைகளுக்கு மட்டும் அனுமதி தந்து விழாவை நடத்திட அனுமதிக்க வேண்டும்.
இதே போன்று இந்து முன்னணி உள்பட பல்வேறு இந்து அமைப்புகளின் நிர்வாகிகளும் விநாயகர் சதுர்த்தி விழாவை நடத்திட அனுமதிக்க வேண்டும் என கோரிக்கை வைத்தனர். . திருமண மண்டபங்களில் ஆயிரம் பேருக்கு மேல் கூட்டம் கூடுகின்றனர். இதை கண்காணிக்க தவறி விடுகிறீர்கள். கொரோனா ஊசி போட்டவர்கள் விநாயகர் சதுர்த்தி விழாவை கொண்டாடிட அனுமதிக்க வேண்டும் என கூட்டத்தில் பேசியவர்கள் தெரிவித்தனர். விநாயகர் சதுர்த்தி விழாவை கொண்டாடிட அரசு தடை விதித்திருப்பதால் சிலை செய்பவர்களின் வாழ்வாதாரம் வெகுவாக பாதிக்கப்பட்டுள்ளது. தற்கொலை செய்து கொள்ளும் நிலைக்கு தள்ளப்பட்டிருக்கிறோம் என சிலை தயாரிப்பாளர்கள் சங்கத்தின் சார்பில் தெரிவிக்கப்பட்டது.
அதன் பிறகு மாவட்ட ஆட்சித் தலைவர் பா. முருகேஷ் பேசியதாவது¸
காலம்¸ காலமாக கொண்டாடி வரும் விநாயகர் சதுர்த்தியை கொண்டாடுவதற்கு தடை செய்ய அரசுக்கு என்ன நோக்கம் இருக்க போகிறது?. அரசுக்கு ஒரு பொறுப்பு உள்ளது. ஒவ்வொரு நாளும் கொரோனாவை எப்படி கட்டுப்படுத்துவது என நானும்¸ அதிகாரிகளும் ஆலோசித்து வருகிறோம். எந்த நிகழ்ச்சிக்கும்¸ பொது ஊர்வத்திற்கு அனுமதி அளிக்கப்படவில்லை. பக்ரீத்தாக இருந்தாலும்¸ மொகரமாக இருந்தாலும் அனுமதி அளிக்கப்படவில்லை.
உங்களுடைய ஒத்துழைப்பினால் கொரோனா கட்டுப்படுத்தப்பட்டுள்ளது. 1500 நபர்கள் பாதிக்கப்பட்டு வந்தது இன்றைக்கு 32 ஆக குறைந்திருக்கிறது. ஆனால் திடீரென 48ஆக உயருகிறது. இதனால் ஒவ்வொரு நாளும் தூக்கமே வருவதில்லை. ஏதோ ஒரு இடத்தில் பரவுகிறது. இதை கட்டுப்படுத்திட ஆலோசிக்கிறோம். அத்தியாவசியமாக மக்களுக்கு என்ன தேவைப்படுகிறது?¸ விவசாயத்திற்கு என்ன தேவை? என ஆலோசனை நடத்துகிறோம்.
இன்றைக்கு பள்ளிகள் திறக்கப்பட்டுள்ளது. பள்ளிகள் எதற்கு திறக்கப்பட்டுள்ளது என்பது உங்களுக்கே தெரியும். ஒன்றரை வருடமாக பள்ளியில் படிக்க முடியவில்லை. நிறைய பேருக்கு ஆன்லைனில் வசதியுமில்லை. வீட்டிற்கும் சென்று பாடம் நடத்த முடியவில்லை. இந்த எண்ணத்தில்தான் அரசாங்கம் பள்ளிகளை திறந்துள்ளது. ஆன்லைனில் பாடங்களை எந்த அளவிற்கு உட்கார்ந்து கவனிக்கிறார்கள் என்பது உங்களுக்கே தெரியும்.
பள்ளி இல்லாததால் பசங்களை வேலைக்கு அனுப்புகிறார்கள். இப்படி வேலைக்கு அனுப்பிய 6 பேரை கைது செய்திருக்கிறோம். இவ்வளவு தூரம் நாங்கள் கஷ்டப்பட்டு குழந்தைகளை பாதுகாக்கிறோம்.பள்ளி திறந்ததை நீங்கள்(இந்து அமைப்புகள்) ஒரு காரணமாக காட்டி விடாதீர்கள். பள்ளியை திறந்து விட்டீர்கள். இதை(விநாயகர் சதுர்த்தி) ஏன் தடை செய்கிறீர்கள் என காரணம் காட்டுவது தவறானதாகும்.
உங்களது கோரிக்கைகளை அரசாங்கத்திடம் சேர்க்க வேண்டியது எனது கடமையாகும். அரசாங்க முடிவுகளுக்கு கட்டுப்படுவது என்பது அனைவரது கடமையாகும். கட்டுப்பட மாட்டோம் என சொல்வது தவறு. உங்கள் மனதில் இருப்பதை உணர்ச்சிகரமாக பேசியிருக்கிறீர்கள். தனிப்பட்ட முறையில் வந்து நீங்கள் என்னிடம் இப்படி பேசியிருந்தால் கண்டிப்பாக அதற்கு தகுந்த மாதிரி நடவடிக்கை எடுத்திருப்பேன்.
இவ்வாறு அவர் பேசினார்.
கூட்டம் முடிந்ததும் மாவட்ட ஆட்சித் தலைவர் முருகேஷ்¸ செய்தியாளர்களிடம் கூறியதாவது¸
விநாயகர் சதுர்த்தி விழாவின் போது பின்பற்றப்பட வேண்டிய நடைமுறைகள் குறித்த இந்து அமைப்பினர் மற்றும் பல்வேறு அமைப்பினர்களுக்கும் தெரிவிக்கப்பட்டுள்ளது. அவர்கள் பல கோரிக்கைகளை வைத்துள்ளனர். அரசு எங்களை சில கட்டுப்பாடுகளுடன் ஊர்வலத்திற்கு அனுமதிக்க வேண்டும்¸ சிலைகளை பொது இடங்களில் வைத்து வழிபடுதற்கு அனுமதி அளித்திட வேண்டும்¸ என சொன்னார்கள். ஆனால் இதையெல்லாம் கருத்தில் கொண்டுதான் அரசு 30ந் தேதி கட்டுப்பாடுகளை வெளியிட்டுள்ளது. இதை அவர்களுக்கு தெளிவாக புரிய வைத்தோம். அனைத்து அமைப்பினர்களும் தெரிவிக்கப்பட்டுள்ள நடைமுறையினை ஏற்றுக்கொண்டனர். மனதில் உள்ள கோரிக்கைளை வெளிப்படையாக சொன்னார்கள். அவற்றை மாவட்ட நிர்வாகம் சார்பாக அரசுக்கு தெரிவிப்போம். அரசு உத்தரவை மாவட்ட நிர்வாகம் செயல்படுத்தும். மாவட்ட மக்கள் அரசு சொன்ன விதிமுறைகளை பின்பற்றி இந்த ஆண்டு விநாயகர் சதுர்த்தியை கொண்டாட கேட்டுக் கொள்கிறேன். அரசு விதமுறைகளை மீறினால் சட்டப்படி நடவடிக்கை எடுக்கப்படும்.
இவ்வாறு அவர் கூறினார்.
மாவட்ட காவல் கண்காணிப்பாளர் பவன் குமார் ரெட்டி¸ மாவட்ட வருவாய் அலுவலர் இரா. முத்துகுமரசாமி¸ உதவி ஆட்சியர் (பயிற்சி) கட்டா ரவி தேஜா மற்றும் துறை உயர் அலுவலர்கள் இக்கூட்டத்தில் கலந்துகொண்டனர்.